இந்திய - சீன எல்லை பதற்றம்: சீனாவுடன் இந்தியா நட்புடன் இருக்க முயன்றும் நடக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
சில நாட்களுக்கு முன்பாக இந்தியா - சீனா இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த மோதலை அடுத்து, அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டது. இப்போது பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்திய - சீனப் பிரச்சனையின் பின்னணி, சீனாவின் நோக்கம், இந்தியாவின் பார்வையில் இதற்கான தீர்வு ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத்தின் முன்னாள் கமாண்டர் ஆர்.எஸ். வாசன். அவர் கூறியதிலிருந்து:
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சனை இப்போது துவங்கியதில்லை. தன்னுடைய எல்லை எது என்பது குறித்து நீண்ட காலமாகவே சீனா பிரச்சனை செய்து வருகிறது. 1962ல் இதே போன்ற பிரச்சனையில் அக்சாய் சின்னை எடுத்துக்கொண்டார்கள். இந்தியாவின் சில பகுதிகளுக்குள் உள்ளே புகுந்தார்கள். பிறகு, அவர்களாகவே விலகிக்கொண்டார்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையாகக் கருதப்படும் மக்மோகன் கோட்டை சீனா ஒப்புக்கொள்வதில்லை. இது காலனியாதிக்கவாதிகள் போட்ட கோடு என்கிறார்கள்.
இதில் முரண்பாடு என்னவென்றால், மியான்மருடனான மக்மோகன் கோட்டை எல்லையாக ஒப்புக்கொள்கிறார்கள். மியான்மருடனான எல்லை விவகாரத்தில் மக்மோகன் கோட்டை ஏற்க முடியும் என்றால், இந்தியாவுடன் ஏன் ஏற்க முடியாது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
சீனா பல முறை எல்லை மீறியிருக்கிறது. 1962க்குப் பிறகு 1967ல் உள்ளே நுழைந்திருக்கிறது. 1980களில் ஜெனரல் சுந்தர் ஜி ராணுவத் தளபதியாக இருந்தபோது, ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தார். அப்போது நாதுல்லாவில் இதேபோல நுழைய முயன்றது. இந்தியா பதிலடி கொடுத்ததில் சீனாவுக்கு பெரும் இழப்பு நேர்ந்தது.
இப்போது ஏன் சீனா இம்மாதிரி நடந்துகொள்கிறது?
தன்னைச் சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் கொரோனா நோயை எதிர்கொண்டிருப்பதால் அவை பலவீனமாக இருப்பதாக சீனா கருதுகிறது. தென் சீனக் கடலிலும் இதுபோல மிகத் தீவிரமான ஆக்கிரமிப்பு உணர்வுடன் சீனா செயல்படுகிறது. அங்குள்ள செயற்கைத் தீவுகள் தன்னுடையது என்கிறது. வடகிழக்கில் Nine-Dash கோடுகளுக்குட்பட்ட பகுதி தன்னுடையது என்கிறது. ஆனால், இதனை வியட்னாம், ஃபிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகள் ஏற்கவில்லை. இதனால், அங்கும் தொடர்ச்சியான மோதல்கள் இருக்கின்றன. கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானுடன் சென்காகு தீவுகள் தொடர்பாக சீனாவுக்கு பிரச்சனை இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
தன்னுடைய நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியிருக்கும் நிலையில், அண்டை நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன; அதனால் பொருளாதார ரீதியாகவும் பலவீனமாக இருக்கின்றன. இந்த நேரத்தில் ஆக்கிரமித்தால் அவர்களைச் சரணடைய வைக்கலாம் என சீனா கருதுகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையில் முக்கியமான சிக்கல் என்னவென்றால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை இதுதான் என சீனா சொல்ல மறுப்பதுதான். மக்மோகன் கோட்டை சீனா ஏற்கவில்லை. அப்படியானால், வேறு எது எல்லை என சீனா சொல்ல வேண்டும். அதைச் சொல்ல மறுக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, தன்னுடைய எல்லைகள் எது எனச் சொல்லியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பைச் செய்து வருகிறது. சில மீட்டர் தூரம் முன்னேறுவது, எதிரியைத் தூண்டுவது, சண்டையிடுவது என தொடர்ச்சியாக பிரச்சனை செய்துவருகிறது.
ஆனால், இந்த முறை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் குவிக்கப்பட்ட ராணுவத்தின் அளவு மிகவும் பெரியது. அதேபோல, இந்திய வீரர்கள் மீதான தாக்குதலும் மிகக் கொடூரமாக இருந்தது. இத்தனைக்கும் ஜூன் ஆறாம் தேதியன்று இரு தரப்பும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுமே தங்கள் படைகளை ஏப்ரல் மாதம் இருந்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இந்த நிலையில், அங்கு சென்ற பிஹார் 16வது ரெஜிமெண்டின் கமாண்டிங் அதிகாரி, ஜூன் 6ஆம் தேதி ஒப்பந்தப்படி படைகளை விலக்கிக்கொள்வதற்குப் பதிலாக புதிதாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். இதுதான் மோதலுக்கு இட்டுச் சென்றது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியபடி, இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு தாக்குதல். கற்கள், முள்வேலி கம்பிகள் சுற்றப்பட்ட இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை வைத்து இந்திய வீரர்களைத் தாக்கினார்கள். நவீன வரலாற்றில் இதெல்லாம் கேள்விப்படாத ஒன்று. ஒரு பொறுப்புள்ள நாடு என்ற நிலையிலிருந்து சீனா விலகிவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. 20 பேரை இந்தியா இழந்திருக்கிறது. ஆனால், சீனா பக்கமும் கடுமையான சேதம் விளைந்திருக்கிறது.
இப்போது இரு தரப்பிலும் ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. மோதலைக் குறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதிலிருந்து இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் பாடம் என்னவென்றால், சீனாவை நம்பக்கூடாது என்பதுதான். 'சீனாதான் இந்தியாவின் முதல் எதிரி" என 30-40 வருடங்களுக்கு முன்னால் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் தெரிவித்தார். அதில் இப்போதும் மாற்றமில்லை.

இந்தியா தன்னுடைய பகுதியில் கட்டிவரும் பதுங்கு குழிகள், சாலைகள் ஆகியவற்றை சீனாவால் பொறுக்க முடியவில்லை. ஆனால், இதெல்லாம் பல வருடங்களாக நடக்கின்றன. சீனாவும் அவர்களுடைய பக்கத்தில் பதுங்கு குழிகளையும் சாலைகளையும் அமைக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் இந்தியா கேட்டதில்லை. ஆனால், அதையே இந்தியா செய்யும்போது சீனா கேள்வி எழுப்புகிறது. ஏனென்றால், இந்தச் சாலைகளின் மூலம் மேலும் புதிய இணைப்புகள் கிடைக்கின்றன. இந்தியாவுக்கு வியூக வலு கூடுகிறது. இதனால்தான் இப்போது இதனை சீனா எதிர்க்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மற்றொரு பிரச்சனை, பாஞ்சாங் ஏரி. இதன் மூன்றில் இரண்டு பகுதியை சீனா கட்டுப்படுத்துகிறது. மூன்றில் ஒரு பகுதியை இந்தியா கட்டுப்படுத்துகிறது. அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக ரோந்து செல்வது, வரைபடங்களைத் திருத்துவது என தொடர்ந்து தனது நிலையை உறுதிப்படுத்திவருகிறது சீனா. பல ஆண்டுகளாக சீனா இதைத்தான் செய்துவருகிறது. மூன்றடிகள் முன்னேறுவது, பேச்சு வார்த்தைக்குப் பிறகு இரண்டடி பின்னே செல்வது, அதன் மூலம் ஒரு அடியைக் கைப்பற்றுவது என்பதுதான் அதன் வியூகமாக இருக்கிறது.
இலங்கை, மியான்மர், பங்களாதேஷ், ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் தன் வசப்படுத்துகிறது. இந்தியா ஷி ஜிங்பிங்கின் கனவுத் திட்டமான பிஆர்ஐக்கு எதிராக இருக்கிறது. இந்தியாவின் ஆதரவு இந்தத் திட்டத்திற்கு இல்லை என்பது சீனாவுக்கு ஆத்திரமூட்டுகிறது. இது தவிர, கோவிட் - 19 விவகாரத்தில் எல்லா நாடுகளும் சீனாவைக் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலையில், தன்னை ஆதரிக்காத ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குப் பாடம் கற்பிக்க நினைக்கிறது சீனா.
தற்போதைய உலகச் சூழலில் உலகளாவிய வர்த்தகத்தின் மையப்புள்ளியாக, குறிப்பாக பொருட்களைத் தயாரித்துவழங்குவதில் முதலிடத்தில் இருக்கிறது. பெருமளவில் அதனிடம் பணம் இருக்கிறது. அதை வைத்து நாடுகளை தனக்கு சார்பாக வளைக்க நினைக்கிறது. ஆனால், அதெல்லாம் இனி நடக்காது. எல்லா நாடுகளுமே கொரோனா விவகாரத்தில் சீனாவை விமர்சிக்கின்றன.
கொரானா பரவ ஆரம்பித்ததும் வூஹானிலிருந்து பிற மாகாணங்களுக்கு போக்குவரத்தைத் தடைசெய்தது சீனா. ஆனால், வெளி நாட்டிற்கு விமானங்கள் செல்வதைத் தடைசெய்யவில்லை. இதனால்தான் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக சீனா உலகிற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
சீனாவில் இருப்பது ஒரு வித்தியாசமான அரசு. ஷி ஜின்பிங்தான் வாழ்நாள் தலைவர். ஷி ஜிங்பிங் உலகளாவிய சீனக் கனவை நிறைவேற்ற நினைக்கிறார். அந்தப் பாதையில் யார் குறுக்கில்வந்தாலும் சகிக்க மாட்டார். இந்தியா மீதான தாக்குதல் அந்தத் திசையில் நடக்கும் ஒரு நிகழ்வுதான்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் பதிலடி இதுவரை சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், சீனாவுடனான உறவு முன்பைப்போல இருக்காது. பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறது. 4 ஜி சீனாவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்காத வகையில் விதிகளை மாற்றும்படி பிஎஸ்என்எல்லுக்கு சொல்லப்பட்டுள்ளது. 5 ஜியைப் பொறுத்தவரையில் பிரிட்டனுடன் இணைந்து செயல்படவிருக்கிறது இந்தியா. ஆகவே இதிலும் சீனாவுக்கு எந்த ஒப்பந்தமும் கிடைக்காது. பல தனியார் நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து சீனாவுடனான ஒப்பந்தங்களை ரத்துசெய்து வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
சூரத்திற்கும் மற்றொரு நகரத்திற்கும் இடையில் ரயில் பாதை போடப்படவிருக்கிறது. இதற்கான நிதியுதவியை ஏஐஐபி தருகிறது. அதில் சீனாவின் பங்கு இருக்கிறது. முடிந்தால் இந்தியா ஏஐஐபியுடனான கடனை மறுக்க வேண்டும்.
அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் நம்பர் ஒன் நாடாக நினைக்கிறது சீனா. ஆனால், ஜூன் 6ஆம் தேதி ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைப் பார்க்க வந்த இந்திய வீரர்களை அவர்கள் தாக்கியவிதம், அந்நாடு கற்காலத்திற்கே சென்றுவிட்டது என்பதைக் காட்டுகிறது. இனி சீனா உலகில் தனக்கான இடத்தைத் தக்கவைப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது. இதனால், உலகில் பல புதிய கூட்டணிகள் உருவாகும். சீனா ஒரு நம்ப முடியாது நாடு என தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையில் சீனா இந்தியாவின் அண்டை நாடுகளிலும் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது. நேபாளப் பிரதமர் ஓளி தன்னிச்சையாக இந்தியாவின் பகுதிகளை தனது நாட்டின் பகுதியாகக் காட்டி வரைபடத்தை மாற்றினார். சீனத் தூதரின் அழுத்தத்தினாலேயே இதை அவர் செய்தார்.
சீனாவுடன் இந்தியா நட்புடன் இருக்க முயன்றும் நடக்காதது ஏன்?
அமெரிக்கா உள்பட பல நாடுகள் தற்போது இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றன. பல நாடுகள் தனிப்பட்ட முறையில் ஆதரவு தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே உலக அரங்கில் இந்தியாவுக்கு ஆதரவு இருக்கிறது.
மாவோ காலத்திலிருந்தே திபெத்தை தனது உள்ளங்கையாகவும் நேபாளம், சிக்கிம், பூட்டான், அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகியவற்றை அதன் விரல்களாகவும் சீனா கருதிவந்திருக்கிறது. ஆனால், நேபளாத்தைத் தவிர பிற பகுதிகள் அனைத்தும் நம்மிடம்தான் இருக்கின்றன. அதனை சீனாவால் ஏற்க முடியவில்லை.
சீனாவுடன் நட்பாக இருக்க இந்தியா எவ்வளவோ முயற்சி செய்தது. வூஹான், மாமல்லபுரம் சந்திப்புகள் அதைத்தான் காட்டுகின்றன. இந்த சந்திப்புகளின் மூலம் இந்தியர்களின் மனநிலையை சீனா புரிந்துகொண்டது. ஆனால், அதனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. ஏற்றுமதி - இறக்குமதியில் உள்ள வித்தியாசம் தீர்க்கப்படவில்லை.
தவிர, இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நிலையும் மாறவில்லை. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம், அணுசக்தி சப்ளையர் குழுவில் இடம் என எதுவும் நடக்கவில்லை. இப்போதைய சூழலை வைத்துப்பார்க்கும்போது இந்த இரண்டு சந்திப்புகளுமே தோல்விகரமான சந்திப்புகள்தான். பயங்கரவாதி அஸர் மசூத் விவகாரத்திலும் சீனா பாகிஸ்தானை தொடர்ந்து ஆதரிக்கிறது.
ஷி ஜிங்பிங் முதலில் குஜராத்திற்கு வந்தபோது 20 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் எனச் சொன்னார். ஆனால், அதில் சிறு பகுதிகூட முதலீடாக அங்கே வரவில்லை. இந்தியாவின் நலன்கள் குறித்து சீனா தொடர்ந்து கவலைப்படாத நிலையில், அந்நாட்டுடன் தொடர்ந்து உறவாட நினைப்பது சரியாக இருக்காது.
பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் பகுதியில் சீனா தொடர்ந்து முதலீடு செய்கிறது. அதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை.

பட மூலாதாரம், Getty Images
இப்போது சீனா பின்வாங்கியிருப்பதால் எல்லாம் சரியாகிவிட்டது என நினைக்கக்கூடாது. பெரும் படையைத் திரட்டிக்கொண்டு மீண்டும் வருவார்கள். இந்தியாவின் பலவீனமான தருணத்தில் கண்டிப்பாக தாக்குவார்கள். இந்தியா இனி எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது உலகில் உருவாகிவரும் உற்பத்தி வலயத்தின் ஒரு பகுதியாக இந்தியாவும் இருக்க வேண்டும். இதன் மூலம் சீனாவைச் சார்ந்திருப்பதிலிருந்து விலக முடியும். அது எளிதாக இருக்காவிட்டாலும் அந்தத் திசையில் முயல வேண்டும்.
இந்தத் தருணத்தில் யுத்தம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டா?
யாருமே யுத்தத்தை விரும்புவதில்லை. அதுவும் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுமே கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்போது இது விரும்பத்தகுந்ததல்ல. ஒருவேளை, அந்தப் பகுதியில் மட்டும் சண்டை நடக்கலாம். கார்கில் யுத்ததைப் போல. ஆனால் இந்தியா எப்போதும் ஒரு முழு யுத்தத்திற்கு தயாராக இருக்க வேண்டும். அதே நேரத்தில், ராஜதந்திர ரீதியில் பிற நட்பு நாடுகளையும் ஒன்று திரட்ட வேண்டும்.
சீனாவின் கோபத்திற்கு இந்தியா அமெரிக்காவுடன் நெருங்குவது முக்கியக் காரணமா?
அதுவும் ஒரு காரணமே தவிர, அதுமட்டுமே காரணமல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இந்தியா அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. அமெரிக்கா இந்தியாவுக்கு பெருமளவில் ஆயுதங்களை விற்பனை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவும் உலகின் பழைய ஜனநாயக நாடுகளில் ஒன்று. ஆகவே அவர்களுடன் பகிர்ந்துகொள்ள நிறையவே இருக்கிறது. இப்போது அது முக்கியமான பிரச்சனை அல்ல.
இந்தியப் பகுதியில் சாலை, கட்டுமான வசதிகள் போதுமானதாக இல்லையென அவற்றைச் செய்யும்போது சீனா கோபமடைகிறது. இதை வேலையை அவர்கள் செய்யும்போது அதைச் சரி என நினைக்கிறார்கள். இந்தியா செய்தால் கோபமடைகிறார்கள். இதுபோக, வரையறுக்கப்படாத எல்லை பிரச்சனையும் இருக்கிறது. இதெல்லாம்தான் இப்போதைய பிரச்சனைக்குக் காரணம்.
இந்தியாவின் அண்டை நாடுகளுடன் தொடர் பிரச்சனை இருப்பது ஏன்?
இந்தியா பெரிய நாடாக இருப்பதால் பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக அந்த நாடுகள் நினைக்கலாம். ஆனால், இந்தியா அருகில் உள்ள நாடுகளுக்கு உதவியிருக்கிறது. மாலத் தீவில் நடந்த புரட்சியை முறியடித்தது. இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியது. நேபாள நில நடுக்கத்தில் உதவியது. சிறிய நாடுகளைப் பொறுத்தவரை, சீனாவின் உதவியைப் பெற இந்தியாவைப் பயன்படுத்துகின்றன. இந்திய உதவியைப் பெற சீனாவைப் பயன்படுத்துகின்றன. சீனாவிடம் பெரும் பணம் இருப்பதால் அவர்கள் பெருமளவில் முதலீடு செய்கிறார்கள்.
ஆனால், இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் கலாச்சார ரீதியிலான உறவுகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அரசு நடத்துதல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உதவ முடியும். சேவைத் துறைகளில் உதவ முடியும். 2004ல் சுனாமி தாக்கியபோது இந்தோனேஷியா, இலங்கை நாடுகளுக்கு உதவ முதல் தேசமாக இந்தியா சென்றது.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய சூழலில் எல்லாமே சீனாவில் சிறப்பாக இருக்கிறது எனச் சொல்ல முடியாது. உள்ளுக்குள்ளேயே சில எதிர்ப்புக் குரல்கள் இருக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது பெயரை மீட்க, சிறிய நாடுகளுக்கு அதிக பொருளாதார பலன்களைக் கொடுப்பார்கள். இப்போது வங்க தேசத்திற்கு அம்மாதிரி ஒரு சலுகையை அளித்திருக்கிறார்கள்.
ஆகவே, சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் இனி இம்மாதிரி சலுகைகளும் இடம்பெற்றிருக்கும். இந்தச் சலுகைகள் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் வழங்கப்படும். சமயங்களில் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கும் வழங்கப்படும். இவர்கள் அனைவரையும் தன்னுடைய பிடிக்குள் வரவழைப்பதுதான் சீனாவின் நோக்கம்.
சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது இந்தியாவுக்குச் சாத்தியமா?
உடனடியாக முடியாது. இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுமதி -இறக்குமதியில் 70 பில்லியன் டாலர்கள் வித்தியாசம் இருக்கிறது. இதில் பெரும் பகுதி, அவர்கள் ராணுவத்தைப் புதுப்பிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, அவர்களுடைய ராணுவத்தை மேம்படுத்த இந்தியா பணம் கொடுப்பதைப்போல ஆகிறது. ஆகவே, மிகக் கவனமாக சீனாவைச் சார்ந்திருப்பதிலிருந்து இந்தியா விலக வேண்டும். ஒரே இரவில் இது நடக்காது.

பட மூலாதாரம், Getty Images
அவர்களது முதலீட்டிலும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு, தொலைத் தொடர்பு போன்ற துறைகளில் எவ்விதப் பணிகளிலும் சீனாவை அனுமதிக்கக்கூடாது. தனியார் நிறுவனங்களில் சில தாங்களாக முன்வந்து சீனாவிடமிருந்து விலகுகிறார்கள். அது வரவேற்கத் தக்கது. அதே நேரத்தில், முன்பே கூறியதைப் போல ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
அடுத்ததாக நீண்ட கால நோக்கிலும் குறுகியகால நோக்கிலும் விஷயங்களைக் கையாள வேண்டும். ராணுவ ரீதியாக இந்தியா சிறப்பாகவே இருக்கிறது. புவியியல் ரீதியிலும் இந்தியாவுக்கு சாதகமான நிலை இருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் அரபிக் கடல் பகுதியிலும் வங்காள விரிகுடா பகுதிகளிலும் இந்திய நிலைகளை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவைப் போன்ற சிந்தனை உள்ள நாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
அரசியல்ரீதியாக, ராஜதந்திர ரீதியாக, வியூகரீதியாக இந்தியா கவனத்துடன் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். ராணுவரீதியாக பலவற்றை இந்தியா இன்னும் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் இந்தியா தற்சார்பு அடைய வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












