பதின்ம வயதினரை துயரத்தில் தள்ளும் இன்ஸ்டாகிராம்: அம்பலமாகும் ஃபேஸ்புக்கின் ரகசிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
பதின்ம வயதுடைய பயனர்கள் மீது சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்த ஆய்வை ரகசியமாக வைத்திருப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
அந்த ஆய்வில் இன்ஸ்டாகிராமால் மனப் பதற்றத்துக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாவதாக பதின்ம வயதினர் கூறியிருப்பதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதழின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் தனது லாபத்துக்கு முன்னுரிமை தருவதையே இது காட்டுவதாக பரப்புரைக் குழுக்களும் பிரிட்டன், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
"சிக்கலான மற்றும் கடினமான விவகாரங்களைப் புரிந்துகொள்வதற்கான தங்களது முயற்சியை" இந்த ஆய்வு காட்டுவதாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை பின்வருமாறு:
- இந்த ஆய்வு தொடர்பான ஒரு ஸ்லைடில் மன அழுத்தத்துக்கும் மனப் பதற்றத்துக்கும் இன்ஸ்டாகிராம் காரணமாவதாக பதின்ம வயதினர் கூறியிருந்தனர்.
- 2020-இல் ஆய்வில் பங்கேற்ற 32 சதவிகித பதின்ம வயதுச் சிறுமிகள் தங்களது உடல் குறித்து மோசமாக நினைத்தபோது, இன்ஸ்டாகிராம் அதை மேலும் மோசமாக்கியதாகத் தெரிவித்தனர்.
- ஆய்வில் பங்கேற்ற பிரிட்டனைச் சேர்ந்த 13 சதவிகிதத்தினரும், அமெரிக்காவைச் சேர்ந்த 6 சதவிகிதத்தினரும் இன்ஸ்டாகிராமால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
இன்ஸ்டாகிராம் அளிக்கும் பதில் என்ன?
வால்ஸ்டீரிட் ஜர்னலின் கட்டுரைக்குப் பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டது.
தொடர்புடைய கட்டுரை, "குறிப்பிட்ட முடிவுகளில் மட்டும் கவனம் செலுத்தி, அவற்றை எதிர்மறையாகக் காட்டுகிறது. ஆனால் பிரச்னை மேலும் சிக்கலானது" என இன்ஸ்டாகிராம் கூறியிருந்தது.
"அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான தளமாக இன்ஸ்டாகிராம் அமைய உதவுவதற்காக தற்கொலை, காயப்படுத்திக் கொள்ளுதல், உண்ணுதல் குறைபாடு ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறோம்" என்று அந்தப் பதிவில் இன்ஸ்டாகிராம் கூறியது.

பட மூலாதாரம், Getty Images
"எங்கள் ஆராய்ச்சி மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில், கொடுமைப்படுத்துதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் "லைக்" எண்ணிக்கையை மறைக்கும் முறையை வழங்கியிருக்கிறோம். சிக்கலில் இருக்கும் மக்களை உள்ளூர் ஆதரவுக் குழுக்களுடன் இணைக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்"
எதிர்காலத்தில் இதுபோன்ற ஆய்வுகள் பற்றி வெளிப்படையாக இருக்கும் என்றும் அந்தப் பதவில் இன்ஸ்டாகிராம் உறுதியளித்தது.
"தீங்குகளைப் பயன்படுத்தி லாபம்"
ஆனால், "இன்ஸ்டாகிராம் தங்களுக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக ஒன்றும் செய்யாமல் இருந்திருக்கிறது" என்று குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் தேசிய அமைப்பின் தலைவரான ஆண்டி பர்ரோஸ் கூறுகிறார்.
"தளத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் ஆராய்ச்சியாளர்களையும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளையும் தடுத்துள்ளனர்"
"அவர்களை பொறுப்பாக்க வேண்டிய நேரம் இது" என்றும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேமியன் காலின்ஸ் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"வால் ஸ்ட்ரீட் ஜர்னல் புலனாய்வு மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் எப்படி லாபத்தை முன்னிலைப்படுத்துகிறது என்பது அம்பலமாகிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.
"அதிக எண்ணிக்கையிலான பதின்மவயது இன்ஸ்டாகிராம் பயனர்கள், இந்த சேவை தங்களைப் பற்றி மோசமாக உணர வைக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் நிறுவனமோ அவர்கள் மீண்டும் திரும்பி வருவதை உறுதி செய்யவே விரும்புகிறது."
வால்ஸ்ட்ரீட் ஜர்னிலின் கட்டுரை மூலம் இன்ஸ்டாகிராம் குழந்தைகளுக்கான இடமில்லை என்று தெரியவந்திருப்பதாக ஃபேர்ப்பிளே(FairPlay) என்ற அமெரிக்க பரப்புரைக் குழு கூறுகிறது.
ஆய்வின் முடிவுகளை வெளியிட ஃபேஸ்புக் நிறுவனத்தை அமெரிக்க அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அந்தக் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது..
விளம்பரங்கள் இல்லாத இன்ஸ்டாகிராம் பதிப்பு குழந்தைகளுக்காக வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
பிற செய்திகள்:
- ஆமதாபாத்தில் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சித் தருணம்
- CSK vs MI: சென்னையை மீட்ட கெய்க்வாட்; மும்பையை அசைத்த தோனியின் முடிவு
- ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் சேரும் முன் காட்டிய முரட்டுப் பிடிவாதம்
- துணையின்றி தவிக்கும் பெண் யானைகள் - தந்த வேட்டையின் கொடூர முகம்
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












