'என் குரு பா.ஜ.க. ' - ராகுல்காந்தி சொல்ல வருவது என்ன?

பட மூலாதாரம், ANI
பா.ஜ.க.வையே தனது குருவாக கருதுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ஏனெனில், பா.ஜ.க. செயல்பாடுகளே தனக்கான பாதையை வகுப்பதாகவும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று கற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, பல்வேறு மாநிலங்களைக் கடந்து டிசம்பர் 24-ம் தேதி தலைநகர் டெல்லியை அடைந்தார். அடுத்த நாள் அதாவது டிசம்பர் 25 முதல் முதல் ஜனவரி 2 வரை 9 நாட்கள் நடை பயணத்தை அவர் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார்.
ராகுல்காந்தியின் நடை பயணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், ரிசர்வ் வங்கி முன்னாள் இயக்குநர் ரகுராம் ராஜன் போன்ற சிறந்த ஆளுமைகளும், திரையுலக பிரபலங்களும் நடை பயணத்தில் ஆங்காங்கே கலந்து கொண்டனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுங்கள் அல்லது யாத்திரையை கைவிடுங்கள் என்று ராகுல்காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அண்மையில் அறிவுறுத்தியது. பாதுகாப்பு நெறிமுறைகளை ராகுல்காந்தி மீறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் குறை கூறியது.
இந்திய ஒற்றுமை நடைபயணத்தை லட்சியம் செய்யவில்லை என்பது போல் தொடக்கத்தில் காட்டிக் கொண்ட பா.ஜ.க. தற்போது ராகுல்காந்தியை சவால் தரும் போட்டியாளராக கருதுவதையே இது காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய அரசியல் சூழலில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, தேசிய அரசியல் குறித்தும், தன்னுடையை நடை பயண அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அதில் இடம் பெற்ற முக்கியமான 10 விஷயங்களைப் பார்க்கலாம்.
ராகுல் பேச்சில் இடம் பெற்ற 10 விஷயங்கள்
- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒரு சாதாரண பயணமாகவே இதனை தொடங்கினேன். இதற்கு உணர்வுகளும், குரலும் உண்டு என்பதை பின்னரே மெல்லமெல்ல அறிந்து கொண்டனர்.
- இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்க, அனைவருக்கும் வாசல் திறந்தே இருக்கிறது. யாரும், எப்போதும் நடை பயணத்தில் இணைந்து கொள்ளலாம். அகிலேஷ், மாயாவதி மற்றும் பலர் "அன்பான இந்துஸ்தானம்" அமைய விரும்புகின்றனர். கொள்கை ரீதியில் எங்களுக்குள் உறவு இருக்கிறது.
- பா.ஜ.க. மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. இது பா.ஜ.க. - காங்கிரஸ் இடையிலான தந்திரோபாய யுத்தமாக இனி இருக்கப் போவதில்லை. பொது நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பா.ஜ.க. வெல்வது மிகவும் கடினம் என்று களத்தில் பேசப்படுவதையும் கண்ணுற்றேன். அதற்கு, எதிர்க்கட்சிகள் சரியான ஒருங்கிணைப்புடன், பா.ஜ.க.வுக்கு மாற்றான செயல் திட்டத்தை மக்கள் முன் வைப்பது அவசியம்.
- எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள, மையப்படுத்தப்பட்ட கருத்தியல் கட்டமைப்பு அவசியம். அதனை காங்கிரசால் மட்டுமே தர முடியும். அதேநேரத்தில், ஒன்று கூடும் அனைத்து எதிர்க்கட்சிகளும் திருப்தியுடன் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு காங்கிரசுக்கு உண்டு.
- எழுதி வைத்துக் கொள்ளுங்கள், மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அபரிமிதமான வெற்றியைப் பெறும். பா.ஜ.க. படுதோல்வி அடையும். ம.பி.யில் பண பலத்தால் பா.ஜ.க. ஆட்சியமைத்தது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.
- நான் டி-சர்ட் அணிந்திருப்பதால் தேவையற்ற சலசலப்பு ஏன்? டெல்லி குளிர் குறித்த பயமில்லாதால் ஸ்வெட்டர் அணியவில்லை. குளிர் இருப்பதாக உணரும் போது ஸ்வெட்டர் அணிந்து கொள்வேன்.
- நடைபயணத்தின் போது குண்டு துளைக்காத வாகனத்தில் செல்லுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகிறது. நடைபயணம் என்று கூறிவிட்டு அவ்வாறு எப்படி செய்ய முடியும்? பாதுகாப்பு அதிகாரிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அவர்கள் தேவையின்றி சர்ச்சையாக்குகிறார்கள்.
- எங்களை குறிவைத்து விமர்சிக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு நன்றி. ஏனெனில், அவர்களது விமர்சனங்கள் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு உதவவே செய்கின்றன.
- பா.ஜ.க. இன்னும் ஆக்ரோஷமாக எங்களை விமர்சிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில், காங்கிரஸ் கட்சி அதன் சித்தாந்தங்களை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள அது உதவும்.
- பா.ஜ.க.வை என் குருவாக கருதுகிறேன். ஏனெனில், அவர்களே நான் செல்ல வேண்டிய பாதையை காட்டுகிறார்கள்; என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று கற்றுத் தருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








