வளர்ப்பு நாய்களை சிறுத்தைக்கு உணவாக காட்டில் விட்டுச் சென்ற உரிமையாளர்

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஊட்டியில் வளர்ப்பு நாய்களை பராமரிக்க முடியவில்லை என்பதால் சிறுத்தைக்கு உணவாக காட்டுக்குள் கட்டி விட்டுச் சென்ற அதன் உரிமையாளர் மீது மிருக வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பெயர் உதயகுமார். அவர் மீது வழக்குப் பதிந்த போலீசார் அவரை கைது செய்து, பிணையில் விடுவித்துள்ளனர்.
வளர்ப்பு நாய்களை பராமரிக்காமல் விடுவதற்கு தண்டனை என்ன, கைவிடப்படும் நிலையில் உள்ள வளர்ப்பு பிராணிகளை கவனிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள், வசதிகள் தொடர்பான விவாதங்களை இந்த சம்பவம் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது?
டிசம்பர் 21 ஆம் தேதி, நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தீட்டுக்கல் வனப்பகுதியில் சிறுத்தை உலவும் இடத்தில் இரண்டு வளர்ப்பு நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளதாக வன ஆர்வலர்களுக்கு தகவல் தெரியவந்தது. 'கிரேட் டேன்’ வகையைச் சார்ந்த இரண்டு நாய்களும், ஒரு வார காலம் உணவில்லாமல் நலிவுற்றிருந்தன.
நாய்களை மீட்ட வன ஆர்வலர்கள், அதனை பிக்கட்டியில் இயங்கி வரும் சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கைவிடப்படும் நாய்கள்
வளர்ப்பு நாய்களை இவ்வாறு கைவிடுவது சமீப நாட்களாக அதிகரித்து வருவதாக கூறுகிறார், நீலகிரி மிருக வதை தடுப்பு சங்கத்தின் தொடர்பு அதிகாரி நாகினா. இவர் தான் இரண்டு நாய்களையும் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தவர்.
பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஊட்டியில் கைவிடப்பட்ட இரண்டு நாய்களையும் அதன் உரிமையாளர் பதிவு செய்யவில்லை. இந்த நாய்களை இனப்பெருக்கம் செய்வதற்காக வர்த்தக நோக்கக்களுடன் பயன்படுத்தி வந்துள்ளார். நாய்களுக்கு வயதாகிவிட்டதால் வேறு எந்த பயனும் இல்லை என்ற நிலையில் அவற்றை காட்டில் விட்டுச் சென்றிருக்கிறார், அதன் உரிமையார். இப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த சம்பவத்தில் உரிமையாளரை விரைவாகக் கண்டறிய முடிந்தது. ஆனால் ஒவ்வொரு மாதமும் 7 முதல் 8 சம்பவங்கள் வரை இப்படி நிகழ்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மிகவும் நலிவுற்ற நிலையில் இரண்டு ’ஜெர்மன் ஷெப்பர்ட்’ நாய்களை, தேயிலை தோட்டத்தில் கட்டிவிட்டு சென்றுவிட்டார்கள். அந்த நாய்களை அப்போது காப்பாற்ற முடியாமல் போனது. பெரும்பாலான நேரங்களில் உரிமையாளரை கண்டறிய முடிவதில்லை," என்றார்.

கை கொடுக்கும் பராமரிப்பு மையங்கள்
"வளர்ப்பு நாய்களை பராமரிப்பதற்கு சில இனப்பெருக்க மையங்கள் இயங்கி வருகின்றன. அதே போல் தற்காலிகமாக வளர்ப்பு நாய்களை விட்டுச் செல்வதற்கு 'போர்டிங்' (Boarding) மையங்கள் உள்ளன. குறுகிய காலம் வெளியூருக்கு செல்பவர்கள் தங்களின் வளர்ப்பு நாய்களை இங்கு விட்டுச் செல்லலாம். ஆனால் இவை முறையான அனுமதி பெற்று இயங்குவதில்லை. அதை உள்ளாட்சி அமைப்புகளும், கால்நடை வளர்ப்பு துறையும் கண்காணிக்க வேண்டும்," என்கிறார், நாகினா.
வளர்ப்பு பிராணிகளை கைவிடுவது சட்டப்படி குற்றமா?
விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி ரூபின் பிபிசியிடம் பேசுகையில், வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு உள்ளது என்றார் .
“வளர்ப்பு பிராணிகளை துன்புறுத்தினாலோ அல்லது கைவிட்டாலோ மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும்.
வளர்ப்பு பிராணிகள் நம் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவை. அவற்றை வாங்குவதற்கு முன்பே போதிய இட வசதி, பொருளாதார வசதி உள்ளதா? அவற்றுக்காக நேரம் ஒதுக்க முடியுமா? என்ற கேள்விகளைக் கேட்டு, முடியும் என்றால் மட்டுமே வாங்க வேண்டும். வளர்ப்பு பிராணிகள் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அவற்றை பதிவு செய்ய வேண்டும்.
ஊட்டி சம்பவத்திலும் மீட்கப்பட்ட வளர்ப்பு பிராணிகள் பதிவு செய்யப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு பிராணிகளைப் பதிவு செய்வது வலியுறுத்தப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களில் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை,” என்றார் அவர்.

அரசு என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு, ’வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ என புதிய திட்டத்தை அறிவித்து அதற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக இத்தகைய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அல்லது மாநகராட்சி இத்தகைய வளர்ப்பு மையங்களை நடத்துவதில்லை. சில தனியார் வளர்ப்பு மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் இத்தகைய வளர்ப்பு பிராணிகளை பராமரிக்கும் மையங்கள் சரிவர இயங்கவில்லை என்ற சர்ச்சைகளும் அவ்வப்போது எழுகின்றன. முறையாக செயல்படும் அமைப்புகள், அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். அவை முறையாக செயல்படுகின்றவா என கண்காணிக்கும் பொறுப்பு கால்நடை வளர்ப்பு துறைக்கு உள்ளது என்றார் ஆண்டனி ரூபின்.
வணிக நோக்கங்களுக்காக வளர்ப்பு நாய்களை முறையில்லாமல் பயன்படுத்துவது அதிகம் நிகழ்கிறது என்கிறார் கால்நடை மருத்துவர் திருநாவுக்கரசு.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் தன்னார்வ அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைந்து ஆதரவற்ற வளர்ப்பு நாய்களை பராமரிக்கும் மையங்களை நடத்தி வருகின்றன. உரிமையாளர்கள் தங்கள் நாய்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்த மையங்களில் விடலாம். ஆனால் வளர்ப்பு பிராணிகளை கேட்பாரற்ற நிலையில் விடுவது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்தார். வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நல்ல முறையிலேயே பார்த்துக் கொள்கிறார்கள். வணிக நோக்கம் கொண்ட ஒரு சிலர் தான் இது போன்ற செயல்களை செய்கிறார்கள்" என்றும் கூறினார் திருநாவுக்கரசு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













