கருப்பையை சுத்தம் செய்யும் சிகிச்சை - யாருக்கு தேவை? எப்போது செய்ய வேண்டும்?

டி அன்ட் சி சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மயங்க் பகவத்
    • பதவி, பிபிசி மராத்தி

மருத்துவ மொழியில் 'டைலேஷன் அன்ட் க்யூரட்ரேஜ்' (டி அன்ட் சி) என அழைக்கப்படும் கருப்பையை சுத்தம் செய்யும் சிகிச்சை மிகச் சிறிய நடைமுறைதான் என்றும் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இந்த சிகிச்சை தேவைப்படுவதாகவும் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

" இந்த சிகிச்சை பல பெண்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அதிகப்படியான ரத்தப்போக்கிற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அது புற்றுநோயை ஏற்படுத்தலாம்" என்கிறார் மகப்பேறு மருத்துவர் டிம்பிள் சுட்கர்.

டி அன்ட் சி என்றால் என்ன? அந்த சிகிச்சை எப்போது செய்யப்படும்? என்பது பற்றி சில மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டோம்.

டி அன்ட் சி என்றால் என்ன? அது எப்படி செய்யப்படும்?

பெண்களுக்கு டி அன்ட் சி சிகிச்சை தேவைப்பட பல காரணங்கள் இருக்கலாம். கருப்பையின் வாய்ப்பகுதியைத் திறந்து, கருப்பை சுத்தம் செய்யப்படும்.

"இது கருப்பையின் உட்பகுதியை சுத்தம் செய்யும் சிகிச்சை" என்கிறார் மும்பை சர் ஜே.ஜே. மருத்துவமனை மகளிர் மருத்துவத் துறைத் தலைவர் மருத்துவர் அசோக் ஆனந்த்.

இந்த செயல்முறையின்போது கருப்பையின் உட்புறத்தில் உள்ள செல்கள் அகற்றப்படும்.

டி அன்ட் சி சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

இந்த செயல்முறையின்போது சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும். பின்னர், க்யூரேட் கருவி கருப்பையின் உள்ளே செலுத்தப்படும்.

"க்யூரேட் கருவி செலுத்தப்பட்டதும் கருப்பையின் உட்புறம் முழுவதுமாக துடைத்து எடுக்கப்படும்" என்கிறார் மருத்துவர் அசோக் ஆனந்த்.

க்யூரேட்டிங் சிறிய சிகிச்சை என்பதால் பெண்கள் நீண்ட நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியதில்லை. "சில பெண்கள் மதிய இடைவேளை நேரத்தில் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். இது மிகவும் பாதுகாப்பான சிகிச்சை என்கிறார்" மும்பையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டிம்பிள் சுட்கர்.

இந்த சிகிச்சை வழக்கமான மயக்க மருந்துகள் கொடுத்தே செய்யப்படுகிறது.

டி அன்ட் சி சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

எப்போது டி அன்ட் சி சிகிச்சை ஒருவருக்குத் தேவைப்படும்?

டி அன்ட் சி சிகிச்சை ஏன் செய்யப்பட வேண்டும் என்பதற்கு கீழ்கண்ட காரணங்களை மகப்பேறு மருத்துவர் டிம்பிள் சுட்கர் கூறுகிறார்.

  • ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கரு வளரவில்லை என்றாலோ அல்லது குழந்தை உள்ளேயே இருக்கும் அபாயம் இருந்தாலோ க்யூரேட்டிங் செய்யப்படுகிறது.
  • குழந்தை பிறக்காவிட்டால் கருப்பை சுத்தம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்படும்.
  • கருக்கலைப்பிற்குப் பிறகும் கருப்பையில் கரு இருந்தால் க்யூரேட்டிங் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
  • பிறப்புறுப்பு வழியாக ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நிற்காவிட்டால் அவரச சிகிச்சை உடனடியாகத் தேவைப்படும். அந்த மாதிரியான சூழலில், க்யூரேட்டிங் மூலம் கருப்பையின் உட்சுவர் சுத்தம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்படும்.

"கருப்பை புற்றுநோய் இருப்பதற்கான சாத்தியங்கள் தெரிந்தால் பனிக்குட தசை மாதிரிகளை சேகரிக்க டி அன்ட் சி செய்யப்படும்" என்கிறார் மருத்துவர் அசோக் ஆனந்த்.

டி அன்ட் சி என்பது நோயின் தன்மையை அறிவதற்காகவும், சிகிச்சைக்காகவும் செய்யப்படுவது. கருத்தரிக்காத பெண்களுக்கு கருப்பையின் உட்சுவர் பெரிதாகும்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படும். அந்த நேரத்தில், க்யூரேட்டிங் மூலம் உட்சுவர் நீக்கம் செய்யப்பட்டால் ரத்தப்போக்கு நின்றுவிடும்.

சில பெண்களுக்கு மாதவிடாய் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். வழக்கமான தேதிக்கு முன்பாக அல்லது பின்பாக மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு, நோயின் தன்மையை அறிய டி அன்ட் சி தேவைப்படும்.

நோயைக் கண்டறிவதற்கும், அதிக ரத்தப்போக்கிற்கு சிகிச்சையளிக்கவும் பனிக்குடம் சுத்தம் செய்யப்படுவதாக மும்பை ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சுஷ்மா தோமர் கூறுகிறார்.

சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஏற்படும். அவர்களுக்கு நோய் காரணத்தை அறியவும் டி அன்ட் சி செய்யப்படும்.

டி அன்ட் சி சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

இந்த சிகிச்சையில் ஆபத்து உள்ளதா?

டி அன்ட் சி வழக்கமாக செய்யப்படும் பாதுகாப்பான சிகிச்சை. அதே நேரத்தில் அதில் சில ஆபத்துகளும் உள்ளன.

பனிக்குடத்தை சுத்தம் செய்த பிறகு அதில் தொற்றுகள் ஏற்படவும் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாகவும், பனிக்குடத்தில் மெல்லிய சவ்வு படலம் உருவாவதால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமலும் போகலாம் எனக் கூறும் டிம்பிள் சுட்கர், இவை அரிதாகவே நடக்கும் என்கிறார்.

இந்த சிகிச்சையை சரியாக செய்யவில்லை என்றால் கருப்பையில் துளைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர் அசோக் ஆனந்த் கூறுகிறார்.

யாருக்கு இந்த சிகிச்சை தேவைப்படும்?

மாதவிடாய் நின்ற பெண்களுக்கே டி அன்ட் சி சிகிச்சை அதிகம் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

"டி அன்ட் சி சிகிச்சைக்கு முன்னதாக, கருப்பையின் உட்பகுதியை ஆய்வு செய்யும் ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சை செய்கிறோம். உள்ளே செலுத்தப்படும் குழாய் மூலமாக கருப்பையை ஆய்வு செய்து, அவசியமாக இருந்தால் கருப்பையை சுத்தம் செய்வோம்" என்கிறார் மருத்துவர் அசோக் ஆனந்த்.

கருப்பையை சுத்தம் செய்த பிறகு பெண்கள் அதிகமாக கருத்தரிப்பதாகவும், அதுவே க்யூரேட்டிங் சிகிச்சையின் பலன் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: