விருப்ப உடலுறவுக்கான வயது குறைக்கப்பட வேண்டுமா? போக்சோ சட்டத்தின் அறியப்படாத மற்றொரு பக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ்
ஒருமித்த உடலுறவுக்கான வயது குறைக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் போக்சோ சட்டம் சொல்லும் பல விவரங்கள் அதிகம் அறியப்படாதவை ஆக உள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை கையாள 10 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான புதிய சட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ஆனால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து பாலியல் செயல்பாடுகளையும் குற்றமாக கருதுவதால், ஒருமித்த உணர்வுடன் உடலுறவில் ஈடுபடும் இளம் வயதினரும் கூட அந்த சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள்.
ஒருமித்த பாலியல் உறவுக்கான வயதில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்றும், ஒருமித்த உடலுறவு கொள்ளும் பதின்ம வயதினரை குற்றமற்றவர்களாக கருத வேண்டும் என்றும் தற்போது கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, குற்றச்செயல்கள் அதிகம் உள்ள டெல்லி மாவட்டத்தில், பெண் காவல் அதிகாரிகள் அதிகம் நியமிக்கப்பட்டது தொடர்பான செய்திக்கான வேலையில் நான் ஈடுபட்டிருந்தபோது, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுமியை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டேன்.
இவர் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர் என அந்தப் பெண்ணை காவல்துறை அதிகாரி எனக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆனால், அந்தப் பெண்ணின் கதையை நான் கேட்டபோது தான் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்றும் விருப்பத்துடனே உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த சிறுமியின் அம்மா அவரைப் பார்த்து கத்த ஆரம்பித்ததும், பெண் காவல் அதிகாரி என்னை வெளியே அழைத்துச் சென்றார்.
சிறுமியின் பெற்றோர் அண்டை வீட்டைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் மீது புகார் அளித்தனர். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும், பாலியல் வல்லுறவு வழக்கின் பேரில் அவர் விசாரிக்கப்படுவதாகவும் பெண் காவல் அதிகாரி கூறினார்.
அந்த உடலுறவில் ஒருமித்த சம்மதத்துடனே பெண் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததாக ஒப்புக்கொண்ட அவர், வழக்குப் பதிவதைத் தவிர காவல்துறைக்கு வேறு வழியில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த இந்த வழக்கு, 'வல்லுறவு' என்ற முத்திரை குத்தப்படும் ஒருமித்த சம்மதத்துடனான பாலியல் உறவில் ஈடுபடும் பதின்ம வயது இந்திய பெண்கள் சந்திக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகளில் ஒன்றாகும்.
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரித்திருப்பதால் போக்சோ போன்ற கடுமையான சட்டம் தேவைப்பட்டது. 2007ஆம் ஆண்டின் அரசு ஆய்வின்படி, 53 சதவிகித குழந்தைகள் தாங்கள் ஏதோவொரு பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர்.
ஆனால் இந்தச் சட்டம் ஒருமித்த பாலியல் உறவுக்கான வயதை 16இலிருந்து 18ஆக உயர்த்தியதால், மில்லியன் கணக்கான இளம் வயதினர் உடலுறவு கொண்டால் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.
253 மில்லியனுக்கும் அதிகமான இளம் வயதினரைக் கொண்டுள்ள இந்தியா, உலகளவில் அதிக இளம் வயதினர் உள்ள நாடாகும். இங்கு திருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்கு சமூகக் கட்டுப்பாடுகள் இருந்தாலும்கூட, பலர் அதில் ஈடுபடுவதாகவே ஆய்வுகள் கூறுகின்றன.
குடும்பங்கள் பற்றிய அரசின் மிக விரிவான கணக்கெடுப்பான சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் 39 சதவிதத்திற்கும் அதிகமான பெண்கள் 18 வயதிற்கு முன்பே தாங்கள் உடலுறவு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
25-49 வயதிற்குட்பட்டவர்களில் 10 சதவிகிதம் பேர் 15 வயதிற்கு முன்பே உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, உலகின் மற்ற நாடுகளைப் போல ஒருமித்த பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதை 16ஆகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அதிகரித்துவருகிறது.
பெண் குழந்தைகளின் பாலுணர்வைக் கட்டுப்படுத்தவும், சாதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உறவுகளில் இருந்து அவர்களைத் தடுக்கவும் பெற்றோர்கள் பெரும்பாலும் குற்றவியல் நீதி முறையை பயன்படுத்துவதாக குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஒருமித்த பாலியல் உறவை குற்றமாக்குவது வாழ்க்கையை அழிக்கிறது மற்றும் சுமை நிறைந்த குற்றவியல் நீதி அமைப்பை மேலும் சுமையாக்குவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
தற்போது முதன்முறையாக, இது தொடர்பான தரவுகள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகள் உரிமைகளுக்கான தொண்டு நிறுவனமான என்ஃபோல்ட் ப்ரோஆக்டிவ் ஹெல்த்( Enfold Proactive Health Trust) அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மேற்கு வங்கம், அசாம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் 2016 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட 7,064 போக்ஸோ நீதிமன்றத் தீர்ப்புகளை ஆய்வு செய்தனர். இதில், ஏறக்குறைய பாதி வழக்குகள் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தொடர்புடையவை.
இந்த வார தொடக்கத்தில் வெளியான அந்த அறிக்கையில், 1,715 வழக்குகள் அதாவது நான்கில் ஒரு வழக்கில் இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர்.
ஆண்டுதோறும் பதிவாகும் பல்லாயிரக்கணக்கான போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகள் நண்பர், ஆன்லைன் நண்பர் அல்லது எதிர்காலத்தில் திருமணம் செய்வதாக இணைந்து வாழ்பவர்களாக இருப்பதால் இந்தியா முழுவதும் இருந்து தரவுகள் தொகுக்கப்பட்டால், இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
"மிகவும் இயல்பான பதின்ம வயதினரின் பாலியல் செயல்பாடுகளை குற்றப்படுத்துவது, சட்டம் யதார்த்தத்துடன் பொருந்தவில்லை என்பதை காட்டுகிறது" என்கிறார் என்ஃபோல்டின் அமைப்பின் முன்னணி ஆராய்ச்சியாளர் ஸ்வகதா ராஹா.
பெரும்பாலான வழக்குகள் சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறினாலோ அல்லது கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டாலோ அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகும். மேலும், பெரும்பாலான வழக்குகளில், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் அல்லது கடத்தல் போன்ற வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
"குற்றவியல் நீதி அமைப்பில் ஆண், பெண் என இருவருமே சிக்கிக் கொள்கிறார்கள், இது இருவருக்குமே கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தும்” என்கிறார் ராஹா.
"பெண்கள் அவமானம், இழிவு, மற்றும் களங்கத்தைச் சந்திக்கின்றனர். மேலும், அவர்கள் பெற்றோர் வீட்டிற்குச் செல்ல மறுத்தால், தங்குமிடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். ஆண்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாகவோ கருதப்பட்டு கூர்நோக்கு இல்லங்கள் அல்லது சிறையில் நீண்ட காலத்திற்கு அடைக்கப்படுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை மற்றும் தடுப்புக்காவலை எதிர்கொண்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்" என்றும் அவர் கூறுகிறார்.
ராஹா மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்த 1,715 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் விடுதலையில் முடிவடைந்தன.
காதல் வழக்குகளில் 1,609 அல்லது 93.8 சதவிகித வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், 106 அல்லது 6.2 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
காதல் வழக்குகள் தொடர்பான விசாரணையை விசாரணை நீதிமன்றங்கள் மெத்தனப்போக்குடன் மேற்கொள்வதை அதிக அளவிலான விடுதலைகள் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய நீதித்துறையும் பதின்ம வயதினரின் ஒருமித்த உடலுறவை குற்றமாக்குவதைக் கவலைக்குரியதாகக் குறிப்பிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஓர் இளைஞரின் தண்டனையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி பார்த்திபன், சிறார்களுக்கிடையிலான உறவு அல்லது சிறார்கள் மற்றும் இளம் வயதினருக்கிடையேயான பாலியல் உறவு இயற்கைக்கு மாறானது அல்ல, இது இயற்கையான உயிரியல் ஈர்ப்பின் விளைவு என்றார். மேலும், ஒருமித்த உறவுக்கான வயதை மாற்றியமைக்கவும் அவர் பரிந்துரைத்தார்.
சமீபத்தில், இது குறித்து பேசிய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்சய் சந்திரசூட், ஒருமித்த உறவுக்கான வயதை பாராளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் இளம் வயதினரின் பாலியல் உறவை குற்றமற்றதாகக் கருத இந்தியாவை வலியுறுத்தி வருகிறது. இந்திய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான சோலேடாட் ஹெர்ரெரோ பிபிசியிடம் பேசுகையில், “தனிப்பட்ட உறவுகள் உட்பட குழந்தைகளுக்கு பாதுகாப்பு, ஒருமைப்பாடு, கண்ணியம் மற்றும் பங்கெடுத்தல் ஆகியவற்றுக்கான உரிமை உள்ளது" என்று கூறினார்.
"குழந்தைகளின் சுயமுடிவெடுக்கும் திறனில் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறும் அவர், குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா குழுவும் இதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதாகக் கூறுகிறார்.
காதல் வழக்குகளை வித்தியாசமாக பார்க்க வேண்டும் என்றும், இந்த சட்டம் குறித்து பாராளுமன்றம் புதிய முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதித்துறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் உள்ளவர்களிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது என்கிறார் ராஹா.
"ஒருமித்த பதின்ம வயது பாலியல் உறவை குற்றமற்றதாக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இந்தியாவிற்கு ஏற்ற சட்டத்தை நாம் உருவாக்கலாம், ஆனால் இளம்வயதினரின் பாலியல் உறவு இயல்பானது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்" என்றும் ராஹா கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













