திருச்சி சூர்யா மீது பெண் நிர்வாகி அலிஷா மீண்டும் குற்றச்சாட்டு - என்ன நடக்கிறது தமிழ்நாடு பாஜகவில்?

தன்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக பா.ஜ.கவிலிருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா மீது அக்கட்சியின் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பா.ஜ.கவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் ஓ.பி.சி. பிரிவுச் செயலர் திருச்சி சூர்யா சிவா, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா மற்றும் அக்கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அலிஷாவை அமர் பிரசாத் ரெட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அலிஷா பத்து லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்திருப்பதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், தான் அலிஷாவைச் சந்தித்தபோது தான் பேசியவற்றை வீடியோ எடுத்து, அதனைப் பலரிடம் பரப்பிவருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள பா.ஜ.கவின் மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அலிஷா அப்துல்லா, திருச்சி சூர்யா சிவா கூறியவற்றை கடுமையாக மறுத்தார்.
"30 நிமிடப் பேட்டியில் 27 நிமிடம் பெண்களைப் பற்றி அசிங்கமாகப் பேசினார். பா.ஜ.க. குறித்து, எனது குடும்பம் குறித்து, என்னைப் பற்றி அசிங்கமாகப் பேசினார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பா.ஜ.கவில் நான் சேர்ந்த நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு சூர்யா சிவா எனக்குப் போன் செய்தார். புதிதாக கட்சியில் சேர்ந்திருப்பதால், வழிநடத்தும்படி தலைவர் கூறியதாக தெரிவித்தார்.
"அண்ணாமலை பெயரை தவறாக பயன்படுத்தினார்"
பிறகு எனது அலுவலகத்திற்கு வந்தவர் தன்னைப் பற்றிப் பெருமையடித்துக்கொண்டார். வந்த விஷயத்தைச் சொல்லும்படி சொன்னேன். நான் விளையாட்டுப் பிரிவில் இருக்கக்கூடாது என்றும் பெண்கள் பிரிவுக்குச் செல்லும்படியும் கூறிய அவர், அமர் பிரசாத் ரெட்டி குறித்தும் பிற தலைவர்கள் குறித்தும் மோசமாகப் பேசினார்.
பிறகு நீங்கள் புடவை கட்டும்விதம் சரியில்லை. ஜிம்மிற்குப் போகும்போது சிறிய ஆடை அணியாதீர்கள். தலைவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்றார். என்னுடைய வயிற்றைப் பற்றியும் உடலுறுப்புகளைப் பற்றியும் தவறாகப் பேசினார். நான் அவரை வெளியேறச் சொன்னேன். பிறகு தலைவரிடம் (அண்ணாமலை) தெரிவித்தேன். தான் யாரையும் அனுப்பவில்லையென அவர் சொன்னார்.
பிறகு இதையெல்லாம் அமர் பிரசாத் ரெட்டியிடம் சொன்னேன். தலைவரிடம் புகார் செய்தேன். அவர், திருச்சி சூர்யா சிவாவை அழைத்து கண்டித்தார். பா.ஜ.கவில் இருக்கும்போது அவர் அளித்த பல பேட்டிகளில் இதைப் பற்றிப் பேசாத சூர்யா சிவா, இப்போது தவறாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

"யாருக்கும் பணம் தரவில்லை"
பிறகு, திருச்சி சூர்யாவை பேட்டி கண்ட ஊடகவியலாளர் குறித்தும் தனது வருத்தங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார் அலிஷா.
"நான் திருச்சி சூர்யாவை எனது அலுவலகத்தில்தான் சந்தித்தேன். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில்தான் எல்லாம் பதிவு செய்யப்பட்டது. அதை 'ஹனிட்ராப்' என்று சொல்லக்கூடாது. அவர் அங்கே பேசியதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. எல்லா தலைவர்களையும் மோசமாகப் பேசினார். அதையெல்லாம் வெளியிட முடியாது. பெண்கள் எல்லா துறைகளிலும் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் மேல் வர வேண்டியுள்ளது. அவர்களை தவறாகப் பேசாதீர்கள்" என்றார் அலிஷா அப்துல்லா.
பிறகு, அமர் பிரசாத் ரெட்டிக்குப் பணம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்துக் கேட்டபோது, தன்னுடைய கணக்கிலிருந்து அமர் பிரசாத் ரெட்டிக்கோ, பா.ஜ.கவுக்கோ ஒரு ரூபாய்கூட தரவில்லை என்றார் அலிஷா. தன்னைக் கட்சியில் எல்லோரும் மரியாதையோடு நடத்துவதாகவும், யாரும் காரில் நீண்ட பயணத்திற்கெல்லாம் அழைத்ததில்லை என்றும் தெரிவித்தார். தான் கட்சிக்காக பணம் கொடுத்ததை நிரூபித்தால், கட்சியைவிட்டு விலகிவிடுவதாகவும் கூறினார்.
இது குறித்து காவல்துறையில் புகார் அளிப்பதையும்தாண்டி பெரிதாக செய்யப்போகிறோம் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், பா.ஜ.கவின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட திரைக்கலைஞர் காயத்ரி ரகுராம், அலிஷா அப்துல்லாவிற்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தன்னைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது, தனக்குப் பின்னால் யாரும் நிற்கவில்லையென்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அலிஷா அப்துல்லா முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்பதற்காக சூர்யா சிவாவை பல முறை அழைத்தும் அவர், அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












