முதோல் வேட்டை நாய்: நரேந்திர மோதி பாதுகாப்பு படையில் இடம்பிடிக்கும் கர்நாடக நாய் வகையின் கதை

முதோல் நாய்

பட மூலாதாரம், Rashmi Mavinkurve

    • எழுதியவர், இமரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக, பெங்களூரு

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பாதுகாப்புக்கு பிரத்யேகப் பொறுப்பு வகிக்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழு, தங்களுடைய மோப்ப நாய் பிரிவில் முதோல் வேட்டை நாய்களை இடம்பெற வைக்கவுள்ளது.

மிகவும் சுறுசுறுப்பானதாக கருதப்படும் இந்த வகை நாய்கள், எல்லா காலச்சூழலுக்கு தக்கபடி வாழும் தன்மையைக் கொண்டது.

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள நாய்கள் ஆராய்ச்சி தகவல் மையத்தில் (CRIC) இந்த வகை நாய்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இவை இந்திய குடும்பங்களில் சாதாரணமாக உண்ணும் உணவை உண்கின்றன.

ஒரு நாளைக்கு இரண்டு முறை தலா அரை கிலோ மக்காச்சோளம், கோதுமை, துவரம் பருப்பு மட்டுமே இவற்றுடைய உணவு. இத்துடன் இவற்றுக்கு தினமும் இரண்டு முட்டையும் அரை லிட்டர் பாலும் வழங்கப்படுகிறது.

பல தனியார் செல்லப்பிராணி வளர்ப்போர் இந்த வகை நாய்களுக்கு வாரம் கொஞ்சம் கோழிக்கறியும் கொடுக்கிறார்கள்.

நரேந்திர மோதி

படையில் இவை இடம்பெற என்ன காரணம்?

முதோல் நாய்களுக்கு நீளமான தலை, கழுத்து மற்றும் மார்பு இருக்கும். கால்கள் நேராகவும், வயிறு மெலிந்தும் இருக்கும். காது கீழ்நோக்கி இருக்கும்.

கிரேட் டேனுக்குப் பிறகு உள்நாட்டு இனங்களில் இது மிக உயரமான நாயாக கருதப்படுகிறது. இதன் சராசரி உயரம் 72 செ.மீ ஆகவும் எடை 20 முதல் 22 கிலோ வரையிலும் இருக்கும்.

கண் இமைக்கும் நேரத்தில் முதோல் நாய்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை பாய்ந்து ஓடும் திறன் கொண்டவை.

இந்த நாய்களின் உடல் ஒரு விளையாட்டு வீரரைப் போன்றது. வேட்டையாடுவதில் இவற்றுக்கு ஈடு இணையில்லை.

முதோல் நாய்களின் சில பண்புகள் வியப்பூட்டுவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இவற்றின் கண்கள் 240 டிகிரி முதல் 270 டிகிரி வரை சுழலும். இருப்பினும், சில உள்நாட்டு இன நாய்களை விட இவற்றுக்கு வாசனை உணர்வு குறைவாக உள்ளது. குளிர்ந்த காலநிலையுடன் ஒத்துப்போவதில் இவற்றுக்கு சிக்கல் இருக்கலாம்.

பிதார் கர்நாடக கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் பி.வி.சிவபிரகாஷ் இது பற்றி கூறும்போது, "முதோல் இன நாய்கள் ஆடம்பர பிராண்டட் உணவுகளை உண்ணக்கூடாது. கர்நாடகத்தின் சிஆர்ஐசியில் வளர்க்கப்படும் நாய்கள் எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டு விட்டு உயிர் வாழும். உரிமையாளர் விரும்பினால் கோழியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு ரொட்டி சாப்பிட்டும்கூட இவற்றால் உயிர் வாழ முடியும்," என்கிறார்

முதோல் நாய்

பட மூலாதாரம், Venkayya Navalgi

சிஆர்ஐசி தலைவரும் பல்கலைக்கழக உதவி பேராசிரியருமான சுஷாந்த் ஹான்ஜ் பிபிசி ஹிந்தியிடம் பேசும்போது, "இந்த நாயை நீங்கள் கட்டி வைக்க முடியாது. அவை எப்போதும் சுதந்திரமாக நடமாடவே விரும்பும். காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம், அது தனது வேலையை மிக விரைவாகச் செய்ய தூண்டப்படும்," என்கிறார்.

"இது ஒரு மனிதனின் நட்புக்கு பாத்திரமாக விளங்கும் நாய். பலர் இதை நம்புவதில்லை. பொதுவாக இந்த நாய்கள் கண்காணிப்புப் பணிக்கு பயன்படுத்தப்படும். 2018ஆம் ஆண்டு, கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் பங்கேற்ற இந்த நாய்கள் இனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பிரதமர் மோதியே இந்த இனத்தைப் பாராட்டினார்," என்கிறார்.

இந்தியாவில் பல பாதுகாப்பு அமைப்புகள் சிஆர்ஐசியில் முதோல் நாய்க்குட்டிகளை வாங்கி பயிற்சி அளிக்கத் தொடங்கின. சஷஸ்திர சீமா பல் (எல்லை ஆயுதக் காவல் படை), ராஜஸ்தான் காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப், பெங்களூர் நகர காவல்துறை, பந்திபூர் வனத்துறை ஆகியவை தலா இரண்டு நாய்க்குட்டிகள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப்படை ஒன்று, எல்லை பாதுகாப்புப்படையான பிஎஸ்எஃப்-இன் தெகன்பூர் பிரிவு நான்கு, இந்திய விமானப்படையின் ஆக்ரா பிரிவு ஏழு, தொலைதூர கால்நடை படைப்பிரிவான ஆர்விசி மீரட் ஆறு என சிஆர்ஐசியில் இருந்து முதோல் நாய்களை வாங்கியுள்ளன.

நரேந்திர மோதி

முதோல் நாய்களின் பூர்வீகம்

முதோல் நாய்கள் முதன்முதலில் ராஜா மாலோஜிராவ் கோர்படே (1884-1937) ஆட்சியின் போது கவனம் பெற்றன. அப்போது வாழ்ந்த பழங்குடியின மக்கள், இந்த வகை நாய்களை தங்களுடைய வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

அப்போதுதான் மாலோஜிராவின் கவனம் முதல்கள் மீது திரும்பியது. பிரிட்டிஷ் பயணத்தின்போது ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு சில முதோல் நாய்க்குட்டிகளை அவர் பரிசாக அளித்தார்.

இது குறித்து சுஷாந்த் ஹான்கே கூறுகையில், "சத்ரபதி சிவாஜி மன்னரின் ராணுவம் முதோல் நாய்களை தங்களுடைய படை தேவைக்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது," என்கிறார்.

டாக்டர் ஷிவ்பிரகாஷ் கூறுகையில், ''பொதுவாக இந்த நாய்கள் முதோல் தாலுகாவில் மட்டுமே காணப்படும். இப்போது இந்த நாய்கள் சிஆர்ஐசியில் இருந்து தனியார் செல்லப்பிராணி வளர்ப்பாளர்களால் வாங்கப்பட்டு பல இடங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்போது இவை மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

முதோல் நாய்

பட மூலாதாரம், Venkayya Navalgi

கடந்த ஆண்டு, கர்னாலில் உள்ள தேசிய விலங்கு மரபியல் வளங்கள் துறை (NBAGR), முதோல் இன நாயை உள்நாட்டு நாயாக அங்கீகரித்து சான்றிதழ் அளித்தது.

இந்த சான்றிதழைக் கொண்டு, பல தனியார் வளர்ப்பாளர்கள் இந்த நாய்களை பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு விற்கத் தொடங்கினர்.

முதோல் தாலுகாவில் உள்ள லோகாபூர் வெங்கப்பா நவல்கி பிபிசி ஹிந்தியிடம் பேசும்போது, "என்னிடம் 18 முதோல் நாய்கள் உள்ளன. அதில் 12 பெண் நாய், ஆறு ஆண் நாய். ஆண்டுக்கு ஒருமுறை அவை கலக்கின்றன. பெண் நாய்கள் ஒரு ஆண்டுக்கு இரண்டு முதல் நான்கு மற்றும் பத்து முதல் பதினான்கு குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. சிலர் நாய்க்குட்டிகளுக்கு ஊசி போடுவதில்லை அல்லது முறைப்படி அதை பதிவு செய்வதில்லை. அப்படி செய்வது அதிக நேரத்தை எடுக்கும். பொருள் செலவுக்கும் வழிவகுக்கும். இந்த வகை நாய்க்குட்டி ரூ.12,000க்கு விற்கப்படுகிறது. அதுவே நாய்க்குட்டிக்கு முறையாக ஊசி போட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ரூ.13 முதல் 14 ஆயிரம் வரை அதை விற்கிறார்கள். இந்த நாய்களின் சராசரி வயது 16. ஆனால் இப்போது13-14 ஆண்டுகளாக அவற்றின் ஆயுள் குறைந்துள்ளது," என்கிறார்.

முதோல் நாய்

பட மூலாதாரம், Venkayya Navalgi

பெங்களூரைச் சேர்ந்த ரஷ்மி மாவின்கார்வே, "எங்களிடம் ஒரு முதோல் நாய் உள்ளது. அது மிகவும் நட்பாக இருக்கிறது. என் மூன்று வயது மகளுடன் நன்றாகப் பழகுகிறது. இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் போல பழகுவார்கள். எனது செல்லப்பிராணியை மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டது என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் இது உண்மையல்ல. அது நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமையும். ஒரே நேரத்தில் நாங்கள் ஏழு நாய்களை வைத்திருந்தோம்," என்கிறார்.

மர்பி என்ற முதோல் நாயைப் பற்றி ரஷ்மி விவரித்தார். "இது மாதம் ஒரு முறை குளிக்கும். ஆனால் மற்ற நாய்களைப் போல குளிக்காவிட்டால் வாசனை வராது. வாரத்திற்கு ஒரு முறை நாங்கள் அதனை அழகுபடுத்துவோம். அதன் உணவும் எளிமையானது. ராகி மால்ட் மற்றும் தயிர் சேர்த்து தினமும் 2.5-250 கிராம் அளவுக்கே உணவு தருகிறோம். அவற்றில் முட்டை மற்றும் சுமார் 100 கிராம் கோழி இறைச்சி இருக்கும். வாரத்திற்கு 100 கிராம் சோறு வழங்குவோம். ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுகிறோம்," என்கிறார் ரஷ்மி.

நியூசிலாந்தில் பயிற்சி பெற்று சான்றளிக்கப்பட்ட நாய்கள் நன்னடத்தை பயிற்றுநர் அம்ரித் ஹிரண்யா பிபிசியிடம் பேசும்போது, "முதோல் வேட்டை நாய்கள் அல்லது சாம்பல் நாய்கள் பொதுவாக வேட்டை பண்பைக் கொண்டவை. இந்திய ராணுவத்தின் காலாட்படையில் தாக்குதலுக்காகவும், அச்சுறுத்தலை அடையாளம் கண்டுகொண்டு திரும்புவதற்காகவும் அவை அழைத்துச் செல்லப்பட்டன," என்கிறார்.

முதோல் நாய்

பட மூலாதாரம், Rashmi Mavinkurve

"முதோல் நாய்களின் ஓடும் ஆற்றல் அபராமானது," என்கிறார் அவர்.

உடல் மிகவும் மெலிந்து இருப்பதால், ஓடும்போது நீண்ட தாவலாக இவற்றால் செல்ல முடியும். அடர்ந்த இருளிலும் இவற்றால் பார்க்க முடியும் என்பதால் காலாட்படை ரோந்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனிதர்களின் செவித்திறன் அல்லது கேட்கும் திறனை விட இவற்றின் கேட்கும் திறன் அதிகம்," என்று அம்ரித் ஹிரண்யா கூறினார்.

ஆனால் வெடிபொருட்கள், போதைப் பொருட்கள் அல்லது திருட்டு போன்ற குற்றங்களை விசாரிக்க அவை பயன்படுத்தப்பட்டால், அவை அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது.

ஏனெனில் முதோலின் வாசனை அறியும் திறன் லாப்ரடோர், ஜெர்மன் ஷெப்பர்ட் அல்லது பெல்ஜியன் மெலினோயிஸ் போன்றவற்றை விட குறைவாக இருக்கும். கோம்பை அல்லது சிப்பிப்பாறை போன்ற உள்நாட்டு இன நாய்களுக்கு முதோலை விட வாசனை உணர்வு அதிகம் என்று ஹிரண்யா கூறுகிறார்.

முதோலின் தோல் வறண்ட காலநிலையிலும் நன்றாகத் தாங்கும். இவற்றின் தோல் மகாராஷ்டிரா மற்றும் வட கர்நாடகாவின் வானிலைக்கு ஏற்றது. வானிலையில் சிறிது அசாதாரண மாற்றம் ஏற்பட்டால் கூட அவற்றின் உடலில் அரிப்பு அல்லது பூஞ்சை போன்ற படைகள் தோன்றும்.

"10 முதல் 30 சதவிகிதம் சிறந்த செயல்திறனுடன் இதுபோன்ற நாய்களை தனிப்பட்ட முறையில் பலரும் வளர்க்கும்போது, மக்கள் பணத்தில் செயல்படும் அரசுகள், அவற்றின் படைகளுக்கு இதுபோன்ற நாய்களை பயன்படுத்தினால் காசும் செலவும் மிச்சமாகும்," என்கிறார் ஹிரண்யா.

நாய்

பட மூலாதாரம், Venkayya Navalgi

முதோலின் சிறப்பம்சங்களை விளக்கிய அதே சமயம், அதன் ஒரு குறைபாட்டையும் தெரிவிக்கிறார் ஹிரண்யா.

"உலக அளவில் பலரும் ஜெர்மன் ஷெப்பர்ட் அல்லது பெல்ஜிய மெலினாய்ஸை தத்தெடுக்கவே விரும்புவர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று, பெல்ஜிய மெலினாய்ஸ் எந்த பருவநிலையையும் பொறுத்துக்கொள்ளும். அளவில் அது ஜெர்மன் ஷெப்பர்டை விட சிறியது," என்கிறார் அவர்.

"பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மெலினாய்ஸ்தான் ஒசாமா பின்லேடனின் சடலத்தை மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்தது. வெடிபொருட்களைக் கண்டறிவதில் ஒரு விநாடி தாமதம் கூட மிகவும் ஆபத்தானது. எனவே, முதோல் போன்ற நாய்களை அந்த வேலைகளில் அமர்த்துவது ஆபத்தை விளைவிக்கலாம். கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளில், பெல்ஜியன் மெலினியோஸ் 5,000 கிலோ போதைப்பொருளை மோப்பம் பிடித்திருக்கும். அதற்கான பயிற்சி பெங்களூரு அருகே உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தின் நாய் வளர்ப்பகத்தில் தரப்படுகிறது," என்கிறார் ஹிரண்யா.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: