பஞ்சாப் சிறைக் கைதிகள் வாழ்க்கைத் துணையை தனிமையில் சந்திக்க அனுமதிக்கும் திட்டம் - இந்தியாவிலேயே முதல் முறை

காணொளிக் குறிப்பு, பஞ்சாப் கைதிகள் வாழ்க்கைத் துணையை தனிமையில் சந்திக்க அனுமதிக்கும் திட்டம்
    • எழுதியவர், அர்விந்த் சாப்ரா
    • பதவி, பிபிசி நியூஸ், சண்டிகர்
Banner
  • சிறையில் உள்ள ஆண் அல்லது பெண் கைதிகள் தங்கள் இணையரை தனிமையில் சந்திக்க வசதியளிக்கும் திட்டம்.
  • சிறைக் கைதிகளை பார்க்க வரும் அவர்களின் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தைக் கழிக்க தனியறை வசதி.
  • கைதிகள் தங்கள் இணையரை தனிமையில் சந்திக்க வசதியளிக்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கியுள்ளது பஞ்சாப் மாநிலம்.
  • கைதியான கணவரை மனைவி சந்திப்பது அல்லது உடலுறவு கொள்வது உடல் ரீதியான ஒரு தேவை என்கிறார் பஞ்சாப் சிறை உயரதிகாரி.
Banner

சிறையில் உள்ள சில கைதிகள் தங்களைப் பார்க்க வரும் தங்கள் கணவர் அல்லது மனைவியுடன் சிறைச்சாலையில் நெருக்கமாக இருப்பதற்கு வழிவகை செய்யும் திட்டத்தை பஞ்சாப் அரசு செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறைகளில் இருக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்தித்துத் தனிமையில் இருக்க முடியும். நன்னடத்தை உள்ளவர்கள் என்று சிறை அதிகாரிகள் கருதும் கைதிகளுக்கு மட்டுமே இந்த அனுமதி உண்டு.

இந்த திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய பஞ்சாபில் உள்ள கோயிண்ட்வால் சிறைக்கு பிபிசி நேரடியாகச் சென்றது.

"சிறை சிறைதான். எந்தச் சிறையாக இருந்தாலும் தனிமையும் மன அழுத்தமும் ஏற்படும். ஆனால், என் மனைவி என்னைச் சந்தித்தபோது பெரிய நிம்மதி கிடைத்தது. எங்களால் சிறையில் இரண்டு மணி நேரம் தனிமையில் செலவிட முடிந்தது" என்கிறார் குர்ஜித் சிங்.

60 வயதான குர்ஜித் சிங், கொலை குற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக பஞ்சாபின் தர்ன் தரனில் உள்ள கோயிண்ட்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் உள்ள கைதிகள் தங்கள் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதற்கான வசதியை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக அண்மையில் பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், சிறைவாசிகள் தங்கள் மனைவியுடன் பாலியல் உறவிலும் ஈடுபட முடியும்.

சிறை கைதிகள் மனைவியோடு
படக்குறிப்பு, குர்ஜித் சிங்

"நாங்கள் திருமணமான தம்பதி. திருமணம் என்பது அன்பு மற்றும் தூய்மையின் முடிவில்லா பந்தம். எனவே, அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கினால், நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார் குர்ஜித். இவர் இந்தத் திட்டம் மூலம் கோயிண்ட்வால் சிறையில் முதலில் பலனடைந்தவர்.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, சிறைக் கைதிகள் பார்வையாளர்களைத் தொட்டுப்பேச கூட அனுமதி கிடையாது. பார்வையாளர்களையும் கைதிகளையும் பிரிக்கும் கண்ணாடி அல்லது திரைக்கு மறுபுறமிருந்தே ஃபோன் மூலமாக கைதிகள் பேச முடியும்.

இந்தத் திட்டம் குறித்து பிபிசியிடம் பேசிய பஞ்சாப் சிறைத்துறையின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் ஹர்பிரீத் சித்து, "சிறையில் இல்லாத, கைதியின் வாழ்க்கைத் துணைகளை தண்டிக்க எந்த காரணமும் இல்லை. எனவே கைதிகளின் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், அவர்கள் சமூகத்திற்குள் மீண்டும் இயல்பாக நுழைவதை உறுதி செய்யவும் பஞ்சாப் சிறைகளில் இந்தத் திட்டத்தை தொடங்க முடிவு செய்தோம்" என்றார்.

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி 3 சிறைகளில் தொடங்கிய இந்தத் திட்டம், அக்டோபர் 3ஆம் தேதிக்குள் பஞ்சாபின் மொத்தமுள்ள 25 சிறைகளில் 17 சிறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

"உடலுறவு என்பது உடல் ரீதியிலான தேவை. சிறைச்சாலைகளில் அதை அனுமதிக்கும் நடைமுறை பல நாடுகளில் உள்ளது. இதை ஆதரித்து பல நீதிமன்ற உத்தரவுகள் இருப்பதையும் நாங்கள் உணர்ந்தோம்," என்கிறார் ஹர்பிரீத் சித்து.

சிறை கைதிகள் மனைவியோடு

இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதாக கூறும் அதிகாரிகள், 385 சிறைக்கைதிகள் தங்கள் வாழ்க்கைத் துணைகளைச் சந்திக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

"பல மாதங்களாக என்னுடைய குடும்பத்தைச் சந்திக்க முடியாததால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன். ஆனால், என் மனைவியுடனான இந்தச் சந்திப்பு என்னை புத்துணர்ச்சி கொள்ளச் செய்தது" என்கிறார் மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் ஜோகா சிங்.

விசாரணைக் கைதியான அவர், சிறை அதிகாரிகள் தம்பதிகளை எப்படி நடத்துவார்கள் என்பது குறித்து தனக்கு சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் நல்ல முறையில் நடந்துகொண்டதாகவும் கூறுகிறார்.

கழிவறை வசதியோடு தனி அறை

இதற்கான தனி அறை கோயிண்ட்வால் சிறையிலுள்ள முதல் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கழிவறை வசதியோடு இருக்கும் அந்த அறையில் இரண்டு படுக்கைகள், மேசைகள், இரு நாற்காலிகள், தண்ணீர் குடுவைகள், டம்ளர்கள் இருந்தன.

சிறை கைதிகள் மனைவியோடு

"தம்பதிகள் அறைக்குள் சென்றதும் வெளிப்புறமாக அறை பூட்டப்படும். அவர்கள் இரண்டு மணி நேரம் தனியாக இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்று மணியை அழுத்தினால் காவலாளி சென்று உதவுவார்" என சிறை கண்காணிப்பாளர் லலித் கோலி பிபிசியிடம் தெரிவித்தார்.

அதேபோல தம்பதிகளுக்கு ஆணுறைகளும் வழங்கப்படுகின்றன. நன்னடத்தை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே கைதிகள் தங்கள் துணைகளைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதாக லலித் கோலி கூறுகிறார்.

வாழ்க்கைத் துணைகளுடனான சந்திப்பிற்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது. அறையின் அனைத்து ஜன்னல்களும் மற்ற வெளியேறும் இடங்களும் அடைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்கிறது இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டுதல் விதிகள்.

இந்த வசதி வழங்க காரணம்

இந்தத் திட்டம் கைதிகளை தங்கள் சிறைவாசத்தின்போது வாழ்க்கைத் துணைகளுடன் நெருக்கமாக இருக்க அனுமதிக்கிறது. பலமான குடும்ப உறவுகளை ஊக்குவித்தல், கைதிகளின் நடத்தையை சிறப்பாக்குதல், சிறைவாசத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைத்தல் மற்றும் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்.

இந்த நடைமுறை பல நாடுகளிலும், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கனடா, சௌதி அரேபியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளின் சில மாநிலங்களிலும் சில விதிகளுடன் அனுமதிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு கூறுகிறது.

இந்தியாவில் கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் திருமண உறவைத் தொடர பரோல் கேட்டு நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொலைக் குற்றத்திற்காக சிறையில் இருக்கும் தனது கணவருக்கு பரோல் கோரிய ஒரு பெண்ணின் மனுவை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

சிறை

பட மூலாதாரம், Getty Images

2014ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் மனைவியுடன் சிறைக்கைதிகளை நெருக்கமாக, உல்லாசமாக இருக்க அனுமதிக்கும் திட்டத்தை உருவாக்குவதற்காக சிறைகள் சீர்திருத்தக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.

2021ஆம் ஆண்டில் ஹரியாணா அரசு, இது தொடர்பான விதிமுறைகளை உருவாக்க நீதிபதி எச்.எஸ்.பல்லாவின் தலைமையில் சிறைச் சாலை சீர்திருத்தக் குழுவை அமைத்தது.

குண்டர்கள் மனைவிகளைச் சந்திக்க அனுமதிக்கப்படுவார்களா?

பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரும் கோயிண்ட்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குண்டர்கள் மற்றும் மோசமான நடத்தைகள் கொண்ட கைதிகளுக்கு இந்தத் திட்டத்தில் அனுமதி வழங்கப்படாது என சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Banner

யாருக்கும் அனுமதியில்லை

  • குண்டர்கள் மற்றும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அனுமதி கிடையாது.
  • குழந்தைகளுக்கு எதிரான குற்றம், பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறை போன்ற குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு அனுமதி கிடையாது.
  • காசநோய், எச்.ஐ.வி.,பால்வினை நோய்கள் போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு அனுமதி கிடையாது.
  • கடந்த மூன்று மாதங்களாக அவர்களுடைய கடமைகளை சரியாக செய்யாதவர்களுக்கு அனுமதியில்லை.
  • குறிப்பிட்ட சிறை கண்காணிப்பாளரின் சிறை நன்னடத்தை மற்றும் ஒழுக்கங்களை கடைபிடிக்காதவர்களுக்கும் அனுமதியில்லை
Banner

யாருக்கு முன்னுரிமை?

சிறை கண்காணிப்பாளர் லலித் கோலி
படக்குறிப்பு, சிறை கண்காணிப்பாளர் லலித் கோலி
  • நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இல்லாத கைதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • எளிதாக பரோல் கிடைக்கக்கூடிய கைதிகளுக்கு குறைவான முன்னுரிமை.

சிறைகளில் உள்ள வசதிகள் பற்றிய விமர்சனம்

சிறையில் கைதிகளுக்கு நிறைய வசதிகள் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டும் பலரில், பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலாவின் தாயார் சரண் கவுரும் ஒருவர்.

சித்து கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபக் டினு, அக்டோபர் 1ஆம் தேதி போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய மறுநாளே பஞ்சாப் அரசு சிறையில் குண்டர்களுக்கு வசதிகளை வழங்குவதாக அவர் குற்றம்சாட்டினார். கைதிகளுக்கு படுக்கைகள் வழங்கப்படுவதாக சரண் கவுர் குற்றம் சாட்டியிருந்தார்.

சித்து கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளரான தீபக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கோயிண்ட்வால் சிறையில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திய முதல் கைதியான குர்ஜித் சிங், இது பஞ்சாபில் உள்ள அனைத்து சிறைகளுக்கு மட்டுமல்ல, மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்கிறார். இது கைதிகளை சீர்திருத்துவதற்கான சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

Banner
காணொளிக் குறிப்பு, கடற்கரையில் குகை அமைத்து வாழும் முதியவர், வெளியேற்றும் அரசு - ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: