நாய் கடிப்பது ஏன்? நாய்கள் மனிதர்களை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி இந்தி குழு
- பதவி, ㅤ
வழக்கமாக நடக்கும் பாதையை நாய்க் கடிக்கு பயந்து மாற்றிக்கொண்ட அனுபவம் உண்டா உங்களுக்கு? அப்படியெனில் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். நாய்க்கடிக்கான முதலுதவி குறித்தும் நாய்கள் ஏன் கடிக்கின்றன என்பது குறித்தும் எளிமையாகவும் விரிவாகவும் விளக்குகிறது இந்தக் கட்டுரை. சரி தொடங்கலாமா?
கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நடப்பது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது.
நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய் அல்லது வெறிநோய்) காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 55,000 பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலான நாய்க்கடி சம்பவங்கள் நடக்கின்றன. இந்தியாவில் ரேபிஸ் நோய் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் இறப்புகளில் 30 முதல் 60 சதவிகிதம், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளது. இதிலிருந்தே இதன் தீவிரத்தை அறிய முடிகிறது.

தெருநாய்க்கடி - சில சம்பவங்கள்
• கேரளாவில் கடந்த மாதம் ஒரு 12 வயது சிறுமி தெருநாய் கடிக்கு உள்ளானார். அவர் செப்டம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.
• சமீபத்தில், டெல்லியை ஒட்டியுள்ள காசியாபாத்தில் ஒரு குடியிருப்பு வளாக லிஃப்டில் பத்து வயது குழந்தையை நாய் கடித்தது.
• மும்பையில் உணவு விநியோகம் செய்த நபரை வளர்ப்பு நாய் காயப்படுத்தியது.
• உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னெளவில் ஒரு பிட் புல் வகை நாய் தனது 82 வயது எஜமானரையே தாக்கியது. அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
• காசியாபாத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி 6 வயது சிறுமி பிட் புல்லால் தாக்கப்பட்டார்.
• உத்தர பிரதேசத்தின் மற்றொரு நகரமான நொய்டாவில், ஜூலை மாதத்தில், மாவட்ட துணை ஆட்சியர் குஞ்சா சிங்கை தெருநாய் கடித்தது.

கேரளாவில் நாய்க் கடியால் பெண் குழந்தை இறந்த வழக்கில், வழக்கறிஞர் வி.கே.பிஜு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, செப்டம்பர் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மக்களின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் உரிமைகளுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டும் என்று கூறியது.
தெருநாய்கள் பிரச்னைக்கு பொருத்தமான தீர்வு காணப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நாய்கள் ஏன் கடிக்கின்றன?
"நாய் கடித்தலின் பெரும்பாலான நிகழ்வுகள் அப்பகுதியின் ஆதிக்கத்திற்கான சண்டை மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடையவை," என்று கால்நடை மருத்துவர் அஜய் சூட் கூறுகிறார்.
"ஒவ்வொரு நாயும் தன் எல்லையை வரையறுத்துக்கொள்கிறது. ஒருபுறம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. மறுபுறம் நாய்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் அவைகளின் பரப்பளவு குறையத் தொடங்கியுள்ளது. அப்பகுதியை பாதுகாப்பது கடினமாகும்போது நாய்கள் பாதுகாப்பின்மையை உணர ஆரம்பிக்கின்றன. மனிதன் தங்கள் பகுதிக்குள் நுழைகிறான் என்று நினைக்கத்தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில் அவை ஆக்ரோஷமாக மாறுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.
"சில நேரங்களில் நாய்கள் பயமுறுத்துவதை ஒரு விளையாட்டாகப் பார்க்கின்றன. நாய் ஒரு நபரை ஓட வைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவருக்கு பயம் ஏற்படுகிறது. மனிதர்கள் தங்களுக்கு பயப்படுகிறார்கள் என்பதை அவை உணரும்போது அதை ஒரு விளையாட்டு போல நினைக்கத் தொடங்குகின்றன. இந்த சூழலில் சில சமயங்களில் அவை கடிக்கவும் செய்கின்றன," என்று டாக்டர் அஜய் சூட் குறிப்பிட்டார்.
வெப்பநிலை அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, போக்குவரத்து இரைச்சல், பிரகாசமான விளக்குகள் போன்ற காரணிகளும் தெருநாய்களை பாதிக்கின்றன. இத்தகைய சூழ்நிலைகள் அவற்றை ஆக்ரோஷமாக்குகின்றன.

பட மூலாதாரம், AJAY SOOD
தெருநாய்கள் ஏன் கடிக்கின்றன?
வளர்ப்பு நாய்களை அவற்றை வளர்ப்பவர்கள்தான் கெடுக்கிறார்கள் என்கிறார் டாக்டர் அஜய் சூட்.
"இரண்டு-மூன்று மாத நாய்க்குட்டி எல்லாவற்றையும் தனது பற்களால் பிடிக்கிறது. ஏனென்றால் அதன் பற்கள் அப்போதுதான் வெளியே வரத்தொடங்குகின்றன. இந்த நேரத்தில் நாயை வளர்ப்பவர்கள் அதைத் தடுப்பதில்லை. அதை ஒரு விளையாட்டாக அனுபவித்து மகிழ்கின்றனர். பின்னர் அதுவே அதன் பழக்கமாகி விடுகிறது. நாய்க்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நேரம் அது," என்கிறார் அவர்.
டாக்டர் சூட் மற்றொரு காரணத்தையும் கூறுகிறார். "பலர் நாயைக் கொண்டு வந்து வீட்டின் ஒரு மூலையில் கட்டி வைத்துவிடுகின்றனர். மக்களுடன் கலந்து பழகாத, மூலையில் கட்டிவைக்கப்பட்ட அந்த நாய் ஆக்ரோஷமாக மாறுகிறது. அது பாதுகாப்பின்மையை உணர்கிறது. அது அதிக ஆக்ரோஷமாக இருந்தால் கடிக்க வாய்ப்புள்ளது."
நாய்கள் ஆக்ரோஷமாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று உணவு சமச்சீரின்மை.
சில சமயங்களில் வீடுகளில் உள்ள நாய்களுக்கு, கொடுக்க வேண்டியதை விட அதிக உணவு கொடுக்கப்படுகிறது அல்லது அவற்றின் செயல்பாடுகள் இருக்கவேண்டிய விகிதத்தில் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில் உடல் ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவை ஆக்ரோஷமாக மாறுகின்றன.
"அதிக ஆபத்தானவை தெரு நாய்களா வளர்ப்பு நாய்களா என்றால், அது இனத்தைப் பொருத்தது என்பதே அதற்கான எளிய பதில். ஹைப்பர்-ப்ரீட் நாய் என்றால் அது நிச்சயமாக மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்," என்று இந்தியாவில் கால்நடைகளுக்காகப் பணியாற்றும் ஃப்ரென்டிகோஸ் அமைப்பைச் சேர்ந்த அபிஷேக் சிங் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"ஒரு நாய் ஹைப்பர்-ப்ரீட் என்றால், அதன் மனநிலை எப்போது மாறும் என்று சொல்லமுடியாது. ஒருவேளை நீங்கள் அதை தவறான இடத்தில் தொட்டிருக்கலாம் அல்லது அதன் 'தொடுதல்' உங்களுக்கு புரியவில்லை என்றால் அது தாக்கக்கூடும்."
வளர்ப்பு நாய் கடிப்பதற்கும் தெருநாய் கடிப்பதற்கும் இடையே வித்தியாசம் என்ன?
வளர்ப்பு நாய் கடிப்பதற்கும் தெருநாய் கடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்று டாக்டர் சூட் தெரிவிக்கிறார். சாதாரணமாக ஒரு வளர்ப்பு நாய் கடித்தால் அது உடனே பின்வாங்கிவிடும்.
"பொதுவாக வளர்ப்பு நாய்களுக்கு தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். அதனால் யாரையாவது கடித்தபின் பின்வாங்கிவிடும். அதேசமயம் தெரு நாய்கள் 'வேட்டையாடும்' நடத்தைக்கு மாறிவிடும். கடிக்கும் போக்கு ஏற்பட்டுவிடும்," என்கிறார் அவர்.
வளர்ப்பு நாய்களுக்கு பொதுவாக தடுப்பூசி போடப்படுகிறது. தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில், அவை கடித்தால் ரேபிஸ் வரும் அபாயம் அதிகம்.
'வெறி நாய் கடிப்பது' என்றால் என்ன?
வெறி நாய் கடித்தால், அதை நான்கு நாட்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அது உயிருடன் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை, ஆனால் இறந்தால் ஆபத்து என்றும் சொல்லப்படுகிறது.
"ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட நான்கு முதல் பத்து நாட்களுக்குள் ஒரு நாய் இறந்துவிடும். அத்தகைய சூழ்நிலையில் ஒருவரை தெரு நாய் கடித்தால், அந்த நாளில்தான் அதற்கு தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதி அது கண்காணிக்கப்படுகிறது. ஆகவே ஒரு தெருநாய் கடித்தால், நீங்கள் கட்டாயமாக ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்."
ரேபிஸ் நோயில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது ' டம்ப்' (Dumb) ரேபிஸ். இந்த வகை நோயில் நாயின் உடலின் நரம்புகள் தளர்ந்து, அது ஒரு மூலையில் படுத்திருக்கும். பின்னர் அது பக்கவாதத்தால் முடங்கி நான்கு நாட்களில் இறந்துவிடும்.
இரண்டாவது 'ஃப்யூரியஸ்' (Furious) ரேபிஸ். இதில் நாய் இறப்பதற்கு பத்து நாட்கள் ஆகும். இந்த நேரத்தில் அது மிகவும் ஆக்ரோஷமாக மாறும்.
"இந்த வகை ரேபிஸில் நாய் ஆக்ரோஷமாக மாறும். உமிழ்நீரை விழுங்க முடியாமல் போவதால் அதன் உமிழ்நீர் வடியும். தொண்டை நரம்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன. செய்வதறியாமல் அவை கடிக்கத் தொடங்கும்," என்று டாக்டர் சூட் கூறுகிறார்.
நாய் கடித்தால் என்ன செய்யவேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
நாய் கடித்தால் ரேபிஸ் வந்துவிடுமோ என்ற பயம் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.
முதலில் நாய் கடித்த இடத்தை தண்ணீர் மற்றும் சோப்பினால் குறைந்தது பத்து நிமிடங்களாவது கழுவ வேண்டும் என்று டாக்டர் சூட் கூறுகிறார். அதன் பிறகு, பெட்டாடைனைப் பயன்படுத்துங்கள் என்கிறார் அவர்.
"வழக்கமாக, வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எனவே ரேபிஸ் ஆபத்து இல்லை. அந்த நிலையில் அதை ஒரு சாதாரண காயம் போல கருதுங்கள். ஆனால் ஒரு தெரு நாய் உங்களைக் கடித்தால், நாயை கண்காணியுங்கள். நாய் இறந்தால், 'ரேபிஸ் தடுப்பூசி' போட்டுக்கொள்ளுங்கள்."
"வெறிநோய் தடுப்பூசி விஷயத்தில் முதல் பத்து நாட்கள் கண்காணிக்க வேண்டும். நாய் கடித்த நாள், மூன்றாம் நாள், ஏழாவது நாள், பதினான்காம் நாள், அதன்பின் இருபத்தெட்டாம் நாள்.. அதாவது ஐந்து ஊசிகள் போடப்படுகின்றன," என்று டாக்டர் சூட் தெரிவித்தார்.
ஒரு ரேபிஸ் தடுப்பூசியின் விலை 300-400 ரூபாய். இதற்கு முன், இம்யூனோகுளோபுலின் ஊசி போடப்படுகிறது. இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
நாய் வளர்ப்பில் உள்ள விதிகள்
ஒவ்வொரு நாய்க்கும் அதன் தனிப்பட்ட சூழல் உள்ளது.
உதாரணமாக, ஜெர்மன் ஷெப்பர்ட் ஆடுகளை மேய்க்க பயன்படுத்தப்படுகிறது. எனவே அது தினமும் நடக்கவில்லை என்றால் பிரச்னை ஏற்படும்.
இதேபோல், பிட் புல் போன்ற ராட்சத நாய்கள் உண்மையில் காவல் நாய்கள். உங்களிடம் நிறைய இடம் இருந்தால் அவற்றை வளர்ப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் உங்களிடம் இடம் குறைவாக இருந்தால் அவற்றை வளர்க்க வேண்டாம். குறைவான இடத்தில் வளர்ப்பது அவற்றின் உடல் நலத்திற்கு நல்லதல்ல.
உங்களிடம் இடம் குறைவாக இருந்தால், சிறிய இன நாய்களை வைத்துக்கொள்ளுங்கள்.
வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் கீழ்க்கண்ட விஷயங்களை கண்டிப்பாகச்செய்ய வேண்டும் என்கிறார் கால்நடைகளுக்காகச் செயல்படும் ஃப்ரென்டிகோஸ் அமைப்பின் உறுப்பினர் அபிஷேக் சிங்.
- உங்கள் செல்லப் பிராணிகளுக்கு எல்லா தடுப்பூசிகளையும் போட வேண்டும்.
- தடுப்பூசி அட்டை முழுமையாக அப்டேட் செய்யப்பட வேண்டும்.
- முறையாக உடல்நலப் பரிசோதனை செய்ய வேண்டும்.
- செல்லப் பிராணியை எங்கோ அழைத்துச்சென்று அவற்றை கைவிடக்கூடாது.
- அவற்றை துன்புறுத்தக்கூடாது.
- இது தவிர, ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திகும் அதன் தனிப்பட்ட சிறப்பு விதிகள் உள்ளன. அவை பின்பற்றப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















