ஐபிஎல் 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட் 'நம்பமுடியாத' ஆட்டத்தால் கிடைத்த வெற்றி

பட மூலாதாரம், Getty Images
ஒரு அணியில் ஒரேயொருவர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்துவிட்டால் எதிரணிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட முடியும் என்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட பொல்லார்ட். அவர் குறிப்பிட்டது சென்னை சூப்பர் கிங்க் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் பற்றி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இதே கருத்தைக் கூறினார்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு துபாயில் தொடரும் ஐபிஎல் போட்டிகளின் முதல் ஆட்டத்தின் பெரும்பகுதியை ருதுராஜ் கெய்க்வாட் ஆக்கிரமித்துக் கொண்டார். 58 பந்துகளில் அவர் அடித்த 88 ரன்கள் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
தொடக்க ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனியொருவராக நின்று மரியாதையான எண்ணிக்கையை எட்ட உதவினார் கெய்க்வாட்.
டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது தவறாகிப் போய்விடுமோ என்று எண்ணும் அளவுக்கு மும்பையின் பந்துவீச்சு இருந்தது. கடந்த பல போட்டிகளாக அதிக விக்கெட் எடுக்காத போல்ட், இந்தப் போட்டியில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
ஒரு கட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அத்துடன் அம்பதி ராயுடு காயமடைந்து வெளியேறி இருந்தார். இப்படி ஒரு நிலைக்குப் பிறகு வெற்றி பெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
ஏனென்றால் ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளிலும் 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த அணி இதற்கு முன் ஒரேயொருமுறைதான் வெற்றி பெற்றிருக்கிறது. இப்போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அந்தப் பட்டியலில் இரண்டாவதாக இடம்பிடித்திருக்கிறது.
டூ பிளெஸ்ஸிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, தோனி என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் கெய்க்வாட் நங்கூரம் பாய்ச்சிபடி மறுமுனையில் விளாசிக் கொண்டிருந்தார். அவருக்கு நல்வாய்ப்பு ஒன்றும் அமைந்தது.
19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் குயின்ட்டன் டி காக் தவறவிட்டார். போட்டி முடிந்த பிறது அது குறித்து அவர் நிறையவே வருத்தப்பட்டிருப்பார். ஏனென்றால் அதன் பிறகுதான் கெய்க்வாட் பட்டாசாக வெடித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அற்புதமான பவுண்டரிகள், நம்ப முடியாத சிக்கர்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார் கெய்க்வார்ட். பிரேவாவும் கெய்க்வாடுடன் சேர்ந்து கடைசி ஓவர்களில் நாலாபுறமும் பந்தை அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இதயத்துடிப்பை எகிற வைத்தார்.
போல்ட் வீசிய 19-ஆவது ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டன. அதில் பிராவோ இரண்டு சிக்சர்களும் கெய்க்வாட் ஒரு சிக்சரும் அடித்தனர். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான போல்ட் டி-20 ஆட்டம் ஒன்றில் அதிக ரன்களைக் கொடுத்தது இந்த ஓவரில்தான்.
உலகின் மற்றொரு முன்னிலை பந்துவீச்சாளரான பும்ராவையும் கெய்க்வாட் விட்டுவைக்கவில்லை. ஆட்டத்தின் கடைசிப் பந்தை முட்டிபோட்டி லெக் திசையில் சிக்சருக்கு தூக்கினார். வர்ணணையாளர்கள் இதை நம்பமுடியாத சிக்சர் என்றார்கள்.
பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ரன்கள் குறைவாகவே எடுக்க முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் பாதியை எப்படி ஆடியதோ அதேபோலவே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டமும் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியிலும் தடுமாறியதால் அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கெய்க்வாட் ஆடிய ஆட்டங்களிலேயே இது சிறப்பானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னும் இதுவே. ஆட்ட நாயகன் விருதும் அவருக்குக் கிடைத்தது.
அணி தடுமாறிக் கொண்டிருக்கும்போது நிதானமாக ஆடுவதே வீரர்களின் வழக்கம். ஆனால் கெய்க்வாட், "வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறினார்.
விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஏற்பட்ட அழுத்தத்தை எப்படி எதிர்கொண்டீர்கள் என்று கேட்டபோது, தோனி பின்னால் இருக்கிறார் என்பதால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று நம்பிக்கையாகக் கூறினார் கெய்க்வாட்.
அவர் கூறியது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் தோனியின் பங்கும் இருந்தது. மூன்றாவது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரான டி காக் சாஹர் வீசிய பந்தை காலில் வாங்கினார்.
பெரிய அளவில் முறையிட்ட போதும் நடுவர் அதற்கு அவுட் தரவில்லை. உடனடியாக தோனி ரிவ்யூ கேட்டார். அதில் பந்து ஸ்டம்புகளை நோக்கிச் செல்வது தெரிந்தது. அதனால் டி காக் அவுட் என அறிவிக்கப்பட்டார். தோனியின் இந்த முடிவு மும்பையின் அஸ்திவாரத்தை அசைத்ததில் முக்கியப் பங்கு வகித்தது.
பிற செய்திகள்:
- இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? சர்வதேச அரங்கில் இனி என்ன நடக்கும்?
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












