ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? உதவுவதை மறுக்கும் பாகிஸ்தான், இரான், ரஷ்யா

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்
    • எழுதியவர், தாவூத் அசாமி
    • பதவி, பிபிசி உலக சேவை & ரியாலிட்டி செக் அணி

உலகின் மிகவும் செல்வச் செழிப்பான கிளர்ச்சியாளர்கள் குழுவில் தாலிபனும் ஒன்று. இரண்டு தசாப்தங்களாக அமெரிக்காவையும் அதன் கூட்டாளி நாடுகளின் ராணுவங்களையும் எதிர்த்து சண்டையிட்ட பிறகு, இப்போது அவர்கள் ஆஃப்கானிஸ்தானைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? தாலிபன்களின் நிதிநிலைமை என்ன?

தாலிபன்கள் 1996லிருந்து 2001வரை இவர்கள் ஆஃப்கானிஸ்தானை ஆட்சி செய்தார்கள். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் இவர்களைப் பதவியிறக்கியது. அதைத் தொடர்ந்து 20 வருடங்கள் பிரச்னை நடந்தது.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிபன்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் சமீபகாலமாக இந்தக் குழுவின் ஆதிக்கமும் ராணுவ பலமும் அதிகரித்திருக்கிறது. 2021ல் இவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 முதல் 1 லட்சம் பேர் வரை. பத்து வருடங்களுக்கு முன்பு தாலிபனில் 30,000 பேர் மட்டுமே இருந்ததாக அமெரிக்கா கணித்திருந்தது.

இந்த அளவுக்கு பிரம்மாண்டமான குழுவை வைத்துக்கொண்டு கிளர்ச்சி செய்வதற்கு ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இவர்களுக்கு நிதியுதவி வந்திருக்கிறது.

2011 முதல் இவர்களின் ஆண்டு வருமானம் 400 மில்லியன் டாலர்களாக (சுமார் 3 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) இருக்கிறது என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. பிபிசியின் சில ஆராய்ச்சிகளின்படி, 2018க்குப் பிறகு இது வருடத்துக்கு 1.5 பில்லியன் டாலர் (சுமார் 11 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) ஆக உயர்ந்திருக்கலாம்.

தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானுக்குள்ளும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்ட பிபிசி நேர்காணல்கள், இந்தக் குழுவின் நிதி அமைப்பும் வரி அமைப்பும் மிகவும் நுணுக்கமானது என்று தெரிவிக்கின்றன. இவர்களுக்குப் பல வழிகளில் வருமானம் வருகிறது. அவற்றில் முக்கிய வருமானங்களைப் பார்க்கலாம்.

1. வெளிநாட்டு நன்கொடைகள்

ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல அதிகாரிகள், பாகிஸ்தான், இரான், ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து தாலிபன்களுக்கு நிதி தருவதாகக் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

ஆனால் அந்த நாடுகளின் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து மறுக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் தனிப்பட்ட முறையில் பெருமளவில் நிதி அளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது

எத்தனை பணம் வருகிறது என்பதை தெளிவாக சொல்ல முடியாவிட்டாலும் இந்த நிதி உதவி தாலிபனின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வருடத்துக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3,700 கோடி இந்திய ரூபாய்) வரை இருக்கலாம். இவை பல வருடங்களாகவே இருந்துவரும் நட்புறவுகள். வெளிநாடுகள், குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து 2008ம் ஆண்டு மட்டும் தாலிபனுக்கு 106 மில்லியன் டாலர்கள் வந்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2. போதைப்பொருள் வர்த்தகம்

ஒபியம் சாகுபடி ஆஃப்கனில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒபியம் சாகுபடி ஆஃப்கனில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது

தங்கள் கிளர்ச்சிக்கான நிதியைத் திரட்ட போதைப்பொருள் வர்த்தகம் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

உலகிலேயே அதிக அளவில் அபின் தயாரிக்கும் நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இந்த அபின் சுத்திகரிக்கப்பட்டு ஹெராயினாக மாற்றப்படுகிறது. வருடத்துக்கு 1.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை ஏற்றுமதி வருமானம் வரும் என்பதால் இது ஒரு பெரிய தொழில்தான், உலகில் உள்ள பெரும்பாலான ஹெராயின் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. (ஒரு பில்லியன் என்பது இந்திய ரூபாயில் சுமார் 7,500 கோடி)

இதைப் பயிரிடும் விவசாயிகளிடமிருந்து 10% வரி வசூலிக்கப்படுகிறது என்கிறார்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள்.

அபினை ஹெராயினாக மாற்றும் மையங்களிடமிருந்தும் வரி வசூலிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக இதைக் கடத்துபவர்களிடமிருந்தும் பணம் வருகிறது.

இதிலிருந்து தாலிபன்களுக்கு வருடந்தோறும் 100 முதல் 400 மில்லியன் டாலர்கள் வருமானம் வரும். தாலிபன்களின் ஆண்டு வருமானத்தில் 60% போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்துதான் வருகிறது என்று 2018ல் ஆப்கானிஸ்தான் மறுகட்டமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அறிக்கையில் தெரிவிக்கிறார், அமெரிக்க கமாண்டர் ஜெனரல் ஜான் நிக்கல்ஸன். ஆனால் இந்தக் கணக்கீடு அதிகம் என்கிறார்கள் சில வல்லுநர்கள்.

தங்களுக்கும் போதைப்பொருளுக்கும் தொடர்பில்லை என்று சொல்லும் தாலிபன்கள், 2000ல் ஆட்சியில் இருந்தபோது ஓப்பியம் (அபின்) பயிரிடுவதையே தடை செய்திருந்ததைப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.

3. கட்டுக்குள் உள்ள இடங்களை அதிகரித்தல்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

அபின் வர்த்தகத்தைத் தாண்டியும் பல இடங்களில் தாலிபன்களின் வரிவிதிப்பு நிகழ்கிறது. 2018ல் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில், எரிபொருள், கட்டுமானப் பொருள் உட்பட பல சரக்குகளைத் தங்கள் கட்டுப்பாடு உள்ள இடங்களைத் தாண்டி எடுத்துச்செல்லும்போது வரி தரவேண்டும் என்று தாலிபன்கள் எச்சரித்தனர்.

ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்தபிறகு, நாட்டின் எல்லா வர்த்தகப் பாதைகளும் இவர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. எல்லைகளும் இவர்கள் வசம்தான் இருக்கின்றன. ஆகவே ஏற்றுமதி இறக்குமதியிலிருந்து இப்போது அதிக வருமானம் வர வாய்ப்பிருக்கிறது.

கடந்த இருபது வருடங்களாக மேலை நாட்டுப் பணமும் எப்படியோ தாலிபன்களின் சட்டைப்பைக்குள் வந்து சேர்ந்திருக்கிறது.

முன்னேற்ற மட்டும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தாலிபன்கள் வரி விதித்தார்கள். மேலை நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை இதில் அடங்கும்.

இரண்டாவதாக, நாட்டில் உள்ள சர்வதேசத் துருப்புகளுக்குப் பொருட்களைக் கொண்டுவந்த லாரிகளுக்கும் இவர்கள் வரிவிதித்துப் பல மில்லியன் டாலர்கள் ஈட்டியிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் அரசு தரும் சேவைகளிலிருந்தே இவர்களுக்கு வருமானம் வந்திருக்கிறது. மின்சாரத்தைப் பயன்படுத்துவோரிடம் வரிவிதித்தது மூலமாக மட்டுமே வருடத்துக்கு 2 மில்லியன் டாலரைத் தாலிபன்கள் பெற்றதாக 2018ல் ஒரு பிபிசி பேட்டியில் தெரிவித்தார் ஆப்கானிஸ்தானின் மின்சார நிறுவனத் தலைவர்.

நேரடியாக சண்டையிலிருந்து வரும் நிதியும் உண்டு. ஒவ்வொரு முறை ஒரு ராணுவத் தளமோ நகர்ப்புறக் கட்டடமோ கைப்பற்றப்படும்போதும், அந்த கருவூலத்தில் உள்ள பணம், ஆயுதங்கள், வாகனங்கள், தளவாடங்கள் எல்லாவற்றையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

4.சுரங்கங்களும் கனிமங்களும்

நகைகளுக்கு பயன்படும் லபிஸ் கல் - ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நகைகளுக்கு பயன்படும் லபிஸ் கல் - ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் பல கனிம வளங்கள் உண்டு. பல ஆண்டுகளாக சண்டை நடப்பதால் இவை உபயோகிக்கப்படாமல் இருக்கின்றன. ஒரு வருடத்துக்கு 1 பில்லியன் டாலர் மதிப்புள்ளது இந்தத் துறை என்று ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான கனிம வளங்கள் சிறிய அளவில் சட்டவிரோதமாக எடுக்கப்படுகின்றன. தாலிபன்கள் சுரங்கங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதில் வரும் பணத்தையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

2014ல் வந்த ஓர் ஐ.நா அறிக்கை, தெற்கு ஹெல்மாண்டில் உள்ள 25 முதல் 30 சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து தாலிபன்கள் வருடத்துக்கு 10 மில்லியன் டாலர்கள் பெறுகிறார்கள் என்று தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :