சாலை விபத்தில் சிக்கிய மாணவிக்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்த நொய்டா காவல்துறை

பட மூலாதாரம், RANVIJAY SINGH/BBC
- எழுதியவர், ரண்விஜய் சிங்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
பீகாரைச் சேர்ந்த ஷிவ் நந்தன் பால் (47 வயது) தற்போது நொய்டாவில் தனது மகளுக்கு சிகிச்சை அளிக்க நிதி திரட்டி வருகிறார்.
பண்ணையில் கூலி வேலை செய்யும் ஷிவ்நந்தன், தனது ஒரே மகள் ஸ்வீட்டி குமாரியை(22) கடன் வாங்கி பி.டெக் படிக்க வைத்து வருகிறார்.
மகள் பொறியாளராக வந்தால், வீட்டில் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு, ஏழு நாட்களுக்கு முன்பு (டிசம்பர் 31-ஆம் தேதி) அந்த நம்பிக்கை மறைந்துவிட்டது.
“டிசம்பர் 31 இரவு 11 மணியளவில், 'ஸ்வீட்டியின் உடல்நிலை மோசமாக உள்ளது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், நீங்கள் உடனே வாருங்கள் என்று' ஸ்வீட்டியின் தோழியிடமிருந்து அழைப்பு வந்தது. நாங்கள் ரயில் பிடித்து இங்கு வந்தோம், இங்கு வந்தால், என் குழந்தை..." என்று தழுதழுக்கிறார் ஷிவ் நந்தன்.
ஸ்வீட்டி 'கிரேட்டர் நொய்டா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி'யில் பி.டெக் இறுதியாண்டு மாணவி. டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணியளவில் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு தனது தோழிகள் இருவருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ‘சான்ட்ரோ கார்’ அவர்கள் மூவர் மீதும் மோதியது.
விபத்துக்குப் பிறகு, அந்த வழியில் வந்தவர்கள் மூவரையும் டெல்லியை ஒட்டியுள்ள கிரேட்டர் நொய்டாவில் கைலாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்வீட்டியின் நிலை மோசமாகியுள்ளது. அதே நேரத்தில், ஸ்வீட்டியின் தோழிகளான அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கர்சோனி டோங் (21), மணிப்பூரைச் சேர்ந்த அங்கான்பா (21) ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த கர்சோனி டோங் கூறுகையில், "சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். சாலையின் மூலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென இது நடந்தது" என்கிறார்.
விபத்துக்குப் பிறகு கர்சோனி காவல்துறையின் அணுகுமுறையால் மிகவும் கோபமடைந்திருக்கிறார். "இவ்வளவு நாட்களாகியும் குற்றவாளிகள் யார் என்று காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை, நாங்கள் கேட்டால், விசாரணை நடக்கிறது என்று தான் அவர்கள் சொல்கிறார்கள,” என்கிறார் அவர்.
துப்பு துலக்காத காவல் துறை
இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, கிரேட்டர் நொய்டாவின் பீட்டா-2 காவல் நிலைய பொறுப்பாளர் அஞ்சனி குமார் சிங்கிடம் பிபிசி பேசியது.
இதுகுறித்து அஞ்சனி குமார் கூறுகையில், "விபத்து நடந்த வழித்தடத்தில் சிசிடிவி பொருத்தப்படவில்லை. அரை கிலோமீட்டருக்கு முன்னும் பின்னும் கேமராக்கள் இல்லை. சாலை சந்திப்புகளில் கேமராக்கள் இல்லை. இதனால் உதவி கிடைக்கவில்லை. பகலில் நடந்திருந்தால் பலரிடம் தகவல் பெற்றிருக்கலாம். ஆனால் இரவு நேரம் என்பதால், இது வரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், SHIV NANDAN PAL
இரவு 9 மணியளவில் ஸ்வீட்டிக்கு விபத்து ஏற்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, 2021ஆம் ஆண்டில் சுமார் நான்கு லட்சத்து 12 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளன, அவற்றில் 20.7%(85,179) விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்துள்ளன.
காவல்துறை மீது புகார்
எந்தப் பணியும் நடைபெறவில்லை என்று நிலையப் பொறுப்பாளர் அஞ்சனிகுமார் கூறுகிறார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை ஒரு அடி கூட முன்னேற முடியாமல் திணறுகிறது என்பது அஞ்சனி குமாரின் பேச்சிலிருந்து தெரிகிறது. தற்போது, விபத்து நடந்ததாகவும், வெள்ளை நிற சான்ட்ரோ காரால் நடந்ததாகவும் இந்தத் தகவல் மட்டுமே போலீசாரிடம் உள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஸ்வீட்டியின் கல்லூரி நண்பர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். முன்னதாக, 'முதல் தகவல் அறிக்கை கூட எழுதப்படவில்லை' என்றும், 'ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் நடவடிக்கை என்று எதுவும் அதிகம் நடப்பதில்லை' என்று போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், RANVIJAY SINGH/BBC
2021ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் சுமார் 14% (57,415) விபத்துகள் ஹிட் அண்ட் ரன் வழக்குகள்தான். இந்த விபத்துகளில் 25,938 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 45,355 பேர் காயமடைந்துள்ளனர்.
சாலை விபத்துகளில் ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை பின்பக்க மோதலால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிதி திரட்டி சிகிச்சை அளிக்கும் குடும்பத்தினர்
ஸ்வீட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்து சுமார் ஐந்து நாட்கள் ‘கோமா’ நிலையில் இருந்த ஸ்வீட்டிக்கு சுயநினைவு திரும்பத் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் அவரால் விஷயங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்த ஐந்து நாட்களில், ஸ்வீட்டியின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், RANVIJAY SINGH/BBC
கைலாஷ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் துறைத் தலைவர், ஆர்.கே.சிசோடியா, "குணமடைந்து வருகிறார், ஆனால் சிகிச்சை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை.
ஸ்வீட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், ஆனால் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை," என்கிறார்.
ஸ்வீட்டியின் சிகிச்சைக்காகக் கடந்த ஐந்து நாட்களில் ஐந்து லட்சத்துக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை நீண்ட காலம் நீடிக்கும். மேலும் செலவும் அதிகரிக்கும். இதனால் ஸ்வீட்டியின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
தந்தை ஷிவ் நந்தன் பால் ஒரு விவசாயத் தொழிலாளி. ஸ்வீட்டியின் சிகிச்சை செலவுகளைச் சமாளிக்கப் போதுமான மூலதனம் அவரிடம் இல்லை. இந்நிலையில் ஸ்வீட்டியின் சிகிச்சைக்காகக் கல்லூரி நண்பர்கள் நிதி சேகரித்து வருகின்றனர்.
இதுவரை அவர் சுமார் 12 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக ஸ்வீட்டியின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
மறுபுறம், நொய்டா காவல்துறை ஸ்வீட்டியின் சிகிச்சைக்காக 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
நொய்டா டிசிபி அபிஷேக் வர்மா, "டிசம்பர் 31ஆம் தேதியன்று, ஸ்வீட்டி குமாரி என்ற மாணவி சாலை விபத்தில் காயமடைந்தார். மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
நொய்டா காவல்துறை சார்பில் அனைத்து காவலர்களின் ஒரு நாள் ஊதியம், மொத்தம் 10 லட்சம் ரூபாய் மாணவியின் சிகிச்சைக்காக வழங்கப்படும்,” என்று அறிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












