கொரோனா: சென்னை மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் தகரத் தடுப்புகள்

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை நகரத்தில் கொரோனா காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகள் தகர தடுப்புகள் கொண்டு அடைக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் விதிகளை மீறி பொது வெளியில் பாதிக்கப்பட்டவர்கள் நபர்கள் வருவதைத் தடுக்க இந்த தடுப்புகள் இருப்பதாக அதிகாரிகள் கூறினாலும், தடுப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எழுபதாயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், மாநிலத்தில் அதிக பாதிப்புள்ள நகரமாகச் சென்னை விளங்குகிறது.
கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் தீவிர சிகிச்சை தேவைப்படாத நபர்கள் ஆகியோர் வசிப்பிடங்கள் தகர தடுப்புகள் கொண்டு அடைக்கப்படுகிறன.
ஒரு சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில், ஒரு வீட்டில் உள்ள நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த குடியிருப்பு பகுதி முழுவதுமே தகர தடுப்புகள் கொண்டு மூடப்படுகிறது.

தடுப்புகள் கொண்டு அடைக்கப்படுவதால், அந்த குடியிருப்பில் உள்ள அனைவருமே வெளியில் வர முடியாத நிலை உள்ளது. அதோடு அந்த குடியிருப்பு பகுதிவாசிகளை மற்றவர்கள் அச்சத்தோடு பார்க்கும் நிலை உருவாகியுள்ளது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் பாதுகாப்பு கருதியே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் அதிகாரிகள்.
திருவான்மியூரைச் சேர்ந்த ரம்யா மற்றும் அவரது தாயார் சுகந்தி(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) கடந்த 14 நாட்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்தபின்னரும், அவர்கள் கடைகளுக்குச் செல்வதை அண்டை வீட்டார் தடுப்பதாகக் கூறுகின்றனர்.
''எங்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் எங்களைத் தனிமைப்படுத்தினார்கள். நாங்கள் இருவரும் குணமடைந்துவிட்டோம். ஆனால் நாங்கள் வெளியில் வந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என அண்டை வீட்டார், அருகில் உள்ள கடைகளில் எங்களை மோசமாக நடத்துகிறார்கள். கடுமையான மனஉளச்சல் ஏற்பட்டுள்ளது. 14 நாட்கள் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஒவ்வொரு நாளை கடப்பதும் சிக்கலாகவே இருந்தது,''என்கிறார் ரம்யா.

அடையாறு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் 16 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதால், அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் தகர தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
''பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வரக்கூடாது என்பது சரிதான். ஆனால் ஆரோக்கியமான நபர்களும் வெளியில் வரக்கூடாது என்பது வருத்தமளிக்கிறது. தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளதால், எல்லா பொருட்களையும் ஆன்லைனில்தான் வாங்குகிறோம். இந்த தடுப்புகள் குழந்தைகளுக்கு மனஉளச்சலை ஏற்படுத்துகின்றன. ஒரு சிலர் கணினி, டிவியில் மூழ்கிவிடுகிறார்கள். ஆனால் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டதாக உணர்கிறோம்,''என்கிறார் ராமு.
தீ விபத்து நேரிட்டால் அல்லது ஆபத்தான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்ற சமயத்தில் இதுபோன்ற தடுப்புகளை எடுப்பது நேரத்தை வீணாக்கும் என்கிறார் ராஜன்.
''எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், எங்கள் குடியிருப்பை மூடிவிட்டார்கள். ஆனால் அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து, பின்னர் அவர்கள் வந்து இந்த தடுப்புகளை நீக்கவேண்டும் என்பது சரியல்ல. இந்த தடுப்புகள் வைப்பதால், அண்டை வீட்டார்கள் சந்தேகம், அச்சத்தோடு பழகுகிறார்கள்,''என்கிறார் ராஜன்.
தகர தடுப்புகள் வைப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பொது வெளியில் வருவதைத் தடுக்கவும், வெளிநபர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்காகத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
''கொரோனா பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களை மதிப்போடு நடத்தவேண்டும் என்றும் விழிப்புணர்வு அளித்துவருகிறோம். தடுப்புகள் வைப்பதால், யாரும் அந்த பகுதிக்குச் செல்லமுடியாது, அங்குள்ளவர்களும் வெளியில் வரமாட்டார்கள். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளைக் கண்காணிக்கத் தன்னார்வலர்களை நியமித்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நலன் எவ்வாறு உள்ளது, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைப்பட்டால் வாங்கி தருவது போன்ற பணிகளை அந்த பணியாளர்கள் மேற்கொள்கிறார்கள்,''என்றார்.
தகர தடுப்புகள் வைப்பதால் ஏற்படும் மன உளைச்சல் குறித்து கேட்டபோது, ''தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மனநல ஆலோசனை தருவதற்கு ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கட்டுப்பாடு அறையைத் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம். 14 நாட்களுக்குப் பின்னர் தகர தடுப்புகள் நீக்கப்படும்,'' என்றார்.
சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் 14 மண்டலங்களில் சுமார் 40 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் பொது வெளியில் வந்ததால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியால் அளிக்கப்பட்டுள்ள உதவி எண்கள்:
இலவச உதவி எண்1800 1205 55550
கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்கவேண்டிய எண்:044 2538 4520
தன்னார்வலர்கள் உதவி தேவைப்படுவோர் : 044 2538 4530
மனநல ஆலோசனை உதவி எண்: 044 2430 0300
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












