ராகுல் காந்தியின் செல்வாக்கை வளர்க்க பாரத் ஜோடோ யாத்திரை எந்த அளவுக்கு உதவும்?

பாரத் ஜோடோ யாத்திரை

பட மூலாதாரம், RAHUL GANDHI/FB

    • எழுதியவர், இக்பால் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தானில் இருக்கிறார். யாத்திரையின் 100 நாட்களை நிறைவு செய்த பிறகு செய்தியாளர்களையும் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பாடகி சுனிதி செளஹான் கலந்து கொண்டார்.

இமாச்சல பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு தனது எல்லா எம்எல்ஏக்களுடன் ஜெய்ப்பூரில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’( இந்தியா இணைப்பு நடைப்பயணம்) யில் இணைய உள்ளார்.

இந்த நடைப்பயணத்தை ராகுல் காந்தி செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.

பல மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் உள்ள அவர், சுமார் 3750 கிலோமீட்டர் பயணம் செய்து, அநேகமாக பிப்ரவரியில் காஷ்மீரை அடைந்து அங்கு பயணம் முடிப்பார்.

ராகுல் காந்தியின் இந்த பயணத்தில் ​​சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

திரையுலகில் இருந்து ஸ்வரா பாஸ்கர், பூஜா பட், ரியா சென் மற்றும் ஆனந்த் பட்வர்தன் ஆகியோர் இணைந்தனர். இதில் சமூக ஆர்வலர் அருணா ராயும், தெலங்கானாவில் ரோஹித் வெமூலாவின் தாயாரும் கலந்துகொண்டனர்.

சிவசேனையின் ஆதித்ய தாக்கரே, மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். விளையாட்டு உலகில் இருந்தும் பலர் இந்த யாத்திரையில் இணைந்துள்ளனர்.

ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவும் ராகுல் காந்தியுடன் சென்றார். இந்தப் பயணத்தில் இதுவரை பங்கேற்றவர்களில் அதிகமாக பேசப்பட்டவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன்.

புதன்கிழமை ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் நடந்த இந்த யாத்திரையில் ராஜன் கலந்து கொண்டார். இதன்பின், பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பான எல்லா விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பை பாஜக விமர்சித்துள்ளது.

ராகுல் காந்தியுடன் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன்

பட மூலாதாரம், BHARAT JODO/ FB

படக்குறிப்பு, ராகுல் காந்தியுடன் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன்

பாஜகவின் எதிர்வினை

"முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அரசை நடத்தியதில் நாடு பத்து வருடங்களை இழந்தது. மோதிக்கு நன்றி, இந்தியா இந்த தவறை மீண்டும் செய்யாது" என்று பாஜகவின் வெளியுறவு விவகாரங்கள் துறைத் தலைவர் விஜய் சவுதைவாலே ட்வீட் செய்துள்ளார்.

இந்த யாத்திரைக்கு ஆரம்பம் முதலே பாஜக கண்டனம் தெரிவித்து வருகிறது.

பாஜக தலைவர் ஜேபி நட்டா வியாழக்கிழமை தெலங்கானாவில் கட்சி தொண்டர்களிடம் பேசினார். அப்போது ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ யை தாக்கிப்பேசிய அவர், இது ‘பாரத் தோடோ யாத்திரை’( இந்தியாவை உடைக்கும் யாத்திரை) என்றார்.

"ராகுல் காந்தியின் முன்னோர்கள் இந்தியாவை உடைக்கும் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. எனவே இது ஒரு பிராயச்சித்த யாத்திரை,”என்று நட்டா கூறினார்.

ஒருபுறம் பாஜக இதை ‘ பாரத் தோடோ யாத்திரை’ என்று கூறிவரும் வேளையில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் இதில் இணைகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் இதுவரையிலான பயணத்தை எப்படி மதிப்பிடுவது என்பது பெரிய சவாலாக உள்ளது. இந்த காலகட்டத்தில், குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்கள், டெல்லியில் எம்சிடி தேர்தல், ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஐந்து மாநிலங்களில் ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தன.

குஜராத்தில் பாஜக தனது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அதே நேரம் காங்கிரஸ் தன் மோசமான தோல்வியை சந்தித்தது.

இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆயினும் டெல்லியில் நடந்த முனிசிபல் தேர்தலில் அது மிக மோசமான தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

 Amol Palekar

பட மூலாதாரம், BHARAT JODO/ FB

படக்குறிப்பு, ராகுல் காந்தியின் நடைபயணத்தில் அமோல் பாலேகர் போன்ற பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்

ஆனால் இந்த தேர்தல் முடிவுகளையும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தையும் இணைத்துப்பார்க்க வேண்டுமா? இதற்கான பதிலை காங்கிரஸின் ஊடகப் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

'பாரத் ஜோடோ யாத்திரை' என்பது 'தேர்தல் வெற்றி' அல்லது 'தேர்தலில் வெற்றி பெறச்செய்யும்' யாத்திரை அல்ல என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவதும், அதற்கு புத்துயிர் கொடுப்பதும் யாத்திரையின் நோக்கங்களில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.

மோதி அரசின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளால் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. சமூக ஒருமுனைப்படுத்தல் அதிகரித்துவிட்டது. அரசியல் சர்வாதிகாரம் நிஜமாகிவிட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

'ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் உண்மையான நோக்கம், இந்த மூன்று விஷயங்கள் தொடர்பாக இந்திய மக்களுடன் இணைவதும்,அது பற்றி மக்களிடம் சொல்வதும் ஆகும்.

இந்த யாத்திரையை காங்கிரஸே முடிவு செய்த அளவுகோலில் மதிப்பிட வேண்டும் என்றால், இந்த யாத்திரையால் ராகுல் காந்திக்கு இதுவரை என்ன லாபம், என்ன நஷ்டம் என்ற கேள்வி எழுகிறது.

”இந்த யாத்திரையின் நோக்கம் என்ன என்பது தெரியாமல் நான் குழப்பினேன். ராகுல் காந்தி ஒரு தத்துவவாதியும் இல்லை, மத தலைவரும் இல்லை. ராகுல் காந்தி ஒரு முழுமையான அரசியல்வாதி, எனவே அவரை அரசியலில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது,” என்று பிரபல பத்திரிகையாளர் ராதிகா ராமசேஷன் தெரிவித்தார்.

”யாத்திரையின் போது மக்கள் ராகுல் காந்தியுடன் இணைவது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அரசியல் ரீதியாக இது என்ன சாதித்தது என்பதை தீர்மானிப்பது கடினம்,”என்று அவர் மேலும் கூறினார்.

பாரத் ஜோடோ யாத்திரை

• செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது

• இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் வழியாகச் சென்றது

• தற்போது இந்த காங்கிரஸ் யாத்திரை ராஜஸ்தான் வழியாகச்செல்கிறது.

• ஹரியாணா, உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் வழியாகச்செல்ல திட்டம்.

• இந்த நடைப்பயணத்தில் பல பிரபலங்கள் இணைந்தனர்.

•அநேகமாக பிப்ரவரியில் பயணம் முடிவடையும்

Actor Sushant Singh joins the yatra with Rahul Gandhi

பட மூலாதாரம், BHARAT JODO/ FB

படக்குறிப்பு, இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் நடிகர் சுஷாந்த் சிங் கலந்து கொண்டார்

காங்கிரஸ் அமைப்பு எவ்வளவு வலுவடைந்தது

காங்கிரஸ் அமைப்பைப் பற்றி பேசினால், பல மாநிலங்களில் காங்கிரஸ் அமைப்பு இன்னும் உள்ளது, சில இடங்களில் பலவீனமாக உள்ளது, சில இடங்களில் முழுமையாக முடிந்துவிட்டது என்று ராதிகா ராமசேஷன் குறிப்பிட்டார்.

அதன் விளைவு கர்நாடகாவில் தெளிவாகத் தெரிந்தது என்கிறார் அவர். அங்கு சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து பணியாற்றி, ராகுல் காந்தியின் பயணத்தை வெற்றி அடையச்செய்தன.

”மகாராஷ்டிராவில் சிவசேனை மற்றும் என்சிபிக்கு பின்னால் காங்கிரஸ் ஒரு சிறு கட்சியாக மாறிவிட்டது. இருந்தபோதிலும் கூட ராகுல் காந்தியின் பயணத்தின்போது காங்கிரஸ் அமைப்பு வலுவாகத்தோன்றியது,” என்று அவர் மேலும் கூறினார்.

ராஜஸ்தான் பற்றிக் குறிப்பிட்ட ராதிகா,”அஷோக் கேலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே வேறுபாடுகள் இருந்தபோதிலும், கூட்டத்தைத் திரட்டுவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்தது,” என்றார்.

காங்கிரஸ் அமைப்பு எந்த அளவுக்கு வலுப்பெற்றுள்ளது என்பதற்கான உண்மையான சோதனை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்திஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2024 பொதுத் தேர்தலுக்கு முன் சட்டப்பேரவைத்தேர்தல் நடக்க உள்ளது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு தீவிரமான பிரச்சனை என்று ராதிகா ராமசேஷன் கூறினார். குஜராத் தேர்தலின் போது ​​அது மக்களிடையே ஒரு பிரச்சனையாக இருந்தது. ஆனாலும் தேர்தல் முடிவுகளில் அது எந்த விளைவையும் காட்டவில்லை என்று அவர் சொன்னார்.

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம், பொது மக்களிடையே பெரும் பிரச்சனைகளாக உள்ளன. ராகுல் காந்தி தொடர்ந்து இதுபற்றி குரல் எழுப்பினால், 2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதாயம் கிடைக்ககூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக சமூக ஒருமுனைப்படுத்தல் அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனால் இந்த விஷயத்தில் பாஜக மிகவும் வெற்றியடைந்துள்ளது என்றும், ராகுல் காந்தி பேசுவது அவரது பலவீனமான பிரச்சனை என்றும் அது மக்களை பாதிக்கவில்லை என்றும் ராதிகா ராமசேஷன் கருதுகிறார்.

அரசியல் சர்வாதிகாரம்' என்ற விஷயத்தில் நரேந்திர மோதியை சுற்றி வளைக்கும் காங்கிரஸின் முயற்சியும் பெரிதாக வெற்றிபெறவில்லை.

"இன்றும் நரேந்திர மோதியின் பிரபலம் மிகவும் உச்சத்தில் உள்ளது. சர்வாதிகார விஷயம் மக்கள் மனதில் பதியவில்லை. மோதி எமர்ஜென்சியை அமல்படுத்தவில்லை, எனவே சர்வாதிகாரம் எங்கிருந்து வந்தது என்று மக்கள் சொல்கிறார்கள்,” என்கிறார் ராதிகா ராமசேஷன்.

2024 பொதுத்தேர்தலே இலக்கு

இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம், பாஜகவின் சித்தாந்தத்திற்கு நேர்மாறாக, ஒரு வித்தியாசமான சித்தாந்தத்தை பொதுமக்கள் முன் வைப்பதே என்று மூத்த பத்திரிகையாளரும், தற்போது டெல்லியில் உள்ள திங்க் டேங்க் சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச் (CPR) உடன் தொடர்புடையவருமான ஆசிம் அலி, கருதுகிறார்.

இந்த யாத்திரையின் மூலம் காங்கிரஸ் தனது சித்தாந்த நெருக்கடியை சமாளித்துவிட்டதாகவும், அது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

பிரபல அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் ஃஜோயா ஹாசன் ட்ரிப்யூன் நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை, அரசியலில் பெரும்பான்மைவாதம், சமூகப் பிளவு மற்றும் சகிப்பின்மைக்கு எதிராக ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்துவதற்கான முதல் தீவிர முயற்சி என்று அதில் அவர் கூறியுள்ளார்.

”இதுவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே சித்தாந்தம் பற்றி பேசப்படுகிறது. மேலும் பாஜக முன்வைக்கும் சித்தாந்த பிரச்சனைகளுக்கு (லவ் ஜிகாத் மற்றும் பசு வதை போன்றவை) காங்கிரஸ் பதிலளிக்க வேண்டியுள்ளது. மேலும் அவற்றில் பாஜக வெற்றி பெறுகிறது,” என்று ஆசிம் அலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்கள் மற்றும் பிற அமைப்புகளின் நம்பகத்தன்மை முற்றிலுமாக அழிந்துவிட்டது. எனவே மக்களிடம் நேரடியாக தொடர்புகொள்ள தான் வந்திருப்பதாக ராகுல் காந்தி மக்களிடம் தெரிவிக்க முயல்வதாகவும் அவர் கூறுகிறார். ராகுல் காந்தி எந்த மாநிலத்தேர்தலைப் பற்றியும் கவலைப்படவில்லை என்றும், அவரது முழுகவனமும் 2024 தேர்தலில் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், இந்த யாத்திரைக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறது. அதற்குப் பதிலளித்த ஆசிம் அலி, ”ஆம் ஆத்மி கட்சியின் ’இண்டியா அகெய்ன்ஸ்ட் கரப்ஷன்’ (2011-12) அல்லது ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் நடத்திய யாத்திரையின்போதும், இப்படித்தான் சொல்லப்பட்டது. ஆனால் இது முழுமையாக ஒரு அரசியல் யாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே,”என்றார்.

ராகுல் காந்தியின் இமேஜ் மீதான தாக்கம்

இந்தப் பயணத்தால் ராகுல் காந்தி அல்லது காங்கிரஸுக்கு என்ன லாபம் என்று கேள்விக்கு பதிலளித்த ஆசிம் அலி, ராகுல் காந்தியின் தனிப்பட்ட இமேஜ் மீது மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

இதற்கு நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவை ஆசிம் அலி உதாரணம் காட்டினார்.”காம்ரா முன்பு ராகுல் காந்தியை கேலி செய்தார். ஆனால் குணால் காம்ராவே யாத்திரையில் ஈடுபட்டது, பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான் என்று கருதிய சிவில் சமூகத்தின் ஒரு பகுதியினரின் சிந்தனை மாறி வருவதன் அறிகுறி,”என்று அவர் குறிப்பிட்டார். ஊடகங்கள் இப்போது ராகுல் காந்தியைப் பற்றி மிகக் குறைவாகவே பேசுகின்றன, இது ராகுல் காந்திக்குக் கிடைத்த வெற்றி என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் முன்பு ஊடகங்கள் ராகுல் காந்தியைப் பற்றி எதிர்மறையாகவே பேசிவந்தன.

இந்தப்பயணத்தின் மூலமாக வெளியாகும் தோற்றம் பெரிய அளவில் ஒரு செய்தியைக் கொடுக்கிறது என்று ஆசிம் அலி கருதுகிறார்.

ராகுல் காந்தியின் செய்தி மிகவும் தெளிவாக உள்ளது. வேலையற்றோர், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், விவசாயிகள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் அவர் நிற்பதையும், 2024 தேர்தலில் ஒரு நேர்கோட்டு சித்தாந்தத்தை வரைய முயற்சிப்பதையும் அது காட்டுகிறது.

'மோதி ஆட்சியின் போது ​​இந்தியாவின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் எல்லா நன்மைகளையும் பெறுகின்றன என்றும் சமூகத்தின் மீதமுள்ள பகுதி வஞ்சிக்கப்படுவதாகவும் மக்களை நம்ப வைக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்.

மோதி அரசையும், ஒரு சில வணிக நிறுவனங்களையும் எதிர்ப்பதாகவும், அவர்களால் அவதிப்படும் மக்களுடன் தான் நிற்பதாகவும் இந்தப் பயணத்தின் மூலம் ஒரு செய்தியைக் கொடுக்க ராகுல் காந்தி முயன்று வருகிறார் என்று அவர் கூறுகிறார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரை 2024 தேர்தலில் காங்கிரஸ் எந்தெந்த விஷயங்களை முன்வைத்துப்போட்டியிடும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என்று ஆசிம் அலி குறிப்பிடுகிறார்.

 Anand Patwardhan

பட மூலாதாரம், BHARAT JODO/ FB

படக்குறிப்பு, பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன்.

பாரத் ஜோடோ மீதான ஊடக பார்வை

ராகுல் காந்தியின் பயணம் குறித்து ஊடகங்கள் மிகக் குறைவாகவே செய்தி வெளியிட்டுவருவதால் மக்களுக்கு தனது செய்தியை தெரிவிப்பதில் ராகுல் காந்தியால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.

மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களில் குறைவான கவரேஜ் இருப்பதால், இந்த யாத்திரையை விளம்பரப்படுத்த காங்கிரஸ் சமூக ஊடகங்களை சார்ந்திருக்கிறது.

இந்தியாவில் 49 சதவிகிதம் பேர் டிவி சேனல்களிலிருந்து செய்திகளைப் பெறுகிறார்கள், 10 சதவிகிதம் பேர் செய்தித்தாள்களில் செய்திகளைப் படிக்கிறார்கள். மூன்று சதவிகிதம் பேர் மட்டுமே சமூக ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்துகொள்கிறார்கள் என்று 2019 ஆம் ஆண்டின் CSDS இன் கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி ஆசிம் அலி கூறுகிறார்.

ஆனால், சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள் மத்தியில் மொபைல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருவதும் காங்கிரசுக்கு குறிப்பாக ராகுல் காந்திக்கு ஒரு நல்ல செய்தி என்பதும் உண்மைதான்.

ஆயினும் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறார் என்பதன் சரியான மதிப்பீட்டை தேர்தல் முடிவுகளில் இருந்துதான் தீர்மானிக்க முடியும் என்பதை எல்லா அரசியல் ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: