பாலியல் தொழிலில் சிக்கிய இரு வடகொரிய பெண்கள்: தப்பித்தது எப்படி?

பட மூலாதாரம், CHUN KIWON
வடகொரியாவில் இருந்து சீனா வந்த பிறகு பாலியல் தொழிலில் சிக்கிய இரண்டு இளம் பெண்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தப்பிச் சென்றுள்ளனர்.
சீனாவில் யான்ஜி நகரில் குடியிருப்புகள் உள்ள டவர் பிளாக்கில் மூன்றாவது மாடியில் இருந்து இரண்டு இளம் பெண்கள் கிழித்து, கட்டி முடிச்சு போட்ட போர்வைகளை ஜன்னல் வழியாக வெளியே வீசினர்.
அதில் ஒரு கயிறு கட்டினர். ஜன்னலுக்கு வெளியே வந்து கீழே இறங்கத் தொடங்கினர்.
``சீக்கிரம், நமக்கு அதிக நேரம் கிடையாது'' என்கிறார் தப்பிச் செல்பவர்.
பத்திரமாக தரைக்கு வந்ததும், பொதுப் போக்குவரத்து வாகனத்துக்கு அவர்கள் ஓடினர்.
ஆனாலும் இன்னும் ஆபத்தில் இருந்து அவர்கள் விடுபடவில்லை.

பட மூலாதாரம், CHUN KIWON
மிரா மற்றும் ஜியுன் ஆகிய இருவரும் வட கொரியாவில் இருந்து ஓடி வந்தவர்கள். பல ஆண்டுகளாக பாலியல் தொழிலில் அவர்களை சிலர் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
சீன எல்லைக்கு வந்ததும், வடகொரியாவில் இருந்து அவர்களை தப்புவிக்க உதவி செய்தவர்கள், ``புரோக்கர்கள்'' என கடத்தல் தொழிலில் கூறப்படும் அந்த நபர்கள், அவர்களை செக்ஸ்கேம் செயல்பாடுகளில் உள்ளவர்களிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மிராவும், கடந்த எட்டு ஆண்டுகளாக ஜியுனும் ஒரு அடுக்குமாடி வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். ``செக்ஸ்கேம் பெண்களாக'' அவர்கள் ஆக்கப்பட்டிருந்தனர். வெப்காமிரா மூலம், அதன் எதிரே ஆபாச செயல்களை செய்யும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர்.

பட மூலாதாரம், CHUN KIWON
அரசின் அனுமதி இல்லாமல் வடகொரியாவை விட்டு வெளியேறுவது சட்டவிரோதமான செயல். இருந்தாலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பலர் தப்பிச் செல்கின்றனர்.
தென்கொரியாவில் பாதுகாப்பான அகதி முகாம் உண்டு. ஆனால் வடக்கு மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் உள்ள சிறிய நிலப்பகுதி தீவிர பாதுகாப்பு உள்ளதாக, கண்ணிவெடிகள் நிறைந்ததாக இருக்கும் - நேரடியாக தப்பிச் செல்வது, ஏறத்தாழ சாத்தியமற்றது.
அதற்குப் பதிலாக, தப்பிச் செல்லும் பலரும் வடக்கில், சீனாவுக்கு செல்கின்றனர்.
ஆனால் வடகொரியாவில் இருந்து தப்பி வருபவர்களை ``சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்'' என்று சீனா கருதுகிறது. அவர்களை அதிகாரிகள் பிடித்தால் மீண்டும் திருப்பி அனுப்பப் படுவார்கள். தப்பி ஓடியவர்கள், திரும்பவும் தாயகத்துக்குச் செல்ல நேரிட்டால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். ``தந்தை நாட்டுக்குத் துரோகம் செய்தார்கள்'' என்று கூறி சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
1990-களின் மத்தியில் பலர் தப்பிச் சென்றனர். பொருளாதார நெருக்கடி மற்றும் பஞ்சத்தில் குறைந்தது 10 லட்சம் பேர் மாண்டதைத் தொடர்ந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.
ஆனால் 2011ல் வடகொரியாவில் கிம் ஜோங்-உன் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆண்டுதோறும் தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்திருக்கிறது. எல்லையில் கடுமையான பாதுகாப்புகள் மற்றும் தப்பிச் செல்ல உதவும் புரோக்கர்கள் அதிகம் பணம் கேட்பது ஆகியவைதான் இதற்குக் காரணங்களாக உள்ளன.

மிரா 22 வயதாக இருந்த போது தப்பிச் சென்றிருக்கிறார்.
பஞ்சகாலத்தின் இறுதியில் பிறந்த மிரா, வடகொரியர்களின் புதிய தலைமுறை காலத்தில் வளர்ந்தவர். கள்ளச்சந்தைகள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், உள்ளூரில் அதை ஜங்மடாங் என்கிறார்கள், அவர்களுக்கு டி.வி.டி. பிளேயர்கள், வாசனைத் திரவியப் பொருட்கள், போலியான வடிவமைப்பாளர் துணிமணிகள், சட்டவிரோதமான வெளிநாட்டு திரைப்படங்கள் கொண்ட USB மெமரி சாதனங்கள் ஆகியவை கிடைத்தன.
வெளியில் இருந்து வரும் இந்தப் பொருட்கள், தப்பிச் செல்லும் எண்ணத்தை பலரிடம் உருவாக்கின. சீனாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட திரைப்படங்கள், வெளியுலகில் உள்ள நிலைமை குறித்து சிறிதளவு வெளிச்சம் போட்டுக் காட்டின. வடகொரியாவில் இருந்து வெளியேறும் எண்ணத்தை அவை உருவாக்கின.
அதுபோல பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மிரா.
``சீன திரைப்படங்களை உண்மை என்று நான் நம்பினேன். சீனாவில் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் என்று நினைத்தேன். சீன ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு நான் ஆசைப்பட்டேன். வடகொரியாவை விட்டு வெளியேற பல ஆண்டுகள் காத்திருந்தேன்'' என்று அவர் சொன்னார்.
முன்னாள் ராணுவ வீரரும், கட்சி உறுப்பினருமான அவருடைய தந்தை மிகவும் கண்டிப்பானவர். வீட்டில் கடுமையான விதிகளை அமல் செய்பவர். சில நேரம் மிராவை அடித்திருக்கிறார்.
டாக்டராகப் பயிற்சி பெற வேண்டும் என்று மிரா விரும்பினார். ஆனால் அவருடைய தந்தை அதை தடுத்துவிட்டார். மிரா நாளுக்கு நாள் அதிகம் வெறுப்புற்று, சீனாவில் புதிய வாழ்வைக் காணலாம் என கனவு கண்டார்.
``எனது தந்தை கட்சியின் உறுப்பினர். அதனால் கஷ்டமாக இருந்தது. வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்க்க விடமாட்டார். குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்து, குறிப்பிட்ட நேரத்துக்கு நான் தூங்கப் போய்விட வேண்டும். எனக்கென சொந்த வாழ்க்கை கிடையாது'' என்று மிரா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
டுமென் ஆற்றைக் கடந்து தப்பிச் செல்வதற்கு உதவக் கூடிய ஒரு புரோக்கரை கண்டுபிடிக்க மிரா முயற்சி செய்தார். தீவிர பாதுகாப்பில் இருந்து தப்பிச் செல்வதற்கு, காத்திருந்தார். ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கு அரசில் நெருக்கமான தொடர்புகள் இருந்ததால், அதிகாரிகளிடம் அவர் சொல்லிவிடுவாரோ என்று கடத்தல்காரர்கள் அச்சப்பட்டனர்.
இறுதியாக, நான்கு ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு மிராவுக்கு ஒருவர் உதவி செய்தார்.
தப்பிச் சென்ற பலரையும்போல, புரோக்கருக்கு நேரடியாகத் தருவதற்கு மிராவிடம் போதிய பணம் இல்லை. எனவே தன்னை ``விற்றுக் கொள்வதற்கு'' அதன் மூலம் கடனை அடைப்பதற்கு அவர் சம்மதித்தார். உணவு விடுதியில் வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்று மிரா நினைத்திருந்தார்.
ஆனால் அவள் ஏமாற்றப்பட்டாள். வடகொரியாவில் இருந்து தப்பி வரும் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளக் கூடிய ஒரு கும்பலின் வலைக்குள் மிரா சிக்கினாள்.
டுமென் ஆற்றைக் கடந்து சீனாவுக்குள் வந்த பிறகு, நேரடியாக யான்ஜி நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொரிய - சீன நபர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை அங்கு ``டைரக்டர்'' என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், DURIHANA
யான்பின் பகுதியின் மையப் பகுதியில் யான்ஜி நகரம் அமைந்துள்ளது. கொரிய இன மக்கள் அதிகம் உள்ள அங்கு வடகொரிய மக்கள் அதிகம் தொழில் செய்யும் நிலை உள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பி வருபவர்கள் தலைமறைவாக இருக்கும் பிரதான சீன நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
தப்பி வந்தவர்களில் பெண்கள் அதிகமானவர்களாக இருக்கிறார். ஆனால், சீனாவில் சட்டபூர்வ அந்தஸ்து எதுவும் கிடையாது. சுரண்டலுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம். சிலர் மணப்பெண்களாக விற்கப் படுகிறார்கள். குறிப்பாக கிராமப் பகுதிகளில் விற்கப் படுகிறார்கள். சிலர் விலைமாது தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் அல்லது, மிராவைப் போல செக்ஸ்கேம் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.
அடுக்குமாடி வீட்டை அடைந்ததும், அங்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று மிராவுக்கு டைரக்டர் தெரிவிக்கிறார்.
``ஏற்கெனவே அங்கு இருக்கும்'' ஒருவருடன் அவர் ஜோடியாக சேர்க்கப்பட்டு, அவருடன் தங்க வைக்கப்படுகிறார். அவரைப் பார்த்து மிரா கவனித்து, கற்றுக் கொண்டு, பயிற்சி செய்ய வேண்டும்.
``என்னால் அதை நம்ப முடியவில்லை. ஒரு பெண் என்ற வகையில் வேறு நபர்களின் முன்னிலையில் துணிகளை கழற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயலாக இருந்தது. நான் கண்ணீர்விட்டு அழுதபோது, வீட்டைவிட்டு வெளியேறி வந்ததால் அழுகிறாயா என்று அவர்கள் கேட்டார்கள்'' என்று விவரிக்கிறார் மிரா.

பட மூலாதாரம், CHUN KIWON
செக்ஸ்கேம் இணையதளம், அதைப் பயன்படுத்தும் பலர், தென் கொரியர்களாக உள்ளனர். ஒரு நிமிடத்துக்கு இவ்வளவு என்று அவர்கள் கட்டணம் செலுத்துகின்றனர். அதனால் முடிந்தவரை அதிக நேரத்துக்கு ஆண்களை இணையதளத்தில் கவனித்திருக்கும்படி செய்ய வேண்டும் என பெண்கள் ஊக்கப்படுத்தப் படுவார்கள்.
ஒவ்வொரு முறை மிரா தயங்கினாலோ அல்லது அச்சப்பட்டாலோ, வடகொரியாவுக்கு திருப்பி அனுப்பிவிடுவோம் என்று டைரக்டர் மிரட்டுவார்.
``என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசில் பணியாற்றுகின்றனர். திரும்பிச் சென்றால் அவர்கள் அனைவருக்கும் அவமானமாகப் போய்விடும். அதற்குப் பதிலாக நான் செத்துவிடலாம்'' என்கிறார் மிரா.
அந்த அடுக்குமாடி வீட்டில் எந்த நேரத்திலும் ஒன்பது பெண்கள் இருப்பார்கள். முதலில் மிராவுடன் அறையில் தங்கியிருந்தவர், வேறொரு பெண்ணுடன் தப்பிச் சென்றபோது, வேறு சில பெண்களுடன் சேர்த்து மிரா தங்கவைக்கப் பட்டார். அப்படி தான் ஜியுனை அவர் சந்தித்தார்.

2010-ல் தப்பி வந்தபோது ஜியுனுக்கு 16 வயது.
அவளுக்கு இரண்டு வயதாக இருந்த போது பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டதால், குடும்பம் வறுமையில் வாடியது. பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு, 11 வயதில் வேலைக்குப் போனார். கடைசியாக சீனாவுக்கு ஓராண்டு காலத்துக்குச் சென்று வீட்டுக்குப் பணம் சம்பாதித்து வரலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
ஆனால் மிராவை போல, அவளும் புரோக்கரால் ஏமாற்றப்பட்டாள். செக்ஸ்கேம் வேலையில் ஈடுபட வேண்டும் என்று அவளுக்கு சொல்லப்படவில்லை.
அவள் யான்ஜி நகருக்கு வந்தபோது, திரும்பவும் வடகொரியாவுக்கு அனுப்புவதற்கு டைரக்டர் முயற்சி செய்திருக்கிறார். ``அவள் ரொம்ப கருப்பாகவும், அசிங்கமாகவும்'' இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
அப்படியிருந்தும், திரும்பிச் செல்ல ஜியுன் விரும்பவில்லை.
``இது ஒப்புக்கொள்ள முடியாத வேலை. ஆனால் சீனாவுக்கு வருவதற்காக உயிர் ஆபத்தைத் தாண்டி வந்தேன். எனவே வெறுங்கையுடன் திரும்பிச் செல்ல முடியாது'' என்று அவர் கூறினார்.
``என் தாத்தா, பாட்டிமார்கள் வாழும் காலத்தில் சிறிது சாப்பாடு தர வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. அதனால் தான் எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். என் குடும்பத்துக்குப் பணம் அனுப்ப நான் விரும்பினேன்'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஜியுன் கடுமையாக உழைத்தார். நன்றாக செய்தால் டைரக்டர் பரிசளிப்பார் என்று அவள் நம்பினாள். தன்னுடைய குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளலாம், பணம் அனுப்பலாம் என்று வாக்குறுதி தந்ததால், அந்த வீட்டில் இருந்த மற்ற பெண்களைவிட இவள் அதிக வருமானத்தை ஈட்டித் தந்தாள்.
``டைரக்டரின் பாராட்டைப் பெற்று, என் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள விரும்பினேன். இந்த வீட்டில் சிறப்பாக வேலை செய்பவளாக இருந்தால், இங்கிருந்து முதலில் விடுதலை பெறுவது நானாகத் தான் இருக்கும் என்று நினைத்தேன்'' என்றும் கூறினாள்.
தினமும் 177 டாலர்கள் (140 பவுண்ட்) வருமானம் ஈட்ட வேண்டும் என்று இலக்கு இருப்பதால், சில நேரங்களில் இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே அவளால் தூங்க முடியும். தனது குடும்பத்துக்காகப் பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.
சில நேரங்களில் மிராவை ஜியுன் சமாதானப்படுத்துவாள்; எதிர் வேலையில் ஈடுபட வேண்டாம், டைரக்டர் சொல்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
``முதலில் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று மிராவிடம் அவள் கூறியிருக்கிறாள். ``உன்னை டைரக்டர் வீட்டுக்கு அனுப்பாவிட்டால், அதன் பிறகு நீ அவருக்கு எதிராக செயல்படலாம்'' என்றும் கூறியிருக்கிறாள்.
சில ஆண்டுகளில் மற்ற பெண்களைவிட தாம் நிறைய வருமானம் ஈட்டியதால், டைரக்டர் நிறைய சலுகைகள் கொடுத்தார் என்று ஜியுன் தெரிவித்தார்.
``என் மீது அவர் நேர்மையான அக்கறை காட்டியதாக நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வருமானம் குறைந்த நாட்களில், அவருடைய முகத்தில் மாற்றம் இருக்கும். கடுமயாக முயற்சிக்கவில்லை என்று எங்களிடம் அவர் சொல்வார். நாடகங்கள் பார்ப்பது போன்ற கெட்ட வேலைகளில் ஈடுபடுவதாகக் கூறுவார்'' என்றும் ஜியுன் கூறினார்.

டைரக்டரின் குடும்பத்தினரின் தீவிர பாதுகாப்பில் அந்த அடுக்குமாடி வீடு இருந்தது. அவருடைய பெற்றோர்கள் முன் அறையில் தூங்குவார்கள். நுழைவுவாயில் பூட்டப்பட்டிருக்கும்.
பெண்களுக்கு டைரக்டர் சாப்பாடு கொண்டு வந்து தருவார். அருகில் வசித்த அவருடைய சகோதரர் தினமும் காலையில் வந்து குப்பைகளை எடுத்துச் செல்வார்.
``முழுமையாக அது பாதுகாப்பு காவல் போல இருக்கும். சிறையைவிட மோசமாக இருக்கும்'' என்கிறார் ஜியுன்.
வட கொரிய பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வெளியில் செல்வதற்கு, வருமனம் அதிகமாக ஈட்டினால் மாதம் ஒரு முறை வெளியில் செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அபூர்வமான அந்த சமயங்களில் ஷாப்பிங் செய்வார்கள் அல்லது முடி அலங்காரம் செய்து கொள்வார்கள். அப்போதும் கூட யாருடனும் பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது.
``நாங்கள் ஓடிவிடுவோம் என்ற பயம் காரணமாக, காதலரைப் போல நெருக்கமாக டைரக்டர் நடந்து வருவார்'' என்கிறார் மிரா. ``சுற்றிப் பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் முடியாது. யாருடனும் பேச அனுமதி கிடையாது, ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குவதற்குக் கூட அனுமதி கிடையாது. ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்'' என்றார் அவர்.
அந்த அடுக்குமாடி வீட்டில் ``மேனேஜராக'' வடகொரிய பெண் ஒருவரை டைரக்டர் நியமனம் செய்திருந்தார். டைரக்டர் இல்லாத போது அவர் தான் கவனித்துக் கொள்வார்.

கடுமையாக உழைத்தால் நல்ல ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைப்பதாக மிராவுக்கு டைரக்டர் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஜியுன் தன் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளச் செய்வதாகவும் கூறியிருந்தார்.
தன்னை விடுவிக்குமாறு ஜியுன் கேட்டபோது, பயணத்துக்கு அவர் 53,200 டாலர் வருமானம் ஈட்டித் தர வேண்டும் என்று டைரக்டர் கூறியிருக்கிறார். எந்த புரோக்கரும் கிடைக்காததால், அவரை விடுவிக்க முடியாத நிலை இருப்பதாகவும் டைரக்டர் தெரிவித்திருக்கிறார்.
செக்ஸ்கேம் வேலை மூலமாக தாங்கள் ஈட்டிய பணத்தை மிராவும், ஜியுனும் ஒருபோதும் பார்த்தது கிடையாது.
லாபத்தில் 30% தருவதாக ஆரம்பத்தில் டைரக்டர் கூறியுள்ளார்; விடுவிக்கப்படும் போது அந்தப் பணத்தைத் தருவதாகவும் கூறியுள்ளார்.
தங்களுக்கு ஒருபோதும் விடுதலை கிடைக்காது என்று உணர்ந்த நிலையில், மிராவும் ஜியுனும் அதிக கவலை கொண்டனர்.
``தற்கொலை செய்து கொள்ள ஒரு போதும் சிந்தித்தது கிடையாது. ஆனால் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு ஜன்னல் வழியே குதிப்பதற்கு நான் முயற்சி செய்திருக்கிறேன்'' என்று ஜியுன் தெரிவித்தார்.
ஆண்டுகள் ஓடின - மிராவுக்கு ஐந்து ஆண்டுகள், ஜியுனுக்கு எட்டு ஆண்டுகள் ஓடின.
மிராவின் செக்ஸ்கேம் வாடிக்கையாளர் ஒருவர், அவரை மூன்று ஆண்டுகளாகத் தெரியும், அவள் மீது பரிதாபம் கொண்டிருக்கிறார். மதபோதகர் சுன் கிவோன் உடன் அவருக்கு தகவல் தொடர்பை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக வடகொரியர்கள் தப்பிச் செல்ல பாஸ்டர் உதவி செய்து வருகிறார்.
தொலைதூரத்தில் இருந்தவாறே மிராவின் கம்ப்யூட்டரில், மெசேஜ் அப்ளிகேசன் ஒன்றை அந்த வாடிக்கையாளர் நிறுவி, மதபோதகருடன் தொடர்பு கொள்ள உதவியிருக்கிறார்.

வட கொரியாவில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு மதபோதகர் சுன் கிவோனை நன்கு தெரியும். வடகொரிய தொலைக்காட்சி அடிக்கடி அவர் மீது குற்றஞ்சாட்டும். அவரை ``ஆள் கடத்தல் செய்பவர்'' என்றும், ``பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் சுரண்டுபவர்'' என்றும் குற்றச்சாடுகளைக் கூறும்.
1999-ல் துரிஹானா கிறிஸ்தவ அறக்கட்டளையை நிறுவியதில் இருந்து சுமார் 1,200 பேருக்கு பத்திரமாக தப்பிச் செல்ல அவர் உதவியிருப்பதாகத் தெரிகிறது.
மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று பேர் மீட்பு உதவி கேட்டு அவரை தொடர்பு கொள்வார்கள். ஆனால் மிரா மற்றும் ஜியுன் குறித்த விஷயம் மிகுந்த பரிதாபகரமானதாக இருந்தது.
``மூன்று ஆண்டுகள் வரை சிறை வைக்கப்பட்ட பெண்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இவ்வளவு காலம் பெண்கள் சிறை வைக்கப்பட்டதை நான் பார்த்தது இல்லை. உண்மையில் என் இதயம் வலிக்கிறது'' என்று சுன் கிவோன் கூறினார்.

பட மூலாதாரம், DURIHANA
பெண்களை சட்டவிரோதமாக கடத்தி வரும் செயல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்றும் வடகொரிய எல்லையில் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு என்றும் சுன் கூறுகிறார்.
பெண்களைக் கடத்தி வருவது சில நேரங்களில் ``கொரிய பன்றி வியாபாரம்'' என்று சீன எல்லையில் வசிக்கும் மக்களால் குறிப்பிடப் படுகிறது. பெண்களின் விலை சில நூறு டாலர்கள் முதல் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை இருக்கும்.
அதிகாரப்பூர்வமான தகவல்களைப் பெறுவது சிரமமாக இருந்தாலும், வடகொரிய பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுவது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
வருடாந்திர ஆள்கள் கடத்தல் குறித்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கையில், வடகொரியாவில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்தச் சம்பவங்கள் மிக மோசமான ஆள்கடத்தல் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக வடகொரியாவைக் குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், CHUN KIWON
ஒரு மாத காலத்தில், செக்ஸ்கேம் இணையதளத்தில், வாடிக்கையாளரைப் போல மிரா மற்றும் ஜியுனுடன் சுன் தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த வகையில், தப்பிச் செல்வதற்கு திட்டமிடுகையில், வேலைபார்ப்பதைப் போல அந்தப் பெண்கள் நடிக்கவும் முடிந்தது.
``இரவில் கண்களைக் கட்டி அடுக்குமாடி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதால், வழக்கமாக அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாது. அதிர்ஷ்டவசமாக தாங்கள் யான்ஜியில் இருப்பதாக அவர்களுக்கு (மிரா, ஜியுனுக்கு) தெரிந்திருந்தது. வெளியில் ஒரு ஹோட்டல் பெயர்ப் பலகையைப் பார்க்க முடிந்துள்ளது'' என்று மதபோதகர் தெரிவித்தார்.
கூகுள் மேப் மூலமாக அவர்கள் இருக்கும் சரியான இடத்தைக் கண்டறிந்து, தப்புவதற்கு முன்னதாகவே வெளியில் காத்திருப்பதற்கு, தன்னுடைய துரிஹனா அமைப்பின் தன்னார்வலர்களை சுன் அங்கு அனுப்பி வைத்தார்.

தப்பித்து வரும் யாருக்கும் சீனாவில் இருந்து வெளியேறுவது ஆபத்தான விஷயம்.
பெரும்பாலானவர்கள் மூன்றாவது நாட்டுக்கு, தென் கொரியாவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். தென் கொரியாவுக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்து, தஞ்சம் அளிக்கப்படுகிறது.
ஆனால் அடையாள அட்டை இல்லாமல் சீனாவைக் கடந்து பயணிப்பது ஆபத்தானது.
``கடந்த காலத்தில், தப்பி வந்தவர்கள், போலி அடையாள அட்டைகளுடன் பயணம் செய்திருக்கிறார்கள். ஆனால் இப்போதெல்லாம், அதிகாரிகள் எலெக்ட்ரானிக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அடையாள அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்று அது காட்டிவிடும்'' என்கிறார் சுன்.
அடுக்குமாடி வீட்டில் இருந்து தப்பிய பிறகு, ஜியுனும் மிராவும் துனிஹனா தன்னார்வலர்களின் உதவியுடன் சீனாவைக் கடந்து செல்ல நீண்ட பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
அடையாள அட்டை இல்லாமல் ஹோட்டல் அல்லது ஹாஸ்டலில் தங்கி ஆபத்தை தேடிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. எனவே ரயில்களில் தூங்கியிருக்கிறார்கள் அல்லது உணவகங்களில் தூங்காமலே நேரத்தைக் கழித்திருக்கிறார்கள்.
சீனாவில் கடைசி நாள் பயணத்தின் போது, ஐந்து மணி நேரம் மலையில் பயணத்தைக் கடந்த பிறகு, கடைசியாக அவர்கள் எல்லையைக் கடந்து அருகில் உள்ள நாட்டுக்குள் சென்றார்கள். அவர்கள் சென்ற வழித்தடம் மற்றும் நாட்டின் பெயரை வெளியிட இயலாது.

அடுக்குமாடி வீட்டில் இருந்து தப்பி 12 நாட்களுக்குப் பிறகு மிராவும் ஜியுனும் முதல் முறையாக மதபோதகர் சுன்னை சந்தித்தனர்.
``தென்கொரிய குடியுரிமை கிடைத்த போது தான் நான் முழு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் போதகர் சுன்னை சந்தித்தபோது பாதுகாப்பாக உணர்ந்தன். சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று நினைத்தபோது அழுதுவிட்டேன்'' என்றார் ஜியுன்.
இருவரும் காரில் மேலும் 27 மணி நேரம் பயணம் சென்று அருகில் உள்ள தென்கொரிய தூதரகத்தை அடைந்தனர்.

வடகொரியர்கள் சிலருக்கு கடைசி நேர பயணம் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது, காரில் பயணம் செய்வது சிரமமாக இருக்கிறது என்று சுன் தெரிவித்தார்.
``தப்பி வருபவர்களுக்கு கார் பயணம் சிரமமாக இருக்கிறது. சிலநேரங்களில் வாந்தி எடுத்து மயக்கமாகி விடுகின்றனர். சொர்க்கத்தை நோக்கிச் செல்பவர்களுக்கான துன்பங்கள் நிறைந்த பயணமாக அது இருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.
தூதரகத்தை அடைவதற்கு முன்பு, உணர்ச்சிவயப்பட்டு மிரா புன்னகைத்தார். அழ வேண்டும் போல இருக்கிறது என்றார்.
``நரகத்தைவிட்டு வெளியே வந்துவிட்டதைப் போல உணர்ந்தேன்'' என்றார் ஜியுன். ``பல உணர்வுகள் வந்துவிட்டுப் போகும். தென் கொரியாவுக்கு நான் போனால், என் குடும்பத்தினரை ஒருபோதும் சந்திக்க முடியாமல் போகும். குற்ற உணர்வு இருக்கிறது. விட்டு விலகிட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை'' என்றார் அவர்.
மதபோதகருடன் இரு பெண்களும் தூதரகத்தில் நுழைந்தனர். சில விநாடிகள் கழித்து, சுன் மட்டும் திரும்பி வருகிறார். அவருடைய பணி முடிந்துவிட்டது.
மிராவும், ஜியுனும் நேரடியாக தென்கொரியாவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் உளவாளிகள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, தேசிய உளவுத் துறையினர் கடுமையாக சோதனை நடத்துவார்கள்.

பிறகு வடகொரியர்களுக்கான ஹனோவன் மறுகுடியமர்வு மையத்தில் அவர்கள் மூன்று மாதங்கள் இருப்பார்கள். தென் கொரியாவில் புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு நடைமுறை திறன்கள் அவர்களுக்கு சொல்லித் தரப்படும்.
மளிகைப் பொருட்களை எப்படி வாங்குவது, ஸ்மார்ட்போன் எப்படி பயன்படுத்துவது, சுதந்திரப் பொருளாதாரத்தின் கோட்பாடுகள் பற்றி கற்பிக்கப்பட்டு, தொழில் பயிற்சியும் அளிக்கப்படும். அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் அளிக்கப்படும். பிறகு அவர்கள் தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ குடிமக்கள் ஆகிவிடுவார்கள்.
தென் கொரியாவில் உங்களுடைய கனவு என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, ``சுற்றுலா வழிகாட்டியாக ஆக வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் அல்லது சீன மொழியைக் கற்க விரும்புகிறேன்'' மிரா கூறினார்.
``கடையில் காபி குடிப்பது, நண்பர்களுடன் உரையாடுவது என சாதாரண வாழ்க்கை வாழ விரும்புகிறேன்'' என்று ஜியுன் கூறினார்.
``ஒரு நாள் மழை நின்றுவிடும் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். ஆனால் னக்கு, பருவநிலை நீண்டகாலம் தங்கிவிட்டதால், சூரியன் என்ற ஒன்று இருப்பதையே கூட நான் மறந்துவிட்டேன்'' என்று அவர் கூறினார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












