இந்திய - சீன எல்லை பதற்றம்: லடாக் நிலப்பரப்பின் பிரச்சனை என்ன?- வரலாற்றுத் தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுகல் புரோகித்
- பதவி, பிபிசி
லடாக் அதன் இயற்கை அழகிற்கும், பயணிப்பதற்குக் கடினமான நிலப் பகுதிகளைக் கொண்டதற்கும் பெயர் பெற்றது. இப்போது இந்திய - சீன எல்லை சர்ச்சையின் மையமாக லடாக் அமைந்துள்ளது.
சமீபத்தில் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக், ஏரிகள், பனி படர்ந்த மலைகள் கொண்ட தனித்துவமான நிலப் பகுதி.
இந்த இமயமலைப் பகுதியின் நிலப் பரப்பை புரிந்து கொள்ளாமல், இப்போதைய இந்திய - சீன பிரச்சனையின் விவரங்களைப் புரிந்து கொள்வது சிரமம்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நியோ டெத்திஸ் பெருங்கடலின் அலைகள் நெருக்கியதில் பூமிப் பகுதி உயர்ந்து, இப்போதைய திபத் பகுதி உருவானது. அப்போது, இந்திய துணைக் கண்ட நிலப்பரப்பு உருவாகி இருக்கவில்லை.
"நாற்பது முதல் ஐம்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதி உருவானது,'' என்று இந்திய அரசு நடத்தி வரும் டேராடூனில் உள்ள வாடியா இமயமலைப் பகுதி புவியியல் நிலையத்தின் (WIHG) நிபுணரான பிரதீப் ஸ்ரீவத்சவா கூறினார்.
"இந்திய நிலப்பகுதி அடியில் சென்றது. பெருங்கடல் பகுதி வெளியில் தள்ளப்பட்டது. அதுவரை இல்லாதிருந்த ஏரிகள், ஆறுகள் புதிதாக உருவாயின. அத்துடன் முடிவில்லாத மலைத்தொடர்களும் உருவாகின. இன்றளவுக்கும் அந்தப் பகுதியில் அவற்றைக் காண முடிகிறது."
"இந்த உராய்வு மோதல்தான் எல்லாவற்றையும் மாற்றியது. மிக உயரமான இமயமலை உருவானது. பருவகால காற்றுகள் இந்தப் பகுதியை அடைய முடியாமல் தடுக்கப்பட்டது. பசுமையான லடாக் காய்ந்து போனது. அதிக குளிர்ச்சியான பாலைவனம் போல மாறியது. அந்த மலைப் பகுதிகளுக்குள் மழை பெய்ய முடியாமல் போனது,'' என்று அவர் விவரிக்கிறார்.
இந்த உராய்வு மோதல் அல்லது இயற்கை மோதல்தான் இன்று வரை தொடரும் பிரச்சனைகளுக்கு மிகவும் அடிப்படைக் காரணம். லடாக் பகுதிதான் இன்னமும் மோதலுக்கான பகுதியாக இருந்து வருகிறது.

இது வரலாற்றுக்கு முந்தைய, புவியியல் சார்ந்த நிகழ்வு. இப்போது இந்தப் பகுதியின் வரலாற்றை நாம் பார்ப்போம்.
சீக்கியப் பேரரசு
1834ஆம் ஆண்டில் டோக்ரா இன வீரர் குலாப் சிங் லடாக் பகுதியைக் கைப்பற்றினார். ரஞ்சித் சிங் தலைமையிலான சீக்கிய பேரரசின் கீழ் லடாக்கை அவர் சேர்த்தார். அந்தப் பகுதி ஆடுகளில் இருந்து தயாரிக்கப்படும் கம்பளி வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் குலாப் சிங்கிற்கு கிடைப்பதற்குக் காரணமாக இருந்ததால், அவருக்கு அது `மிக முக்கியமான வெற்றி' என்று கருதப்படுகிறது என்று `காஷ்மீர் மற்றும் காஷ்மீரிகளைப் புரிந்து கொள்வது' என்ற தனது புத்தகத்தில் கிறிஸ்டோபர் ஸ்னெட்டென் கூறியுள்ளார்.
திபத் - சீன படையினரிடம் அதை இழந்து, பிறகு 1842ல் திரும்பவும் கைப்பற்றினார். 1846-ல் `ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக' அவர் உருவான போது, இதை தமது ராஜ்ஜியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைத்துக் கொண்டார்.
101 ஆண்டுகளுக்கு பிறகு, புதிதாக உருவான இந்தியாவும் பாகிஸ்தானும் அதற்காக சண்டையிட்டுக் கொண்டன.
1950ல் இருந்து இப்போது வரையில், அந்தப் பகுதியில் இந்தியர்களும், சீனர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது கிடையாது.
டெப்சாங், தௌலத் பெய்க் ஓல்டி (DBO), கல்வான், பாங்கோங் ட்சோ, பிங்கர் பகுதி மற்றும் டெம்சோக் உள்ளிட்ட பெயர்கள் ஊடகச் செய்திகளில் இடம் பெற்றாலும், வரையறுக்கப்படாத இந்திய - சீன எல்லைக் கோட்டில் உண்மை கட்டுப்பாட்டு எல்லைக் கோடாக பிரச்சனைகள் மிகுந்த லடாக் உண்மையில் எப்படி இருக்கும் என்று நீங்கள் யோசித்தது உண்டா?

2018ல் ராணுவ துணைத் தலைமை தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. பட்யாலிடம் இதுபற்றி நான் கேட்டேன். லடாக்கை பற்றி புரிந்து கொண்ட ஒரு சிலரில் பட்யாலும் ஒருவர்.
``இந்தியப் பகுதியில் நின்று, சீனாவை பார்த்தபடி நீங்கள் நின்றால், கிழக்கு லடாக் பகுதி ஒரு கிண்ணத்தைப் போல இருக்கும். உங்களுக்கு இடதுபுறத்தில் மிக உயரமான கரகோரம் உச்சி இருக்கும். அதையடுத்து DBO மற்றும் கல்வான் பகுதிகள் இருக்கும். அதற்கும் கீழே பாங்கோங் ஏரி இருக்கும். நீங்கள் வலது நோக்கி நகர்ந்தால் அவை இன்னும் கீழான தாழ்வுக்குச் செல்லும். டெம்சோக் வரையில் சமவெளியாக இருக்கும். ஆனால் டெம்சோக் தாண்டினால், உயரமான பகுதிகள் தோன்றும் - அதனால்தான் கிண்ணம் போன்ற தோற்றம் தெரிகிறது'' என்று அவர் விளக்கினார்.
லே பகுதியை தலைமையிடமாகக் கொண்ட 14வது படைப் பிரிவுக்கு அவர் தலைமை வகித்தார். இது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக எல்லையைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட தனித்துவமான இந்திய ராணுவப் பிரிவாகும்.
``கிழக்கு லடாக்கில் சில பகுதிகளில் காவலுக்கு நிற்பது என்பது சியாச்சின் சிகரத்தில் நிற்பதைப் போல கடினமானது என்று சொன்னாலே போதுமானது! உண்மையில், DBO பகுதியில் கோடை அல்லது குளிர்காலம் என எப்படி இருந்தாலும், சில நிமிடங்களுக்கு மேல் உங்களால் வெளியில் நிற்க முடியாது என்பதை நான் நினைவுகூர்கிறேன். குளிரும், காற்றும் உங்களைக் கடுமையாகத் தாக்கும்,'' என்று அவர் தெரிவித்தார்.
``பள்ளத்தாக்குப் பகுதிகள், மக்கள் வாழ முடியாத பகுதிகளாக இருக்கும். குறிப்பாகக் கோடையில், சிந்து பள்ளத்தாக்கு போன்ற கடினமான பகுதியாக இதுவும் இருக்கும். ஒப்பீட்டளவில் பார்த்தால் ஷியோக் பள்ளத்தாக்கு, வாழ்வதற்கு ஏற்றதாக இல்லாத மிக மோசமான பகுதியாக இருக்கும். அவ்வளவு உயரமான இடத்தில், மனிதர்கள் வாழ்வதே பெரிய சவாலாக இருக்கும். உதாரணமாக, சுமைகளை எடுத்துச் செல்லும் திறன் குறையும், தற்காப்புக்கான பள்ளங்கள் அல்லது பதுங்கு குழிகள் தோண்டுவதற்கு, பாறைப் பகுதியில் தோண்டுவதைப் போல அதிக நேரம் ஆகும். மற்ற இடங்களில் சில மணி நேரங்களில் முடித்துவிடக் கூடிய இந்தப் பணியை இங்கு முடிப்பதற்கு 7 - 8 நாட்கள் ஆகும். இயந்திரங்களைக் கொண்டு செல்வது அவ்வளவு எளிதாக இருக்காது'' என்று லெப். ஜெனரல் பட்யால் விளக்கினார்.

லடாக் பகுதியின் நிலப்பரப்பு பற்றி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ். ஹூடாவிடம் கேட்டதற்கு, அது ஏமாற்றும் தோற்றம் கொண்டது என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.
அந்த வார்த்தையை அவர் பயன்படுத்த இதுதான் காரணம்.
``ஏனென்றால் உதாரணமாக டெப்சாங் சமவெளிப் பகுதியின் வடக்குப் பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே போனால், அது மற்ற சமவெளிப் பகுதிகள் போன்றது என்று நினைப்பீர்கள். அங்கே நீங்கள் எளிதாக காரில் செல்ல முடியும். அது 16,000 - 17,000 அடி உயரத்தில் உள்ளது! புதிதாக எதையாவது செய்யும் உந்துதலை அது உங்களுக்கு ஏற்படுத்தலாம். ஆனால் அவ்வளவு உயரத்தில் அப்படி செய்யக் கூடாது!'' என்றார் அவர்.
டெப்சாங்கின் சமவெளிப் பகுதியில் நம்மை ஈர்ப்பவையாக உள்ளன.
DBO-வில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் முக்கியமான நவீன தரையிறங்குதல் மைதானங்களில் (ALG) ஒன்றாக டெப்சாங்கின் சமவெளிப் பகுதி இருக்கிறது. `உலகில் மிக உயரமான விமான ஓடுதளம் கொண்ட இடம்' என்று DBO-வை இந்திய விமானப் படை குறிப்பிடுகிறது. இது 16300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் அதிக அளவிலான தரையிறங்குதல்கள் அங்கே நடைபெற்றுள்ளன. மக்களையும் பொருட்களையும் எளிதில் இடம் மற்றும் திறன் இதன் மூலம் கிடைத்துள்ளது.
``தெற்குப் பக்கமாக நகர்ந்தால், கல்வான் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளை அடைவீர்கள். அங்கு ஆறு குறுகலானதாக இருப்பதால், பள்ளத்தாக்கும் குறுகலானதாக இருக்கிறது. இன்னும் தெற்கே போனால் சிந்து பள்ளத்தாக்கு உள்ளது. அது ஓரளவுக்கு அகலமான ஆறு என்பதால் பள்ளத்தாக்கும் அகலமாக இருக்கும். அங்கிருந்து தெற்கில் டெம்சோக் இருக்கிறது,'' என்று ஜெனரல் ஹூடா கூறினார்.
லடாக்கின் மலைச் சிகரங்கள் தனக்கென தனி அடையாளங்களைக் கொண்டுள்ளன.

பட மூலாதாரம், AAMIR PEERZADA/BBC
``அவை வழக்கமான மலைச் சிகரங்களைப் போன்றவை அல்ல. பள்ளத்தாக்கு தரை பரப்பிற்கும், மலை உச்சிக்கும் இடையிலான தூரம் மற்ற இடங்களில் உள்ளதைப் போல இருக்காது. அந்தப் பகுதி மேல் எழுந்தவாறு இருக்கும். பாங்கோங் ட்சோ ஏரியை பாருங்கள். அது 14000 அடி உயரத்தில் உள்ளது.
கார்கிலில் எதிரிகளுடன் அவ்வளவு உயரத்தில் நாங்கள் சண்டையிட்டிருக்கிறோம்! ஏரியின் வடக்கு கரையில் ஃபிங்கர்ஸ் பகுதியை வெறும் கண்ணால் பார்த்தால், சிறிய முகடுகள் மற்றும் குன்றுகள் போல தெரியும். ஆனால் உயரத்தைப் பாருங்கள். அந்த ஏரியைவிடவும் அதிக உயரத்தில் அவை உள்ளன!'' என்று அவர் தெரிவித்தார்.
மறுபுறம், நிலப்பரப்பு அங்கே எப்படி இருக்கும்?
``சீனப் பகுதியில் திபத் பகுதி ஓரளவுக்கு சமதளமாக இருக்கும். ஆனால் உயரத்தை வைத்துப் பார்த்தால், பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது'' என்று அவர் கூறினார்.
`ஃபிங்கர் பகுதி' என பெயர் வந்ததற்கான காரணத்தை அறிய நான் ஆர்வமாக இருந்தேன்.
``ஏரியின் வடக்கு கரையில் இருந்து நாங்கள் கண்காணிக்கிறோம். அங்கிருந்து ஏரியைப் பார்த்தால், இந்த குன்றுகள், கையிலிருந்து வெளியே வரும் விரல்களைப் போல இருக்கும். அங்கு எட்டுக் குன்றுகள் உள்ளன. எனவே நாங்கள் 1- 8 என பெயரிட்டுள்ளோம். இந்திய தரப்புக்கு ஃபிங்கர் 4 வரையில் சாலைகள் உள்ளன. சீனர்களுக்கு ஃபிங்கர் 8 வரை சாலைகள் உள்ளன. ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8க்கு இடையிலான எல்லையில் ஜீப் செல்லும் அளவுக்கு சாலை உள்ளது. ஆனால் அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால், அவர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. அவர்களும் எங்களை அனுமதிப்பதில்லை,'' என்று ஜெனரல் பட்யால் கூறினார்.
ஆனால் ஒரு விஷயத்தை இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொள்கின்றன.
``நம் இரு தரப்பிலும் `ஃபிங்கர் பகுதி' என்ற ஒரே பெயர் பட்டியலை பயன்படுத்துகிறோம். பல ஆண்டுகளாக அப்படித்தான் இருந்து வருகிறது,'' என்றார் ஹூடா.
பிற செய்திகள்:
- கொரோனா பரவலுக்குக் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுதான் காரணம்: ராதாகிருஷ்ணன்
- ஹாங்காங் விவகாரம்: சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா
- கொரோனா வைரஸ்: கல் உப்பிலிருந்து கிருமிநாசினி தயாரிப்பு - எப்படி சாத்தியம்?
- காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும் - எச். ராஜா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












