இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை: சீன ராணுவத்தினர் 300 பேரை இந்திய ராணுவம் கொன்ற கதை

இந்திய ராணுவ வீரர்களுடன் மேஜர் ஜெனரல் சாகத் சிங்.

பட மூலாதாரம், SAGAT SINGH FAMILY

படக்குறிப்பு, இந்திய ராணுவ வீரர்களுடன் மேஜர் ஜெனரல் சாகத் சிங்.
    • எழுதியவர், ரெஹான் ஃபைஜல்
    • பதவி, பிபிசி இந்தி

இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே கடந்த திங்கட்கிழமையன்று எல்லையில் நடந்த மோதல் இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதே போன்றதொரு மோதல் சம்பவம் 1967-ம் ஆண்டிலும் நிகழ்ந்தது. அப்போது என்ன நடந்தது?

1967-ம் ஆண்டு இந்தியாவின் சிக்கிம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் உள்ள நாதுலா கணவாயில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 300 சீன ராணுவத்தினரும், 65 இந்திய ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

1962 போருக்குப் பின்னர் இந்தியாவும் சீனாவும் தங்களது தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டன. இருப்பினும் சிறிய குழுக்கள் மட்டுமே இரு நாட்டுத் தூதரகங்களிலும் பணியாற்றின. இந்தநிலையில், இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் நாட்டை உளவு பார்ப்பதாகச் சீனா குற்றஞ்சாட்டியது.

அத்துடன், பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தைச் சுற்றி வளைத்த சீன காவல்துறையினர், ஊழியர்கள் உள்ளே செல்வதையும், வெளியே வருவதையும் தடுத்தனர். பதிலுக்கும் இந்தியாவும் சீன தூதரகத்தை இதே போல நடத்தியது.

1967இல் இந்திய - சீன ராணுவத்தினர் நேருக்கு நேர் மோதினர்.

பட மூலாதாரம், DEFENSE PUBLICATION

படக்குறிப்பு, 1967இல் இந்திய - சீன ராணுவத்தினர் நேருக்கு நேர் மோதினர்.

தூதரக பிரச்சனைகள் 1967-ம் ஆண்டு நடந்துகொண்டிருக்கும்போது, மற்றொரு பிரச்சனையும் வந்தது. தங்கள் நாட்டு எல்லையிலிருந்து 800 ஆடுகளை இந்திய ராணுவத்தினர் திருடிச் சென்றுவிட்டதாகச் சீனா குற்றஞ்சாட்டியது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜன சங்கத்தின் சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அடல் பிகாரி வாஜ்பேயி, டெல்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு ஆடுகளை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தினார்.

பாகிஸ்தானுக்கு உதவிய சீனா

முன்னதாக 1965-ல் நடந்த இந்திய- பாகிஸ்தான் போரில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. இதனையடுத்து சீனாவுக்கு ரகசியமாகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் அயூப் கான், தங்களுக்கு உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை வைத்தார்.

இதன் பிறகு பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக இந்தியா மீது சீனா பல அழுத்தங்களைக் கொடுக்க துவங்கியது.

அப்போது நடந்த சம்பவங்களை 'இந்திய ராணுவத்தில் தலைமைத்துவம்' என்ற புத்தகத்தை எழுதிய முன்னாள் மேஜர் ஜென்ரல் வி.கே சிங் பிபிசியிடம் விவரித்தார்.

''அப்போது நான் சிக்கிமில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக, சிக்கிம் எல்லையில் உள்ள எல்லை கண்காணிப்பு மையங்களை இந்தியா அகற்ற வேண்டும் எனச் சீனா அழுத்தம் கொடுத்தது,'' என்கிறார் சிங்.

மேஜர் ஜெனரல் சாகத் சிங்

பட மூலாதாரம், SAGAT SINGH FAMILY

படக்குறிப்பு, மேஜர் ஜெனரல் சாகத் சிங்

மேலும் அவர்,'' எல்லை கண்காணிப்பு மையங்களை இந்தியா அகற்றினால் சீனா சுலபமாக நமது எல்லைக்குள் வந்துவிடும். எனவே அதை அகற்றமுடியாது என அப்போது எல்லையில் கமாண்டிங் அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சாகத் சிங் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்,'' என்றார்.

இந்தநிலையில் திடீரென ஒரு நாள் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் வந்து தாக்கியுள்ளனர். இது மேஜர் ஜெனரல் சாகத் சிங்கை கடும் கோபமடைய வைத்தது என கூறுகிறார் வி.கே சிங்

இந்தியா - சீனா எல்லையில் இரும்பு வேலி

இதற்கிடையே எல்லையில் ரோந்து பணியின் போது, இரு நாட்டு ராணுவத்துருப்புகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. இதனால், எல்லையில் இரும்பு வேலிகளை அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டது.

1967-ல் செப்டம்பர் 11-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் இரும்பு வேலிகளை அமைக்கும் பணியை இந்திய ராணுவம் துவங்கியது. அப்போது, அங்கு வந்த சீன ராணுவத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் போது, சீன ராணுவத்தினர் திடீரென துப்பாக்கியால் இந்திய ராணுவத்தினரைச் சுட ஆரம்பித்தனர்.

இந்தியாவின் பதில் தாக்குதல்

அப்போது ராணுவத்தினர் துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்தியப் பிரதமரின் ஒப்புதல் வேண்டும். ராணுவத் தளபதிக்குக் கூட இது குறித்து முடிவு எடுக்க அதிகாரம் கிடையாது. ஆனால், மேலிடத்தின் உத்தரவுக்குக் காத்திருக்காமல் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க மேஜர் ஜெனரல் சாகத் சிங் துப்பாக்கியால் சுடத் துவங்கினார். அவருடன் இணைந்து இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மூன்று நாட்கள் இரு நாட்டு ராணுவத்தினரிடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்திய ராணுவத்தினர் மலையின் உச்சியிலும், சீன ராணுவத்தினர் மலையின் கீழ் பகுதியிலும் இருந்தனர்.

india china border dispute

பட மூலாதாரம், Getty Images

இதனால் இந்திய ராணுவத்தினரால் சுலபமாகச் சீனர்களைப் பார்த்து சுட முடிந்தது. ஆனால், சீனர்களால் மலைக்கு கீழே இருந்து இந்திய துருப்புகளைச் சரியாகப் பார்த்துச் சுட முடியவில்லை. இந்த தாக்குதலில் சுமார் 300 சீன ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

சீனாவுக்குள் நுழைந்தஇந்திய ராணுவம்

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் போது, சீன பகுதிக்குள் இந்தியா வந்தது எனச் சீனா குற்றஞ்சாட்டியது.

''அது உண்மைதான். இந்திய ராணுவத்தினரின் உடல்கள் சீனா பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்தியர்கள் சீனப் பகுதிக்குள் தைரியமாகச் சென்று தாக்குதல் நடத்தினர்,'' என்கிறார் வி.கே சிங்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

அதன் பின்னர் அங்கிருந்து மேஜர் ஜெனரல் சாகத் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இந்த தாக்குதல் இந்தியத் துருப்புகளுக்கு மனரீதியாக நல்ல தைரியத்தைக் கொடுத்தது.

''1962 போர் தோல்விக்குப் பின்னர், இந்தியர்களால் சீனர்களுடன் சண்டையிட்டு ஜெயிக்க முடியாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இந்த மோதலில் சீனாவுக்குப் பலத்த அடியை இந்தியர்கள் கொடுத்தனர்,'' என்கிறார் வி.கே சிங்

''இந்தியா - சீனா இடையே 1962-ல் நடந்த போரில், 740 சீன ராணுவத் துருப்புகள் கொல்லப்பட்டனர். இந்த போர் கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. ஆனால், 1967 மோதலின்போது வெறும் 3 நாட்களில் 300 துருப்புகளைச் சீன ராணுவம் இழந்தது. இந்த சம்பவத்திற்குப் பின்னர், சீன ராணுவத்தை தங்களால் வெல்ல முடியும் என்ற எண்ணம் முதல் முறையாக இந்திய ராணுவத் துருப்புகளுக்கு வந்தது,'' என்கிறார் இந்தியன் எஸ்பிரஸ் நாளிதழின் இணை ஆசிரியர் சுஷாந்த் சிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: