கொரோனா வைரஸ்: தமிழகத்தில் 500-ஐ கடந்தது உயிரிழப்புகள்; ஒரே நாளில் 1,515 பேர் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,454 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மீதமுள்ளவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,019ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,782ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19,242 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 7,48,244ஆக உயர்ந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 1,515 பேரில் 919 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக சென்னையில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது.
இன்று செங்கல்பட்டில் 88 பேரும் நாகப்பட்டினத்தில் 38 பேரும் ராணிப்பேட்டையில் 60 பேரும் திருவள்ளூரில் 52 பேரும் திருவண்ணாமலையில் 64 பேரும் காஞ்சிபுரத்தில் 46 பேரும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 422 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். திருவள்ளூரிலும் செங்கல்பட்டிலும் தலா 30 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 49 பேரில் 3 பேர் வேறு எவ்வித உடல்நல பிரச்சனைகளும் இல்லாதவர்கள். 35 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 5 பேர் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள். 4 பேர் 80 அல்லது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். 33 பேர் ஆண்கள். 16 பேர் பெண்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












