ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பாஜகவுக்கு பயத்தைக் கொடுக்கிறதா?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை பயணம்' மேற்கொண்டுள்ளது குறித்து சமீபத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் பூகம்பத்தை உருவாக்கி வருகிறது,” எனத் தெரிவித்தார்.

அவர் கூறுவதைப் போல், ராகுல் காந்தி கன்னியாகுமரியில் முன்னெடுத்து இப்போது டெல்லி வரை வந்துள்ள பாரத் ஜோடோ யாத்திரை, மத்திய ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு சலனத்தை ஏற்படுத்தியுள்ளதா?

இந்த யாத்திரை குறித்து அவ்வப்போது பாஜக தலைவர்கள் எதிர்ப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெலங்கானாவில் கட்சி தொண்டர்களிடம் பேசியபோது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை, 'பாரத் தோடோ யாத்திரை' (இந்தியாவை உடைக்கும் பயணம்) என்று தாக்கிப் பேசினார்.

கடந்த வாரம் அவரது யாத்திரை ஹரியானாவை அடைந்த நேரத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை பெரும் பிரச்னைகளாக உள்ளன என்று மத்திய அரசைத் தாக்கிப் பேசினார்.

மேலும், மக்கள் கூட்டத்தின் முன்பாக அவர் பேசியபோது, “இரண்டு சித்தாந்தங்களுக்கு நடுவிலான மோதல் ஒன்றும் இந்த நாட்டில் புதியதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அது நடந்து வருகிறது. அதில் ஒரு சித்தாந்தம் குறிப்பிட்ட சிலருக்குப் பலன் அளிக்கும் வேளையில், மற்றொரு சித்தாந்தம் மக்கள், விவசாயிகள், உழைப்பாளிகளின் குரலாக உள்ளது,” என்று பேசினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்வதற்கான தேவை என்ன இருக்கிறது என்ற விமர்சனங்களை பாஜக தலைவர்கள் முன்வைத்தபோது, “அவர்கள் இந்த நாட்டில் வெறுப்பைப் பரப்பும்போது, நம்முடைய சித்தாந்தத்தைப் பின்பற்றும் மக்கள் அன்பைப் பரவலாக்குவதற்காகக் கிளம்புகிறார்கள்,” என்று பேசினார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

ராகுலின் யாத்திரையைக் கண்டு பாஜக அஞ்சுகிறதா?

சென்னையில் நடைபெற்ற ஆ.கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்துப் பேசினார்.

அப்போது, “ஒற்றுமை நடைபயணத்தை நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி நடத்தி வருகிறார். ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் பூகம்பத்தை உருவாக்கி வருகிறது. அவர் தேர்தல் அரசியலை, கட்சி அரசியலைப் பேசவில்லை. கொள்கை அரசியலைப் பேசுகிறார்.

அதனால்தான், ஒரு சிலரால் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். அவருடைய பேச்சுகள் சில நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப் போல் இருக்கின்றன. நேருவின் வாரிசு அப்படிப் பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். கோட்சேவின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தியுடைய நேருவின் வாரிசுகளின் பேச்சுகளைக் கேட்டால் கசக்கத்தான் செய்யும்,” எனக் கூறினார்.

“இந்த யாத்திரையில் திமுக குறிப்பிடத்தக்க பங்கை தொடர்ந்து வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தான் இந்த யாத்திரையைத் தொடக்கி வைத்தார். அங்கு தொடங்கி திமுக எம்பிக்கள் அதன் நீட்சியாகக் கலந்து கொண்டனர். ஹரியானாவில் கனிமொழி, அதற்கு அடுத்து தமிழச்சி தங்கபாண்டியன் என்று தொடர்ந்து பங்கு வகித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

திமுக மட்டுமின்றி சரத் பவார், உத்தவ் தாக்கரே என்று ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்து வருகிறது. ஆகவே, அரசியல்ரீதியாக இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

கடந்த மாதம் இதுகுறித்துப் பேசிய ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெஹ்லோத், நாட்டைத் தவறான பாதையில் வழிநடத்திச் சென்ற பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையால் ஆடிப்போய் இருக்கிறது என்று கூறினார்.

ஆளும் பாஜகவை குறிவைத்துப் பேசியவர், “அவர்கள் நாட்டு மக்களை தவறான பாதையில் வழிநடத்திச் சென்றுள்ளார்கள். ஆனால் இப்போது மக்கள் புரிந்துகொண்டார்கள்,” எனக் கூறினார்.

“ராகுல் முன்னெடுத்துள்ள இந்த பாரத் ஜோடோ யாத்திரை அவருடைய தனிப்பட்ட பிம்பத்தை கட்டமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அவருக்கு அரசியல் ஞானம் பெரியளவில் இல்லை என்ற விமர்சனத்தை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதிர்ச்சியான அணுகுமுறையைக் கையாள்வது, தினமும் 25 கி.மீ நடப்பது, அனைத்து தட்டு மக்களோடும் சேர்ந்து பயணிப்பது என்று அவருடைய தோற்றம் மற்றும் பிம்பத்தைக் கட்டமைப்பதற்கான முயற்சி இது,” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் பல்லவி கோஷ்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், மு.க.ஸ்டாலின் கூறியதைப் போல் ராகுலின் இந்த யாத்திரை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதா எனக் கேட்டபொது, எதிர்பார்க்கும் அளவுக்கு பாஜகவுக்குள் ராகுலின் இந்த யாத்திரை பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை என்றார் பல்லவி கோஷ்.

“காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்ப்பதன் மூலம் பாஜக லாபமடைகிறார்கள். மல்லிகார்ஜுன கார்கே போன்றவர்களை முன்வைத்து அதைச் செய்ய முடியாது. ஆனால், காந்தி குடும்பத்தார் மூலம் அதை அவர்களால் செய்ய முடியும்.

ராகுல் காந்தி விஷயத்திலும் அதைச் செய்யலாம். ஆகவே, பாஜக தரப்பிலிருந்து இந்த யாத்திரையை அவ்வளவு பெரிய அச்சுறுத்தலாகப் பார்ப்பதாகத் தெரியவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

''இந்தப் பயணத்தின்போது ராகுல் காந்தியின் உரைகள் நேரடியாக பிரதமர் நரேந்திர மோதியையும் பாஜகவையும் தாக்கின. நரேந்திர மோதியையும் அம்பானி, அதானி போன்ற இந்திய தொழில்துறையில் ஒற்றையாகக் கோலோச்சும் நிறுவனங்களையும் தாக்கிப் பேசுவதன் மூலம் தான் மக்களுடன் நிற்பதாக அவர் ஒரு செய்தியைக் கொடுக்க முயல்கிறார்.''

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

''அவர், வேலையற்றவர்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறுபான்மை மக்களுடன் நிற்பதாகப் பிரபலப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் மட்டுமின்றி, கட்சிகள் மத்தியிலும் நிகழ்வது பாஜகவுக்கு பயத்தைக் கொடுப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

மேலும், “2014, 2019 தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக நிலவிய சூழல் இப்போது இல்லை. இந்தச் சூழலில், ராகுல் காந்திக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு கிடைத்து வருவது அவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியை உருவாக்கி வருவதன் மூலம் கூட்டுத் தலைமை என்ற ஜனநாயக முறைக்கு வலு சேர்க்கும் முயற்சியை அவர் எடுத்திருப்பதும் மற்றவர்களும் வர வேண்டும் என்ற அணுகுமுறையைக் கையில் எடுப்பதும் இதற்கு ஒரு காரணம்,” என கூறுகிறார் அவர்.

பிரபலங்களை ஈர்த்த யாத்திரை சொல்வது என்ன?

செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய இந்த யாத்திரையில், ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பிரபலங்கள் அவருடன் இணைந்தனர்.

லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமின்றி, அவர் சென்ற மாநிலங்களில் அங்கிருக்கும் சில பிரபலங்களும் யாத்திரையில் பங்கெடுத்தனர்.

டிசம்பர் 14ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ராகுல் காந்தியுடன் கலந்துகொண்டார். பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கலந்துகொண்டார்.

அதேபோல், நவம்பர் மாதத்தில் சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், முன்னாள் ஐஐடி டெல்லி பேராசிரியர் விபின் குமார் திரிபாதி, இந்தி திரைப்பட இயக்குநர் ஒனிர், எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா கோகலே, இயக்குநர் அமோல் பாலேக்கர், மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர், பாலிவுட் நடிகை ரியா சென், வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன், ரோஹித் வெமூலாவின் தாயார் ராதிகா வெமூலா, பாடகர் டி.எம்.கிருஷ்ணா என்று பல பிரபலங்கள் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர்.

சனிக்கிழமையன்று டெல்லியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் கலந்துகொண்டார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டாம் எனப் பலர் தனக்கு அறிவுறுத்தியதாகவும் தான் ஒர் இந்திய குடிமகனாக கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், “ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப் பேரன். நான் பிற இந்திய குடிமகன்களைப் போலவே காந்தியின் கொள்ளுப் பேரன். இந்த யாத்திரையில் நான் ராகுலுடன் இணைந்து நடக்கிறேன். இது அரசியல் அடையாளம் அல்ல. இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கிப் போராடுவேன்,” என்று கூறினார்.

இவை, பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருப்பதைக் குறிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

அதற்குப் பதிலளித்த பன்னீர்செல்வன், “இந்தியாவில் தேர்தல் என்பது ஒன்றல்ல, 543 தேர்தல்கள் என்பது பாஜகவுக்கு நன்கு தெரியும். ஆகவே, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளூர் பிரச்னைகளுக்குப் பெரும் பங்கு உண்டு. அது நன்கு தெரிந்ததால், வேறு மாற்று எதுவுமில்லை என்று அவர்கள் காட்ட முயன்றார்கள்.

ஆனால், ராகுலுக்கு ஆதரவு கிடைக்கக் கிடைக்க, அது மோதிக்கான சதவீதத்தைக் குறைக்கிறது. அதில் இந்த யாத்திரைக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இதன்மூலம், அவர் ஒரு மாற்றாக வளர்ந்து வருவது தான் அவர்களுக்கு பயத்தைக் கொடுக்கிறது,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: