ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா திடீர் தாக்குதல் - விரிவான தகவல்கள்

அமெரிக்க படைகள் வெளியேறிவரும் நிலையில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அமெரிக்க படைகள் வெளியேறிவரும் நிலையில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா நேற்று (ஆகஸ்டு 29) தாக்குதலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவான ஐ.எஸ் - கே (இஸ்லாமிக் ஸ்டேட் - கோரேசன்) அமைப்பின் உறுப்பினர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

ஆளில்லா விமானம் ஒன்றிலிருந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காபூல் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்த தற்கொலை குண்டுதாரி ஒருவரை இலக்குவைத்து நடத்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் ஒரு வாகனத்தில் அப்பொழுது பயணித்துக்கொண்டிருந்தார்.

"நாங்கள் இலக்கு வைத்த நபரை தாக்கி விட்டதாகவே நம்புகிறோம்," என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் இறந்ததாகவோ, காயமடைந்ததாகவோ ஆரம்பகட்ட செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இலக்கு வைத்து தாக்கப்பட்ட வாகனத்தில் தாக்குதலின் பின்பு நடந்த வெடிப்பு அந்த வாகனத்தில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருந்ததை குறிக்கின்றது என்றும் அந்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலால் காபூல் விமான நிலையத்துக்கு இருந்த தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டது என்று அமெரிக்காவின் யு.எஸ். சென்ட்ரல் காமாண்டின் கேப்டன் பில் அர்பன் கூறியுள்ளார்.

குண்டு வைக்க திட்டமிட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது அமெரிக்காவின் வான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார் என்று ஏபி செய்தி முகமை கூறுகிறது.

காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது, நங்கஹார் மாகாணத்தில் வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் சனியன்று கூறியது.

விமான நிலையம் அருகே இருந்த கட்டடம் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலும் அமெரிக்கா நடத்திய தாக்குதலும் ஒன்றுதானா என்பது குறித்து தகவல்கள் இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கு பின் காபூல் விமான நிலையம் அருகே இருந்த கட்டங்களில் இருந்து புகை மூட்டம் வெளியாகும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.

வியாழன்று இறந்த 170 பேர்

வியாழனன்று (ஆகஸ்டு 26) காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சுமார் 170 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 அமெரிக்க படையினரும் அடக்கம்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் - கே அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலில் தொடர்புடைய ஜிகாதிகளை அமெரிக்கா வேட்டையாடும் என்று என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அப்போது கூறியிருந்தார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தாக்குதலுக்கு பின் உண்டான புகை.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தாக்குதலுக்கு பின் உண்டான புகை.

அதே வேளையில் காபூலில் மேலும் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புண்டு என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது.

காபூல் விமான நிலையத் தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்ட பின்பு அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்துவதைத் தொடரும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருந்தார்.

எனினும் அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் புதியதொரு போரை தொடங்க விரும்பவில்லை என்றும் அவர் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் - கே அமைப்பை வலுவிழக்க வைக்கவும், நிலையற்றதாக்கவும் தாங்கள் உறுதிபூண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான படைகளுக்கு உதவியவர்களை அங்கிருந்து மீட்பதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்னும் சுமார் 300 அமெரிக்க குடிமக்கள் உள்ளனர் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி ப்ளின்கன் கூறுகிறார்.

எனினும் கடைசி தேதிக்குப் பிறகும் அங்கேயே இருக்க சிலர் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

அவர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர்களை அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகள் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் ஆண்டனி ப்ளின்கன் கூறுகிறார்.

ஆப்கானியர்கள் யாரும் நாட்டிலிருந்து வெளியேறக் கூடாது என்று கூறியுள்ள தாலிபன்கள், விமான நிலையம் செல்வோரை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :