ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் - யாருக்கு உண்மையான பலன்?

Voting Machine

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், விஷ்ணு பிரகாஷ்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேலைக்காகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் இருந்தவாறே தங்கள் சொந்த ஊரில் நடைபெறும் தேர்தலின் போது வாக்களிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாகப் புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜனவரி 16ஆம் தேதி மாநில மற்றும் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் என்றால் என்ன?

90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள இந்தியாவில் மத்திய அரசையும் மாநில அரசுகளையும் தேர்வு செய்ய நடக்கும் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் இந்திய மக்கள் அனைவரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாகத் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்த இயந்திரத்தை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியாவும் உருவாக்குகின்றன. இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 67.4% மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். 30 கோடிக்கும் அதிகமானோர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

இவர்களில் பெரும்பாலானோர் வேலை தேடி சொந்த ஊர்களில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்ற நிலையில், பலர் வாக்களிப்பதற்குச் சொந்த ஊருக்குச் செல்லவில்லை.

விடுபட்ட வாக்காளர்களும் வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாக இந்தியாவில் எந்த ஊரில் இருந்தாலும், வாக்காளர்கள் தங்களது சொந்த ஊரில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

இயந்திரத்தின் உதவியுடன் 72 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியும். இதன் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் தேர்தலில் எளிதாக வாக்களிக்க முடியும் என்று கூறி, இந்த இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கி இருக்கிறது.

EVM carried by workers

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரான செல்வப்பெருந்தகை, பாஜக அரசின் உந்துதலின் பேரில் தான் புதிதாக இந்த வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், "ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ள நிலையில், இந்த ரிமோட் வாக்குப்பதிவி இயந்திரத்தை நம்ப முடியாது.

மாறாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்குகளை தபால் வாக்குகள் மூலம் பதிவு செய்து, அவர்களின் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டலாம்," என்றார் செல்வப்பெருந்தகை.

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்
படக்குறிப்பு, செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகம் செய்வது ஜனநாயகத்திற்கு பேராபத்தாக அமைந்துவிடும் என மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024 தேர்தலில் வலுவான கூட்டணி கட்சிகள் ஏதும் இல்லாமல் பாஜக தனித்து விடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தை கூட்டணி சேர்த்துக்கொண்டு வெற்றி பெற்று விட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு இருப்பதையே இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான அறிவிப்பு காட்டுகிறது," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

திமுக, அதிமுகவின் நிலைப்பாடு என்ன?

இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 16ஆம் தேதி கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக திமுக சார்பாக தற்போது எந்த கருத்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு காலத்தின் கட்டாயம் என அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், "தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1.2 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தை பிடிப்பார்கள்.

இது மட்டுமின்றி, வேறு மாநிலங்களில் இருந்து வந்த அவர்களால் தமிழகத்தின் பண்பாடு, அரசியல் சூழ்நிலைகளை அறிந்து வாக்கு செலுத்த முடியாது.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு அளித்திருக்கும் உரிமையான வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்ட, அவர்களின் சொந்த மாநிலங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்து தருவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை. அந்த வகையில் நவீனத்தை உள்ளடக்கிய இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் காலத்தின் கட்டாயம்" எனத் தெரிவித்தார்.

16ஆம் தேதி நடக்கும் செயல் விளக்க கூட்டத்திற்குப் பிறகு அதிமுக தனது முழுமையான நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்றார், வைகைச்செல்வன்.

வைகைச்செல்வன், அதிமுக

பட மூலாதாரம், Vaigaichelvan/Twitter

படக்குறிப்பு, வைகைச்செல்வன், அதிமுக

ரிமோட் இயந்திரத்தின் மறுபக்கம்

இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ள ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களை, தேர்தலில் வாக்களிக்கச் செய்ய முடியும். அந்தளவுக்கு தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாப்பாக வாக்குப்பதிவை நடத்த முடியும், என்கிறார் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான கோபால்சாமி.

"தொழில்நுட்ப ரீதியாக ரிமோட் வோட்டிங் சாத்தியம் என்றாலும், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இதை ஏற்றுகொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன.

சான்றாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு தேர்தல் நடக்கும் போது எத்தனை மாநில கட்சிகளால், வெளிநாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் முகவரை நியமித்து கண்காணிக்க முடியும்?

அதனால் இந்திய அரசியல் கட்சிகள் இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்றுக் கொள்வது சற்று கடினம் தான்," என்றார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான கோபால்சாமி.

கோபால்சாமி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம், Election Commission of India/Twitter

படக்குறிப்பு, கோபால்சாமி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

மேலும் சென்னையில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர், வேறு மாநிலத்தில் நடைபெறும் மக்களை, சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்கும் போது பிரச்னைகள் ஏற்படாது.

மாறாக உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊரில் வாக்களிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளி, தான் வேலை பார்க்கும் ஊரில் ஏற்படும் பிரச்னை தொடர்பாக உள்ளாட்சிப் பிரதிநிதியை அணுகும் போது இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படும் சிக்கல், ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்பட வாய்ப்புள்ளது என்பது கோபால்சாமியின் கருத்தாக இருக்கிறது. இத்தனை சிக்கல்கள் உள்ள நிலையில், ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு எளிதாக்கப்படுமா என்பது பற்றி ஜனவரி 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: