பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மகாராஷ்டிரா மற்றும் கேரள ஆகிய மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டுவருவதை எதிர்க்கின்றன.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இரண்டு மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களின் அறிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்திற்கு முன்பு வெளிவந்துள்ளன.
"மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர விரும்புவதாக பேசப்படுகிறது. அது பற்றி எந்த தகவலும் வரவில்லை. தற்போது வரை 30 -32 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி,மகாராஷ்டிரா அரசுக்கு கிடைக்கவில்லை.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரியை குறைக்கலாம். மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீது எந்த தாக்கமும் ஏற்படக்கூடாது," என்று மகாராஷ்டிர மாநில நிதியமைச்சர் அஜீத் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவுக்குப் பிறகு, கேரள அரசும் இந்தப் பிரச்னையில் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்பட்டால், மாநில அரசு அதை எதிர்க்கும் என்று கேரள நிதி அமைச்சர் என் பாலகோபால் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் ஜிஎஸ்டி செயல்முறை 2017 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது.
அந்த நேரத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் உட்பட ஐந்து பெட்ரோலிய பொருட்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த இரண்டிலிருந்தும் கிடைக்கும் வருவாயை மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரிதும் சார்ந்திருப்பதாக வாதிடப்பட்டது.
மத்திய அரசின் வருமான ஆதாரம்
சமீபத்திய நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பிஜேபி அல்லாத மாநில அரசுகள் இந்த பொருட்களுக்கான கலால் வரியை குறைக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டன.
இந்த பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜியும் அடங்குவார். அவர் ஜூலை மாதம் இது பற்றி ஒரு கடிதமும் எழுதினார்.

பட மூலாதாரம், Getty Images
"2014-15 முதல், எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வசூல் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை 370 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில், மத்திய அரசு 3.71 லட்சம் கோடி ரூபாய் இதன்மூலம் சம்பாதித்தது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசும் இதை ஒப்புக்கொள்கிறது.
இந்த வருவாயை கருத்தில்கொண்டு மத்திய அரசு அதன் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று மாநிலங்கள் வாதிடுகின்றன.
இப்போது பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
இது நடந்தால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள். பெட்ரோல் - டீசல் விலை 25 முதல் 30 சதவிகிதம் வரை குறையலாம்.
இது அமல்செய்யப்பட்டால், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டிற்குமே இழப்பு ஏற்படும். இழப்பு ஏற்படும் நிலை இருக்கும்போதும்கூட இந்த முன்மொழிவு பற்றி ஏன் விவாதிக்கப்படுகிறது?
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர கேரள உயர்நீதிமன்றத்தில் ஜூன் மாதம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் இதுகுறித்து முடிவு எடுக்கவேண்டும் என்று இதை விசாரித்த நீதிமன்றம் கூறியது.
மத்திய அரசுக்கு எத்தனை நன்மை?
இதற்காக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எத்தனை பங்கு மத்திய மற்றும் மாநில அரசின் கருவூலத்திற்குச் செல்கிறது என்பதை அறிவது முக்கியம்.

பட மூலாதாரம், Getty Images
2021, செப்டம்பர் 16 அன்று, தலைநகர் டெல்லியில் இந்தியன் ஆயில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ101.19 ஆக இருந்தது.
பெட்ரோலின் விலை இந்தத்தொகையை எப்படி அடைகிறது என்று பார்த்தால்:
• டீலர்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 41.10 என்ற விலையில் வழங்கப்படுகிறது
• அதன் மீது லிட்டருக்கு ரூ 32.90 கலால் வரி
• ஒரு லிட்டருக்கு ரூ .23.35 , வாட் சேர்க்கப்பட்டுள்ளது.
• மேலும் டீலர் கமிஷன் லிட்டருக்கு ரூ. 3.84
• எனவே விலை லிட்டருக்கு ரூ. 101.19 ஐ அடைகிறது.
இதிலிருந்து ஒரு லிட்டருக்கு ரூ .32.90 கலால் வரி, மத்திய அரசிடம் செல்கிறது. ஒரு லிட்டருக்கு ரூ .23.35 என்ற வாட் வரி டெல்லி அரசின் கருவூலத்திற்கு செல்கிறது.
அதாவது, டெல்லியில் அடிப்படை விலையை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாக பெட்ரோல் விலை உள்ளது. அந்த பணம் மாநில மற்றும் மத்திய அரசின் கருவூலத்திற்கு செல்கிறது.
பெட்ரோல் உங்களை வந்தடையும் விதம்
1. சுத்தீகரிப்பு
இங்கு கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலியம் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
2. கம்பெனிகள்
இவை லாபம் சம்பாதிக்கின்றன. பெட்ரோல் பம்புகள் வரை பெட்ரோல், டீசலை கொண்டு சேர்க்கின்றன.
3. பெட்ரோல் பம்ப்
இங்கு பெட்ரோல் பம்ப் உரிமையாளர் நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் சம்பாதிக்கிறார்.
4. நுகர்வோர்
இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்காக, கலால் மற்றும் வாட் வரி செலுத்தி அவற்றை வாங்குகிறார்.
ஜிஎஸ்டியின் கீழ் வருவதால் ஏற்படும் இழப்பு என்ன?
பீகாரின் முன்னாள் துணை முதல்வரும், தற்போது பாஜகவின் மாநிலங்களவை எம்.பியுமான சுஷீல் மோடியும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு ஆதரவாக இல்லை.
பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள் கூட்டணி, ஆட்சியில் உள்ளது.
"பெட்ரோல்-டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவந்தால், மத்திய மற்றும் மாநிலத்திற்கு 4.10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுசெய்வது கடினமாக இருக்கும். இலவச கொரோனா தடுப்பூசி, இலவச ரேஷன் பொருட்கள் வழங்கல் மற்றும் சீர்குலைந்து போயுள்ள பொருளாதாரத்தை மீட்சிப்பாதையில் கொண்டு வருவது போன்றவற்றுக்காக, மத்திய அரசுக்கு நிறைய பணம் தேவை," என்று சுஷீல் மோடி குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 10-11 ஆயிரம் கோடி லிட்டர் டீசல் விற்கப்படுகிறது மற்றும் 3-4 ஆயிரம் கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு பொருட்களையும் சேர்த்து, சுமார் 14 ஆயிரம் கோடி லிட்டர் டீசல் பெட்ரோல் விற்கப்படுகிறது. மாநிலங்கள் ஒரு ரூபாய் மட்டுமே வாட் வரி விதிப்பதாக வைத்துக்கொள்வோம். இதிலிருந்து இழப்பின் அளவை உங்களால் எளிதாக யூகிக்க முடியும்,"என்று முன்னாள் பெட்ரோலிய செயலர் செளரப் சந்திரா கூறுகிறார்.
இந்த தயாரிப்புகளின் விற்பனை மற்றும் வரியைப் பொருத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இழப்புத்தொகை வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக கேரளா தனக்கு ஆண்டுதோறும் 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிட்டுள்ளது.
ஈடு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
"பெட்ரோல்-டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது கடினம். மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இவற்றின் வருவாயின் பெரும்பகுதி இதிலிருந்துதான் வருகிறது. ஜிஎஸ்டி வரம்பிற்குள் இவற்றைக்கொண்டு வர, இருவருமே தங்கள் வருவாயின் மீதான பேராசையை கைவிட வேண்டும். அப்போதுதான் இந்த கடினமான முடிவை எடுக்க முடியும்,"என்கிறார் செளரப் சந்திரா.
ஜிஎஸ்டி விகிதத்திலும் சிக்கல் உள்ளது. தற்போது அரசுகள் பெட்ரோலின் அடிப்படை விலையின் மேல் 100 சதவிகிதம் வரியை வசூலிக்கின்றன (ஒரு மதிப்பீடு).
28% வரி வரம்பு, ஜிஎஸ்டியில் மிக உயர்ந்த வரம்பாகும். நீங்கள் அந்த வரம்பில் பெட்ரோல் மற்றும் டீசலை வைத்தாலும், மீதமுள்ள 70-72% வருமானத்தை எப்படி ஈடுசெய்ய முடியும்?
இழப்பை ஈடு செய்யும் வழிமுறைகள் பற்றி பேசிய முன்னாள் மத்திய நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க், "இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய, 28 சதவீத ஜிஎஸ்டிக்கு கூடுதலாக, சர்சார்ஜ் விதிக்கப்பட வேண்டும். அதாவது மத்திய அரசு ஆடம்பர கார்களுக்கு செய்தது போல்," என்று கூறுகிறார்.
"ஜிஎஸ்டிக்கு பிறகும் மத்திய அரசு கலால் வரியை விதிப்பது மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வது மற்றொரு வழி. இதற்காக இரு அரசுகளும் இந்த வழிமுறையை ஒப்புக் கொள்ள வேண்டும்."என்கிறார் அவர்.
ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தகராறு உள்ளது. இதன் கீழ், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான செயல்முறை உள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாயில் சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சண்டையிட்டு வருகின்றன.
அத்தகைய சூழ்நிலையில் மேலும் ஒரு இழப்பு சேர்க்கப்பட்டால், பிரச்சனை அதிகரிக்கலாம்.
உண்மையில் மாநிலங்களின் வருவாய்க்கான வழிகள் குறைவாகவே உள்ளன. மதுபானம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, எல்லாவற்றையும் விட பெரிய இரண்டு ஆதாரங்கள். இத்தகைய சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பாக அரசு எந்த முடிவை எடுத்தாலும், மாநில மற்றும் மத்திய அரசின் நலன்களை கவனிப்பது அவசியம். அதே நேரம் இதற்காக பொது மக்களின் கையிலிருந்து அதிகபணம் செலவாகக்கூடாது என்பதும் உறுதி செய்யப்படவேண்டும்.
பிற செய்திகள்:
- இலங்கை தமிழ் அரசியல் கைதிக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல்? அமைச்சர் மீது என்ன நடவடிக்கை?
- சீனாவை சீண்டும் 'ஆக்கஸ்' திட்டம்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஒன்று கூடுவது ஏன்?
- ஆரிய இனத்தைத் தேடி சென்னைக்கு வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
- சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
- சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












