இரானில் குடும்பக் கட்டுப்பாடு குறைப்பு: மக்கள்தொகையை அதிகரிக்க விரும்பும் அரபு நாடு

இரான்

பட மூலாதாரம், Getty Images

இரானில் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கான சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இரானில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

இனி உடல்நிலையில் பாதிப்பு அல்லது ஆபத்து உள்ள பெண்களுக்கு மட்டுமே கருத்தடை மருந்துகள் வழங்கப்படும். நிரந்தர கருத்தடைக்காக ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாஸெக்டோமி என்ற அறுவை சிகிச்சையும் இனி அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படாது.

இருப்பினும், தனியார் மருத்துவமனைகளில் கருத்தடைக்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

குறைவான பிறப்பு விகிதம் மற்றும் பெருகிவரும் முதியவர்களின் மக்கள் தொகையால் இரான் அரசாங்கம் கவலை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு இரான் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் ஒரு சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் வயதான மக்கள் தொகையை கொண்ட நாடாக இரான் உருப்பெறும் என இரானின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரானின் மக்கள் தொகை வளர்ச்சி 1.4 சதவிகிதமாக பதிவானது. அண்டை நாடான இராக்கில் 2.3 சதவிகிதமாகவும், செளதி அரேபியாவில் 1.8 சதவிகிதமாகவும் மக்கள் தொகை வளர்ச்சி பதிவானது என்கிறது உலக வங்கியின் தரவு.

திருமணங்கள் நடைபெறுவதும் மற்றும் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெறுவதும் குறைந்திருக்கிறது என்கிறது அரசு ஊடகமான இர்னா. இதற்கு பெரிதும் பொருளாதார நெருக்கடியே காரணம் என்கிறது அந்த ஊடகம்.

இரான்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஒரு தசாப்தத்தில் திருமணமானவர்களின் எண்ணிக்கை 40% குறைந்துள்ளது என இரானின் துணை சுகாதாரத் துறை அமைச்சர் சேயத் ஹமீத் பரக்காட்டி கூறினார். ''இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் மிக வயதான நாடுகளில் ஒன்றாக நாம் இருப்போம்" என்றும் சேயத் ஹமீத் குறிப்பிடுகிறார்.

1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட பிறகு இரானின் மக்கள் தொகையில் கணிசமான முன்னேற்றம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தொடர்ந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

மக்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள எட்டு கோடி மக்கள் தொகையை 15 கோடியாக அதிகரிக்க வேண்டும் என இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: