கொரோனா வைரஸ்: கல் உப்பிலிருந்து கிருமிநாசினி தயாரிப்பு - எப்படி சாத்தியம்?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கல் உப்பை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படுத்தக்கூடிய சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினியை மத்திய மின் வேதியியல் ஆய்வக (சிக்ரி) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (சிக்ரி) உள்ளது. இங்கு உள்ள விஞ்ஞானிகள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பிலிருந்து கிருமிநாசினியை உருவாக்கியுள்ளனர்.
எப்படி சாத்தியம்?
கல் உப்பில் இருந்து எப்படி கிருமி நாசினி உருவாக்கப்பட்டது அதன் பயன்கள் என்ன என்பது குறித்து சிக்ரி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கலைச்செல்வி பிபிசி தமிழிடம் பேசினார். "மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் சாதாரண உப்பை (வீட்டில் பயன்படுத்தப்படும் கல் உப்பு) பயன்படுத்தி வைரஸ் தடுப்புக்காக பயன்படுத்தக்கூடிய சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினியை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்."
"கிருமிநாசினியை பயன்படுத்துவதால் வைரஸ், பாக்டீரியா, டெங்கு கொசு மற்றும் பூஞ்சை ஆகியவற்றை அழிக்க முடிகிறது. பெரும்பாலும் மருத்துவமனைகள், வீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டு வருகிறது."

தற்போது சந்தையில் விற்கப்படும் கிருமிநாசினிகள் ஆல்கஹால் (ALCOHOL) சேர்த்து உற்பத்தி செய்யப்படுவதால் விரைவில் ஆவியாகிவிடுவதாக கூறும் அவர் அவற்றை கொண்டு தரையை சுத்தம் செய்வதால் உடல்நலப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்.
"அதேபோல் மின்சாதனப் பொருட்களை சுத்தம் செய்யும் போது அதில் இருந்து மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. மேலும், ஆல்கஹால் கலக்கட்டப்பட்ட கிருமிநாசினிகள் விலை உயர்ந்தது என்பதால் ஏழை மக்களால் அதனை வாங்கி பயன்படுத்த முடியாமல் உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதலின்படி, சிக்ரியில் எலக்ட்ரோ கெமிக்கல் முறையை பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்கப்படுவதால் அதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்கிறார் அவர்
எப்படி கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது?
கிருமிநாசி தயாரிப்பு தொடர்பாக கலைச்செல்வி கூறியதாவது:
மூன்று கிராம் கல் உப்பை (சோடியம் குளோரைடு) 100 மி.லி. தண்ணீரில் கரைத்து நேர்மின்வாய் (Anode), எதிர்மின்வாய் (Cathode) பயன்படுத்தி எலக்ட்ரோ கெமிக்கல் முறையில் மின்சாரத்தைப் பாய்ச்சும் போது ஒரு மணிநேரத்தில் 50 மி.லி. சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினி கிடைக்கிறது. இந்த முறையில் ஒரு லிட்டர் கிருமிநாசினியை மூன்று ரூபாயில் உற்பத்தி செய்யலாம்.
கல் உப்பை பயன்படுத்தி தயாரிக்கும் கிருமிநாசினியில், நறுமணம் தேவைப்பட்டால் வாசனை திரவியங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

குளோரினை தண்ணீரில் கலந்து வீதிகளில் தெளித்து சுத்தம் செய்யும் போது அடர்த்தியான வாயு வெளியேறும். அதேபோல், குளோரின் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கக் கூடும்.
ஆனால் இந்த சோடியம் ஹைப்போ குளோரைடு மின் வேதியியல் மாற்றுத்தொழில்நுட்பம் மரபுசார் வேதியியல் முறையில் உள்ளதைப் போன்று குளோரின் வாயுவின் பயன்பாடு இல்லாததால் மாசற்ற மற்றும் ஆபத்து இல்லாத ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குகிறது.
எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது?
சிக்ரி விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட இந்த கிருமிநாசினி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் சிக்ரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் கதவு கைப்பிடி, நாற்காலி, கழிப்பறை ஆகியவற்றில் இந்த கிருமிநாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கிருமிநாசியை காற்று புகாத ஒரு பாட்டிலில் அடைத்து வைத்தால் அதை எத்தனை நாட்களுக்கு பின் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், கிருமிநாசினி உள்ள பாட்டிலை திறந்து பயன்படுத்தினால் 7 நாட்களில் அதன் தன்மை குறைந்து காலாவதி ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்குடி நகராட்சி சார்பாக நகராட்சி வாகனங்கள் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் காரைக்குடி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருவதாக காரைக்குடி நகராட்சி பொறியாளர் ரங்கராஜ் பிபிசி தமிழிடம் கூறினார்.

"தீயணைப்புத்துறையின் வாகனங்கள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான நான்கு வாகனங்களில் சிக்ரி வழங்கிய சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமி நாசினியை மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தை, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள், காவல் நிலைய வளாகம் என பல முக்கிய இடங்களில் தெளித்து வருகிறோம்."
"இதுவரை 1,200 லிட்டர் கிருமிநாசினியை சிக்ரியிடம் இருந்து பெற்றுள்ளோம். சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினியை பயன்படுத்துவதால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை; மற்ற கிருமிநாசினிகளான லைசால், குளோரினை உள்ளிட்டவற்றை போன்று இதுவும் ஒரு நல்ல கிருமிநாசினி" என்று அவர் மேலும் கூறினார்.
புதிய தொழில் வாய்ப்பு
"சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் 100 சதுர அடி பரப்பில் ஒரு பணியாளர் உதவியுடன் தினமும் 100 லிட்டர் கிருமி நாசினியை தயாரிக்கலாம். இதுகுறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய தொழில்நுட்பத்தை எங்கள் விஞ்ஞானிகளிடம், பசுமை தொழில்நுட்ப தொழில் முனைவோர்கள் மற்றும் சில பெரிய கோயில்களின் நிர்வாகத்தினர் கேட்டு பெற்றுக் கொள்கின்றனர்" என்று கூறுகிறார் சிக்ரி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கலைச்செல்வி.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "எங்களது விஞ்ஞானிகள் அடுத்த கட்டமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினியை தாங்களே வீடுகளில் தயாரித்து கொள்ளும் வண்ணம் கருவி ஒன்றை வடிவமைத்து வருகின்றனர். அதில் 15 கிராம் கல் உப்பில் 500 மி.லி. தண்ணீரை ஊற்றி 30 நிமிடம் மின்சாரத்தை செலுத்தினால் 500 மி.லி. கிருமிநாசினியை அதில் பொருத்தப்பட்டுள்ள குழாய் வழியாக பெற்று கொள்ளலாம். இந்த கருவிக்கான விலையை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் நிச்சயம் மிக குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும்படி வடிவமைக்கப்ட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












