இஸ்லாமியரை 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கமிடுமாறு மிரட்டிய இருவர் மத்திய பிரதேசத்தில் கைது

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இஸ்லாமியரை 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கமிடுமாறு மிரட்டிய இருவர் கைது
மத்திய பிரதேசத்தில் பழைய பொருள்களை வாங்கி விற்கும் முஸ்லிம் வியாபாரியை 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடக் கூறி இருவா் மிரட்டிய காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி சா்ச்சையை எழுப்பியதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.
"மஹிதிபூரைச் சேர்ந்த பழைய பொருள் வியாபாரி அப்துல் ரஷீத், உஜ்ஜயின் மாவட்டம், ஜார்தா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்."
"தனது சிறிய லாரி மூலம் பழைய பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக அங்கு சென்ற அவரை பிப்லியா தூமா என்ற பகுதியில் வழிமறித்த இருவா், அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்," என்று இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஆா்.கே. ராய் கூறியுள்ளார்.
'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுமாறு அப்துல் ரஷீதை அவர்கள் அச்சுறுத்தினர். அவர்களது மிரட்டலுக்கு பயந்து அந்த வார்த்தையை அப்துல் ரஷீத் சொன்ன பிறகே அவர் அங்கிருந்து செல்வதற்கு அந்த இருவரும் அனுமதித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கமல் சிங் (22) மற்றும் ஈஸ்வர் சிங் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜாா்தா காவல்நிலையப் பொறுப்பாளர் விக்ரம் சிங் தெரிவித்தார். மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் குலைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள சிறுமி வல்லுறவு வழக்கில் திடீர் திருப்பம்

பட மூலாதாரம், Getty Images
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவரை கர்ப்பிணி ஆக்கியதாக கைது செய்யப்பட்ட பதின்வயது நபர் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் குழந்தையின் சிறுமி கருவுறுவதற்கு இந்த பதின்ம வயது இளைஞர் காரணமல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 18 வயதாகும் இவர் 12ஆம் வகுப்பு படிக்கிறார்.
கருவுற்று சிறுமி வசிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இவர் ஜூலை 22ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அந்தச் சிறுமியை தான் பாலியல் வல்லுறவு செய்ததை ஒப்புக் கொள்ளுமாறு காவல்துறையால் நடத்தப்பட்டதாகவும் அந்த நபர் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறைக்கு எதிராக இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளதாகவும் இவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் இந்த பதின் வயது நபர் சிறுமியின் கருவுக்கு காரணமில்லை என்றாலும் அவர் சிறுமியை வல்லுறவு செய்தாரா என விசாரணை தொடரும் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு துரிதப்படுத்தி உள்ளது என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் மற்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












