வடகொரியா - தென்கொரியா பிரச்சனை: எல்லை அலுவலகம் தகர்ப்பு, தயார் நிலையில் ராணுவம்

வடகொரியா

பட மூலாதாரம், Reuters

வடகொரிய - தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் 2018இல் பேச்சு வார்த்தையைத் தொடங்கிய பின்னர் வடகொரிய எல்லைக்குள் இருக்கும் இந்த மையம் மறுசீரமைக்கப்பட்டது.

தென் கொரிய மற்றும் வட கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய தங்களது ராணுவம் தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரித்திருந்த சமயத்தில் இது நிகழ்ந்துள்ளது.

வட கொரியாவிலிருந்து தப்பித்துச் சென்றவர்கள் தென் கொரிய எல்லையிலிருந்து வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசுவதையும், பிரசார வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களை அனுப்புவதையும் கண்டிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.

ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ராணுவத்துக்கு உடுத்தவிட்டுள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்தநிலையில், எல்லை முன்வரிசையில் ராணுவ கோட்டையை உருவாக்கவும், ராணுவ கண்காணிப்பை அதிகரிக்கவும் தயாராக இருப்பதாக வட கொரிய ராணுவம் தற்போது கூறியுள்ளது.

North Korea threatens to send army into demilitarised border zone

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விடுவதால் கடந்த காலங்களிலும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

வட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தென் கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வட கொரியா என்ன கூறியது?

1950களில் நடந்த கொரியப் போரின் போது வட கொரியாவும், தென் கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், ராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது.

எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிகளுக்குள் ராணுவத்தை அனுப்ப, ஒரு செயல்திட்டத்தை ஆராய்ந்து வந்ததாக வட கொரிய ராணுவம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியுள்ளது.

மேலும், அரசு உத்தரவுகளைச் செயல்படுத்த உயர் எச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

''தென் கொரிய அரசுடன் நமது உறவுகளை முறிக்க இது சரியான நேரம் என நினைக்கிறேன்,'' என வட கொரிய அரசியலில் முக்கிய பதவியில் உள்ள கிம் யோ-ஜோங் கூறியிருந்தார்.

வட கொரியா ஏன் இப்படி செய்கிறது?

வட கொரியாவின் இந்த எச்சரிக்கையைத் தென் கொரியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார் தென் கொரியத் தலைநகர் சோலில் உள்ள பிபிசி நிருபர் லாரா பிக்கர்.

Participants attend an opening ceremony of the joint liaison office in Kaesong, North Korea, September 14, 2018.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, செப்டம்பர் 2018இல் தகவல் தொடர்பு அலுவலகம் இருநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

மேலும் இந்த பிரச்சனையின் பின்னணியை அவர் இங்கே விவரிக்கிறார்.

இரு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் அதிகப்பதை தவிர்க்குமாறும், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் வட கொரியாவுக்குத் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூழ்நிலைகளை ஆராயத் தென் கொரிய உளவுத்துறை ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளது.

வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் தென் கொரியாவிலிருந்து அனுப்பப்படுவது தடுக்கப்படும் என 2018-ல் இரு நாட்டுத் தலைவர்கள் தலைவர்கள் இடையே நடந்த உச்சி மாநாட்டில் தென் கொரியா உறுதியளித்தது.

ஆனால், சமீபத்தில் பலூன் பிரசுரங்கள் வட கொரிய எல்லைக்கு வந்துள்ளன.

தனது தென்கொரிய சுற்றுப்பயணத்தின்போது கொரிய நாடுகளின் எல்லைக்கு சென்றார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது தென்கொரிய சுற்றுப்பயணத்தின்போது கொரிய நாடுகளின் எல்லைக்கு சென்றார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

அத்துடன், தங்கள் நாட்டு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துவதைத் தென் கொரியா கேள்வி எழுப்பவில்லை என்பதும் வட கொரியாவின் கோபத்துக்கு மற்றொரு காரணம்.

இதனால், வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையிலான ஹாட்லைன் வசதி, ராணுவத் தொடர்பு உட்படத் தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா கடந்த வாரம் அறிவித்தது.

தென் கொரியாவுக்கு எதிராக நெருக்கடியை உருவாக்கி, எதிர்கால பேச்சுவார்த்தையின் போது இந்த பதற்றத்தை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள வட கொரியா நினைக்கிறது.

கொரியப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுபவர் என்ற பெயரை 2018-ம் ஆண்டு மிகவும் கஷ்டப்பட்டு பெற்றார் தென் கொரிய அதிபர் மூன்.

இரு தலைவர்கள் இடையிலான உச்சி மாநாட்டுக்குப் பின்னர், உலகின் மிகவும் பதற்றமான கொரிய எல்லையை, அமைதி பகுதியாக மாற்ற மூன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இப்போது தங்களது எச்சரிக்கைகள் மூலம் தென் கொரிய மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை உடைக்க வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

எல்லையில் அனுப்பப்படும் பலூனில் என்ன உள்ளது?

வட கொரிய மக்களுக்கு இணைய வசதியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சிகள் மூலம் மட்டுமே அவர்களால் செய்திகளை அறிய முடியும்.

இந்த நிலையில் தென் கொரிய எல்லையிலிருந்து, வட கொரிய அரசை விமர்சிக்கும் பிரசுரங்கள், உணவு, செய்தித் தாள்கள், கொரிய நாடகங்கள், வானொலி போன்றவற்றைக் கொண்ட பெரிய பலூன்களை வட கொரியா நோக்கி அடிக்கடி அனுப்பப்படும். இவற்றை வட கொரியாவிலிருந்து தப்பித்து தென் கொரியா வந்தவர்களைக் கொண்ட குழு செய்து வந்தது.

இந்த குழுவின் செயல்களால் எல்லையில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என கூறி இந்த குழுக்களைத் தடுக்க தென் கொரிய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: