’’சீனாவுடன் சண்டையிடாமல் மோதி எங்களுடன் சண்டையிடுகிறார்’’- காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமணி: சீனாவுடன் சண்டையிடுவார் என்று பார்த்தால் எங்களுடன் சண்டையிடுகிறார்
சீனாவுடன் சண்டையிடுவார் என்று பார்த்தால் எங்களுடன் சண்டையிடுகிறார் என்று பிரதமர் மோதியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது
லடாக்கில் சீன படைகளுடன் ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து சீன விவகாரத்தை முன்வைத்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ‘ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு’ 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
அத்துடன்,’’காங்கிரசும் அதன் தலைமையும் சீனாவிற்கு ஆதரவாகப் பேசுவதற்கு காரணம் உள்ளது. காங்கிரசின் முந்தைய ஆட்சிகாலத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த கமல்நாத்தான் இதற்கு முக்கிய காரணம். அவர் சீனாவிற்காக வேலை செய்பவர். காங்கிரஸ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே செய்யப்பட்ட ரகசிய ஒப்பந்தங்கள் மூலம் ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு முறைகேடாக பணம் கிடைக்க வழி செய்தவர்’’ என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்தது.
இந்நிலையில் சீனாவுடன் சண்டையிடுவார் என்று பார்த்தால் எங்களுடன் சண்டையிடுகிறார் என்று பிரதமர் மோதியை காங்கிரஸ் கடுமையாக விமற்சித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் பவன் கேரா,’’ பிரதமர் மோதி சீனாவுடன் சண்டையிட்டு இழந்த பகுதிகளை மீட்பார் என்று பார்த்தால், அவர் காங்கிரசுடன் சண்டையிடுகிறார் பாஜக ஒவ்வொரு நாளும் ஆதாரமில்லாத புதுப்புது குற்றச்சாட்டுகளைக் காங்கிரசை நோக்கி கூறிக்கொண்டே இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை: கொரோனா வைரஸ் தொற்று: நீட் தேர்வு- என்ன முடிவு செய்திருக்கிறது அரசு?
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற இருந்தது. தமிழகத்தில் 1,17,502 பேர் உட்பட நாடுமுழுவதும் 15,93,452 பேர் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.
இந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கொரோனா பாதிப்பு குறையும் வரை நீட் தேர்வை நடத்தக் கூடாது அல்லது 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது போல், இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வை செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினத்தந்தி: “ஜூலை 15ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து”
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 15-ந் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை விரைவில் 5 லட்சத்தை எட்டும் நிலை உள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி தற்போது நாடு முழுவதும் 5-வது கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மே மாத இறுதியில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. அதே சமயம் சர்வதேச விமான சேவைக்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 15-ந் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டி.ஜி.சி.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகிற 15-ந் தேதி வரை சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டம் உள்ளிட்ட சிறப்பு விமான சேவை தொடரும்.
அதேபோல் சரக்கு, சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு படிப்படியாக சர்வதேச விமான சேவை பின்னர் அனுமதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












