கீழடி அகரம் அகழாய்வில் கிடைத்த 17ஆம் நூற்றாண்டு தங்கக் காசு

கீழடி நாகரிகம்: ஆறாம் கட்ட அகழாய்வு
படக்குறிப்பு, கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. (கோப்புப்படம்)

கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் அகழாய்வில் அகரம் பகுதியில் 16 - 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசு கிடைத்துள்ளது.

அந்தப் பகுதி தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக இதனைக் கொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை தற்போது அகழாய்வுகளை நடத்திவருகிறது. இது கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாவது கட்ட அகழாய்வாகும்.

இதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அகரம் பகுதி மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

இந்த அகரம் பகுதியில் நடந்த அகழாய்வில் தங்கக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவுடையதாகவும் 300 மில்லி கிராம் எடையும் கொண்டிருக்கிறது.

Tamil Nadu State Department of Archaeology

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

நாணயத்தின் முன் பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியனும் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின் பக்கம் 12 புள்ளிகளும் அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவமும் காணப்படுகின்றது.

இந்த வகை காசுகள் 17ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள காசுகள் என்றும் இவை வீரராயன் பணம் என்று அழைக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"இம்மாதிரி காசுகள் தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் கிடைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் சில மாறுபாடுகள் இருக்கும். தமிழ்நாட்டில் எங்காவது தங்கப் புதையல் கிடைக்கும்போது எடுக்கப்படும் காசுகளில் பெரும்பாலானவை இந்த வீரராயன் காசுகள்தான்" என்கிறார் நாணய சேகரிப்பாளரான மன்னர் மன்னன்.

Tamil Nadu State Department of Archaeology

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

"இந்தக் காசுகளை தனியாக எந்த ஒரு மன்னரும் வெளியிட்டார் எனச் சொல்ல முடியாது. இது தமிழ்நாடு பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட காசு" என்கிறார் ஆய்வாளர் பழங்காசு சீனிவாசன்.

"தற்போது அகரம் பகுதியில் 11ஆம் நூற்றாண்டு காலம்வரை தோண்டப்பட்டிருக்கிறது. தற்போது கிடைத்திருக்கும் காசு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆகவே இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம்," என்கிறார் அங்கு தொல்லியல் பணியை மேற்கொண்டிருக்கும் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் டி. சிவானந்தம் தெரிவித்தார்.

தற்போது கீழடி, கொந்தகை, அகரம் பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: