இந்தோனீசியாவின் பாலியல் உறவு தொடர்பான புதிய சட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் அஞ்சுவது ஏன்?

இந்தோனீசியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டிஃபானி வெர்தெய்மர்
    • பதவி, பிபிசி நியூஸ்

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பேரழிவின் தாக்கங்களிலிருந்து இந்தோனீசியாவின் சுற்றுலா முகவர்கள் மீள முயற்சித்து வரும் நிலையில், அண்மையில் அந்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள திருமண உறவைத் தாண்டி உடலுறவு வைத்துக்கொள்வதை சட்டவிரோதமாகக் கருதும் சட்டங்கள் மேலும் சுற்றுலாத்துறையை முடக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமைகளுக்கான பேரழிவு என்று விமர்சகர்கள் முத்திரை குத்தியுள்ள இந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள் திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக வாழ்வதைத் தடைசெய்கின்றன. மேலும், அரசியல் மற்றும் மதச் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதை எதிர்த்து இந்த வாரம் தலைநகர் ஜகார்த்தாவில் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய குற்றவியல் சட்டம், மூன்று ஆண்டுகளில் நடைமுறைக்கு வர உள்ளது. இது நாட்டில் வசிக்கும் இந்தோனீசியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்.

இந்தச் சட்டம் குறித்து அருகில் இருக்கும் ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதிய குற்றவியல் சட்டம் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்க வாய்ப்பில்லை என்று சில பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர குற்றம் சாட்டப்பட்டவரின் குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது இணையர் புகார் அளிக்க வேண்டும்.

ஆனால் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர், இந்தச் சட்டத்தால் பிரச்னைக்குரிய சூழ்நிலைகள் உருவாகலாம் என்கிறார்.

இந்தோனீசியாவின் பொருளாதாரம் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் இந்தோனேசியாவின் முதல் சுற்றுலா ஆதாரமாக ஆஸ்திரேலியா இருந்தது. வெப்பமான காலநிலையில் குளிர் காயவும், மலிவான பிண்டாங் பீருக்காவும், இரவு கடற்கரை விருந்துகளில் ஈடுபடவும் வெப்பமண்டலத் தீவான பாலிக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

பாலி திருமணங்கள் மிகவும் பிரபலம். ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய பட்டதாரி மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியை முடித்ததைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் பாலிக்கு வருகிறார்கள்.

பல இளம் ஆஸ்திரேலியர்களுக்கு, பாலிக்கு பயணம் செய்வது ஒரு வழக்கமான பழக்கமாக உள்ளது. மற்றவர்கள் விரைவான மற்றும் மலிவான விடுமுறைக்காக வருடத்திற்கு சில முறை பாலி செல்கிறார்கள்.

பல ஆண்டுகளாக வெறும் வதந்திகளாக இருந்த இந்த சட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பது எதிர்கால பயணங்கள் தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்துள்ளது.

இந்தோனீசியாவில் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்கங்களில், புதிய சட்டங்கள் மற்றும் அவை சுற்றுலா பயணிகளுக்கு எந்த வகையில் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ள பயனர்கள் முயற்சிக்கின்றனர்.

சிலர் தங்களுடைய திருமணச் சான்றிதழுடன் பயணம் செய்ய தொடங்குவதாக கூறினார்கள். அதே சமயம் திருமணமாகாதவர்கள் தங்கள் இணையருடன் தங்கும் விடுதி அறையைப் பகிர்ந்து கொள்ள சட்டம் அனுமதிக்காவிட்டால் வேறு நாடுகளுக்கு செல்வதாகக் கூறினர்.

"நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று பாலி பயண சமூக குழுவைச் சேர்ந்த ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், "இது பாலியின் சுற்றுலாத் துறையை அழிக்க நல்ல வழி" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலர், இதை செயல்படுத்த இயலாத பயமுறுத்தும் தந்திரங்கள் என்று கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியர்கள் கவலைப்படக்கூடாது

புதிய குற்றவியல் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் குழந்தைகள், பெற்றோர் அல்லது இணையர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொண்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும், ஒன்றாக வாழ்பவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

காவல்துறையில் புகார் அளிக்க வருபவர்கள் பெரும்பாலும் உள்நாட்டவராக இருக்கவே வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து குறைவு என்று கூறும் இந்தோனீசியாவின் நீதி அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆல்பர்ட் ஆரிஸ், வெளிநாட்டினர் மத்தியில் இருக்கும் கவலைகளைப் போக்க முயன்றார்.

இந்தோனீசியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் விடுமுறைக்கு வருபவர்கள் வலையில் சிக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

"ஆஸ்திரேலிய சுற்றுலாப்பயணிக்கு ஒரு காதலன் அல்லது உள்ளூர் காதலி இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். உள்ளூர் பெற்றோர் அல்லது உள்ளூர் சகோதரர் அல்லது சகோதரி சுற்றுலாப் பயணி குறித்து காவல்துறையில் புகாரளித்தால் அது பிரச்னையாக மாறிவிடும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் ஹர்சோனோ ஏபிசி வானொலியிடம் கூறினார்.

குறிப்பிட்ட சிலருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு இது வழிவகுக்கும் என்பதால் குடும்ப உறுப்பினர் புகார் செய்தால் மட்டுமே காவல்துறை விசாரணை செய்யும் என்ற வாதம் ஆபத்தானது என்று ஹர்சோனோ கூறினார்.

"இது குறிப்பிட்ட சிலருக்கு எதிராக மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது இதற்கு அர்த்தம். அது தங்கும் விடுதியாக இருக்கலாம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக இருக்கலாம், சில காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்க அல்லது சில அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகளை சிறையில் அடைக்க இந்தச் சட்டத்தை பயன்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.

பெரும்பாலான ஆன்லைன் உரையாடல்கள் கவலைப்பட தேவையில்லை என்ற மனவோட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும், இன்னும் வலுவான கவலை வெளிப்படுகிறது.

ஒப்பீட்டளவில் சிறிய குற்றங்களுக்காக கூட இந்தோனீசிய அதிகாரிகளிடம் சிக்குவது எவ்வளவு தீவிரமானது என்பதை ஆஸ்திரேலியர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

ஆனால், சுற்றுலாத் துறையில் மற்றொரு அடியை இந்தோனீசியாவால் தாங்க முடியாது. கொரோனாவிலிருந்து தற்போதுதான் மெல்ல மீண்டு வரும் நிலையில், பல வணிகங்களும் குடும்பங்களும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் முயற்சித்துக் கொண்டுள்ளன.

2019ஆம் ஆண்டில், 1.23 மில்லியன் ஆஸ்திரேலிய பயணிகள் பாலிக்கு வருகை தந்ததாக பெர்த்தை தளமாக கொண்ட அரசு சாரா நிறுவனமான இந்தோனீசியா இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இதை 2021ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால், கொரோனா காரணமாக வெறும் 51 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பாலிக்கு வருகை தந்துள்ளதாக புள்ளிவிபர பதிவுகள் கூறுகின்றன.

இந்தோனீசியாவின் சுற்றுலாத்துறை வலுவடைந்து வருகிறது. ஜூலை 2022இல், நாட்டிற்கு 470,000 வெளிநாட்டு பயணிகளின் வருகை தந்ததாக இந்தோனேசிய தேசிய புள்ளியியல் பணியக தரவுகள் கூறுகின்றன. இது கடந்த ஆண்டு அக்டோபரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்குப் பிறகு பதிவான அதிக எண்ணிக்கையாகும்.

புதிய சட்டங்கள் பாலியின் சுற்றுலாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குநர் பில் ராபர்ட்சன் ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

சுற்றுலாவை நம்பி இருக்கிறேன்

2017ஆம் ஆண்டு முதல் பாலியில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணிபுரியும் யோமன் பிபிசியிடம் பேசுகையில், புதிய சட்டங்களின் தாக்கம் இந்தோனேசியா முழுவதும் குறிப்பாக பாலியில் மிகக் கடுமையாக இருக்கும் என்று கூறினார்.

“நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஏனென்றால் நான் சுற்றுலாவையே நம்பி இருக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

இயற்கை நிகழ்வுகள் மற்றும் மனித செயல்களின் விளைவால் பாலியின் சுற்றுலா இதற்கு முன்பும் பாதித்திருக்கிறது.

"வளைகுடா போர், பாலி குண்டுவெடிப்பு, எரிமலை வெடிப்புகள், கொரோனா என பாலி சுற்றுலா எளிதில் பாதிக்கப்படுகிறது" என்றும் யோமன் கூறினார்.

ஆனால், இந்தோனீசிய அரசாங்கம் வெளிநாட்டினரை மீண்டும் ஈர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்புகூட, 10 ஆண்டுகள் வரை வெளிநாட்டினரை வாழ அனுமதிக்கும் புதிய விசாவை அறிமுகப்படுத்தியது.

இந்தச் சட்டத்தால் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை.

2017ஆம் ஆண்டில் 18 மாதங்களுக்கு பாலிக்கு குடிபெயர்ந்த கனடாவைச் சேர்ந்த பயண பதிவர் மெலிசா ஜிரோக்ஸ், பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக பிபிசியிடம் கூறினார்.

"சட்டம் அமல்படுத்தப்பட்டவுடன் சிறைக்குச் செல்வதற்குப் பதிலாக வேறு இடங்களுக்குச் செல்வதையே பல சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள்" என்றும் அவர் கூறினார்.

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியாவின் கரன்சியில் விநாயகர் படம் இருந்ததா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: