‘ரவுடி பேபி’ சூர்யா முதல் ஜி.பி.முத்து வரை 'டிக்டாக்' பிரபலங்களுக்கு என்னதான் பிரச்னை? - தொடர் சர்ச்சையின் உளவியல் பின்னணி

'டிக்டாக்' பிரபலங்களுக்கு என்னதான் பிரச்னை? - தொடர் சர்ச்சையின் உளவியல் பின்னணி
படக்குறிப்பு, புதுக்கோட்டையைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா
    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள பலரும் அண்மைக்காலமாக சர்ச்சையில் சிக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, `டிக்டாக்' செயலி மூலம் பிரபலமடைந்த சிலரின் செயல்பாடுகள் பொதுவெளியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவர்களது செயல்பாடுகளுக்கும் உளவியலுக்கும் தொடர்புள்ளதா?

மதுரை கமிஷனருக்கு அதிர்ச்சி வீடியோ

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசித்து வரும் சூர்யா தேவி என்பவர், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், டிக்டாக் பிரபலங்கள் எனப் பலரையும் விமர்சனம் செய்து பிரபலமானவர். இவர், கடந்த வாரம் மதுரை காவல் ஆணையருக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

`மன உளைச்சலில் இருக்கிறேன். என்னால் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை, நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என வீடியோவில் பேசி ஆணையருக்கு அனுப்பி வைத்தார். அவர் உடனே அந்த வீடியோவை திருச்சி காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார்.

இதையடுத்து, மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவின்பேரில் சூர்யா தேவி வீட்டுக்குச் சென்ற காவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. வெகுநேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் சென்றது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்குள்ள மின்விசிறியில் வேட்டியைத் தொங்கப் போட்டுவிட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் சூர்யா தேவி இருந்துள்ளார். அவரைத் தட்டியெழுப்பி விசாரணை நடத்திய போலீஸார், அறிவுரை கூறி விட்டுக் கிளம்பி விட்டனர்.

மணப்பாறையில் வசித்து வரும் சூர்யா தேவி
படக்குறிப்பு, மணப்பாறையில் வசித்து வரும் சூர்யா தேவி

இதே சூர்யா தேவி, டிக்டாக் செயலி மூலம் பிரபலமான `சிக்கா' என்கிற சிக்கந்தரை தெருவில் வைத்து அடித்த காட்சி வைரலானது. இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்தான், மதுரை காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி அதகளப்படுத்தினார்.

தவறான வழிக்குப் போவேன்

அதேபோல், `டிக்டாக்' செயலி மூலம் பிரபலமான புதுக்கோட்டையைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா என்பவர், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ` என்னுடைய யூடியூபை முடக்கப் போறாங்களா.... முடக்கட்டும். நான் தவறான வழிக்குப் போவேன், சத்தியமாக செல்வேன். என் மீது பாலியல் வழக்கு போட்டால் தீக்குளிப்பேன்' எனப் பகிரங்கமாக சவால்விட்டார்.

இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் பதிவிட்ட வீடியோவில் கருத்துப் பதிவிட்ட பலரும் சூர்யாவை விமர்சனம் செய்திருந்தனர். இதே பெண்மணி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.

இந்த வரிசையில், கலாசாரத்தை சீரழிப்பதாக `டிக்டாக்' மூலம் பிரபலமான தூத்துக்குடி உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து என்பவர் மீது ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. மிகவும் ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாசாரத்தை சீரழிப்பதாக முகைதீன் என்பவர் புகார் கொடுத்திருந்தார். டிக்டாக் செயலிக்கு 2019 ஆம் ஆண்டு இந்திய அரசு தடைவிதித்தபோது, ` பிரதமர் அய்யா.. எப்படியாவது டிக்டாக் தடையை நீக்குங்க, என்னால தாங்க முடியல அய்யா' எனக் கூறி உருக்கமான வீடியோ ஒன்றை ஜி.பி.முத்து வெளியிட்டது வைரலானது.

டிக்டாக்கின் இடத்தைப் பிடித்த செயலி

இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்னதாக, 50 கோடிக்கும் மேற்பட்டவர்களால் `டிக்டாக்' செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, `டிக்டாக்' பயனாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்களாக இருந்தனர். இந்தத் தளத்தில் வீடியோ பதிவிடும் கிரியேட்டர்களுக்கு `டிக்டாக்' நிறுவனம் அளித்த வாய்ப்புகளால் பலரும் பயனடைந்தனர். ஒருவருக்கொருவர் வசைபாடுவது, ஆபாச நடனம் என `பொழுதுபோக்கு' என்ற பெயரில் ஏராளமான வீடியோக்கள் வெளிவந்தன. அதேநேரம், மாடி தோட்டம், இசை, இலக்கியம் என தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தும் நோக்கிலும் பலர் செயல்பட்டனர். அனைவருக்குமான தளமாக இருந்ததால் `டிக்டாக்' பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்தது.

டிக்டாக்

பட மூலாதாரம், Getty Images

2019 ஆம் ஆண்டு டிக்டாக் தடைக்குப் பின்னர் இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் தளத்தில் பலரும் ஐக்கியமானார்கள். ஆனால், `டிக்டாக் அளவுக்கு இல்லை' என்ற பேச்சு இப்போதும் உள்ளது. தொடர்ந்து ஜோஷ் (josh), மோஜ் (moj), ரோபோசா, சிங்காரி, எம்எக்ஸ் டகடக் (MX TakaTak) போன்ற செயலிகள் வலம் வருகின்றன. `தங்களின் வீடியோக்கள் சென்று சேர வேண்டும்' என்ற நோக்கில் `டிக்டாக்' பிரபலங்கள் பலரும் தங்களை மடைமாற்றிக் கொண்டனர். இதன் நீட்சியாக, போலீஸாருக்கே இந்தப் பிரபலங்கள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதுதான் கொடுமை. தினமும் யாரையாவது வசைபாடி வீடியோ பதிவிடுவது அல்லது எதாவது ஒரு பெண் அல்லது ஆணின் நடத்தைக்கு அர்த்தம் கற்பிப்பது என சமூக வலைதளங்களில் இவர்களின் செயல்கள் அத்துமீறிக் கொண்டிருக்கின்றன.

மனநோயின் வெளிப்பாடா?

``இது ஒருவகையான மனநோயின் வெளிப்பாடு. அதனால்தான் இவர்கள் மீது காவல்துறையில் தொடர்ச்சியான புகார்கள் பதியப்படுகின்றன. நமது திறமைகளை மற்றவர்கள் பேச வேண்டும் என்பது மனிதனின் பொதுவான எண்ணமாக உள்ளது. அதாவது, தாம் பாராட்டப்பட வேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர். இதனை Positive Reinforcement என்று சொல்கிறோம். நேர்மறையாக நம்மை நாமே ஊக்குவித்துக் கொள்வது. இந்த அடிப்படையான மனித ஆசையில் இருந்துதான் இவர்களைப் போன்ற நபர்கள் உருவாகின்றனர். `திறமையைக் காட்டுகிறேன்' என்ற பெயரில் நடமாடுவது, பாடுவது அல்லது தானாக எதையாவது செய்து வீடியோ பதிவிடுவது எனச் செயல்படுகின்றனர்.

மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதி
படக்குறிப்பு, மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதி

இவற்றை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். அந்த வீடியோக்களுக்கு லைக்குகளும் ஷேர்களும் விழத் தொடங்கும்போது இதில் தொடர்புடையவர்கள் வெறி பிடித்தவர்களாகவே மாறிவிடுகின்றனர். இவர்களிடம் ஆளுமைக் கோளாறு உள்ளதையும் பார்க்க முடிகிறது. அதனால்தான், செய்யக் கூடாத விஷயங்களை பொதுவெளியில் செய்வதும் அதனை சிலர் பாராட்டுவதால் போலீஸாரையே வைத்து காமெடி செய்வதும் தொடர்ந்து நடக்கின்றன" என்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதி.

ஆபாசமாகப் பேசுவது ஏன்?

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக மேலதிக விவரங்களைப் பட்டியலிட்டார். `` தங்களை சமூக வலைத்தளங்களில் பின்தொடரும் கூட்டத்தைப் பார்த்து புகழ் போதைக்கு சிலர் ஆட்படுகின்றனர். ஆனால், பலரும் அவர்களைத் தூற்றிக் கொண்டிருப்பதை மறந்துவிடுகிறார்கள். இதுபோன்ற வீடியோக்களால் முதலில் புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டவர்கள், பின்னர் பணம் வருவதை அறிந்து கொண்டனர். தங்களின் சேனல் மானிடைஸ் ஆனதும், வீட்டில் உட்கார்ந்தபடியே பணம் சம்பாதிக்கத் தொடங்குகின்றனர். இதனைக் கவனிக்கும் படித்தவர்களும் அதில் விழுகிறார்கள். `நான் கார் வாங்கிவிட்டேன், வீடு வாங்கிவிட்டேன்' எனச் சிலர் பதிவிடுவதைப் பார்த்து மற்றவர்களும் அவர்களின் வழியைப் பின்தொடர்கின்றனர்.

இதில் கொடுமையான விஷயம், படித்த பெண்கள் பலரும் உடலை மையமாக வைத்து முகம் சுழிக்க வைக்கும் நடனங்களை காணொளிகளாக பதிவிடுவதுதான். `இவர்களுக்கு ஏன் இந்த வெறி?' என்ற எண்ணம்தான் இதனைப் பார்க்கும் பலருக்கும் தோன்றுகிறது. ஒருகட்டத்தில் அவர்களை பின்தொடரும் நபர்களிடம் இருந்து தொல்லை வரும்போது, காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர். இவர்கள் அவ்வாறு செய்வதால்தான் புகார் வரையில் நீள்கிறது. `டிக்டாக்' பிரபலங்களாக இருக்கும் பலர் மீதும் காவல்துறையில் ஏராளமான புகார்கள் உள்ளன. தங்கள் குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே சிலர் ஆபாசமாகப் பேசுகின்றனர். இவர்களில் நிறைய பேர் மது முதலான போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களாக உள்ளனர்," என்கிறார்.

மேலும், `` டிஜிட்டல் உலகில் கிடைக்கும் போதை என்பது மது முதலான போதைகளுக்கு அடிமையாவதைப் போலத்தான். நமக்குத் தெரியாமலேயே இதில் மூளையின் பங்கும் பெரியளவில் உள்ளது. இதற்கு சட்டரீதியான ஒரு பாதுகாப்பை போடாவிட்டால் அவர்கள் பேசுகின்ற ஆபாசங்கள் எல்லாம் எல்லை மீறிவிடும். தற்போது சிறார்களிடையே ஆபாச வீடியோக்களை பார்ப்பது அதிகரித்து வருகிறது. போலி ஐ.டிகள் மூலம் பலரும் உலா வரும் சூழலில், சில பிரபலங்கள் குழந்தைகளை பாதிக்கும் அளவுக்கான செயல்களைச் செய்கின்றனர்.

உளவியல் சிக்கலில் `டிக்டாக்' பிரபலங்கள்?

அவர்களது தனிப்பட்ட விஷயங்களுக்குள் நான் செல்லவில்லை. ஆனால், இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் விபரீதங்களை சமூகம் சந்தித்து வருகிறது. முழுநேரமாக விளையாட்டை மட்டுமே ரசிக்கும் குழந்தைகள், தற்கொலையை நாடும் சம்பவங்களும் உள்ளன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் செயலி போன்றவற்றைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர்கள், தற்போது மனநல மருத்துவர்களை நாட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது" என்கிறார்.

``உளவியல்ரீதியாக இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என்றோம். `` தங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்வதை திறமைக்குக் கிடைத்த பரிசாக நினைக்கின்றனர். உளவியல்ரீதியாக பார்த்தால் மூளையில் உள்ள ரிவார்டு சென்டரான டோபமைன் (Dopamine) எனப்படும் நியூரோட்ரான்ஸ்மீட்டரில் (neurotransmitter) ரசாயனம் சுரக்கத் தொடங்கும்போதுதான் இதுபோன்ற செயல்கள் எழத் தொடங்குகின்றன. இவ்வாறு செய்கிறவர்களிடம், `இது கண்டிக்கத்தகுந்த குற்றம்' என சட்ட நிபுணர்கள் கூறும்போது குற்றத்தின் எண்ணிக்கை குறையும். இவர்களை உளவியல் மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சையளிக்க வேண்டும்" என்கிறார்.

மேலும், ``சென்னையில் ஒரு பெண்ணுக்கு காவல்துறை அபராதம் விதித்தபோது அவர் நடனமாடிய சம்பவம் நடந்தது. எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதீதமான உணர்வை வெளிப்படுத்தும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. கோவிட் சூழலில் பலரும் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் பொழுதுபோக்கு விஷயங்கள் அதிகமாகிவிட்டன. ஏராளமான யூடியூபர்கள் உருவாகிவிட்டனர். இவர்களில் சிலர் தங்களைத் தாங்களே சரிசெய்துகொள்ளும் சூழல்களை உருவாக்க வேண்டும். இங்கு அனைத்து கம்யூனிட்டிகளுக்கும் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். நமக்கு நன்மையானது என சொல்வது இன்னொருவருக்கு சரியில்லாததாக தோன்றும். ஆனால், இவர்களின் செயல் இளவயதினர் மத்தியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதால்தான் பாலியல் குற்றங்கள் பெருகுகின்றன. இந்தப் பயன்பாடு ஆபத்தானது என அனைவரும் நினைக்க வேண்டும்," என்கிறார்.

சட்டப்படி என்ன தண்டனை?

``சமூக வலைதளங்களில் வலம் இதுபோன்ற வீடியோக்களின் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?" என சைபர் கிரைம் வல்லுநர் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``சாட்டிலைட் தொலைக்காட்சிகளை நெறிப்படுத்த பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, பிரசார் பாரதி சட்டம் என ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அவர்கள் எதாவது தவறான கருத்தை வெளியிட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதன்பின்னர், அவர்களது உரிமத்தை ரத்து செய்வது, அபராதம் விதிப்பது என நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால், யூட்யூபை பொறுத்தவரையில் யாரும் சேட்டிலைட் உரிமம் வாங்குவதில்லை. இணையத்தளம் மூலம் யூடியூப் பக்கத்தைத் தொடங்கி நடத்திக் கொள்கின்றனர். இதனை ஒரு சேனலாக கூறிக் கொள்கின்றனர்.

சைபர் கிரைம் வல்லுநர் வழக்கறிஞர் கார்த்திகேயன்
படக்குறிப்பு, சைபர் கிரைம் வல்லுநர் வழக்கறிஞர் கார்த்திகேயன்

மேலும், கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான தளமாகவும் அது இருக்கிறது. நாம் இன்னும் யூட்யூபை முறைப்படுத்தவில்லை. அதனால், தற்போதுள்ள சட்டங்கள் எதுவும் அவர்களுக்கு பொருந்தாது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைப் பொருத்தவரையில் தவறான விஷயங்களைப் பரப்புவது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகக் கருத்து பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்," என்கிறார்.

தொழில்நுட்ப விதி 20, 21 : என்ன சொல்கிறது?

தொடர்ந்து பேசுகையில், ``கடந்த மே 24 ஆம் தேதி அன்று தகவல் தொழில்நுட்ப விதி 20, 21 என 2 விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதில், உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசாமல், அதனை பதிவிட்டவர் தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் 36 மணிநேரத்தில் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி, தவறான உள்ளடக்கத்தை யார் பதிவிட்டாலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் விலகிச் சென்றுவிட முடியாது.

இந்த விதிகளை எதிர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வருகிறது. அவ்வாறு ஐ.பி முகவரி பெறப்பட்டால், அதனை நெட்வொர்க் சர்வீஸ் கொடுப்பவரிடம் அளித்தால் சம்பந்தப்பட்ட நபரின் முகவரி, செல்போன் எண் வைத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி இல்லாமல் வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

உதாரணமாக, நடிகை மீரா மிதுன் விவகாரத்தில் எஸ்.சி, எஸ்.டி சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவதூறான செய்திகளைப் பரப்புவது, நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற செயல்களுக்கு எதிராக ஐ.டி சட்டம் 66ஏ என்ற பிரிவு இருந்தது. இந்தப் பிரிவை மட்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீக்கிவிட்டனர். அதனை ஈடுகட்டும் வகையிலான சட்டங்கள் எதுவும் இல்லை," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :