ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி இந்தி
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து இந்திய அரசு வியாழக்கிழமை அனைத்து தரப்பினருடனும் விவாதித்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தனது குடிமக்களை வெளியேற்றுவதே இந்தியாவின் முதல் முன்னுரிமை என்று 31 எதிர்க்கட்சிகளுடனான சந்திப்பில் அரசும் கூறியது.
ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பாலான இந்தியர்களை இந்தியா பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது, ஆனால் சிலர் இன்னும் அங்கே இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் நெருக்கடி குறித்து ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரிடமும் இந்தியா பேசியுள்ளது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அதிர் ரஞ்சன் சௌத்ரி, என்சிபி தலைவர் சரத் பவார், முன்னாள் பிரதமர் ஹெச் டி தேவகவுடா மற்றும் திமுக தலைவர் டிஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்களில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பியூஷ் கோயல் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் அடங்குவர்.
இந்தச் சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தான் பிரச்சினை நாடு முழுவதற்கும் கவலைக்குரிய விஷயம் என்றும், தாங்கள் இதில் அரசாங்கத்துடன் துணை நிற்பதாகவும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு உறுதியளித்தன.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் நெருங்கிய நட்பு நாடாக இருந்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் அதிக முதலீடுகளும் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் திடீர் அதிகார மாற்றம் இந்தியாவிற்குச் சவாலான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து தன் குடிமக்களையும் தன் கூட்டாளிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது இந்தியாவின் முன் உள்ள மிகப்பெரிய சவால். அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானில் தன் நலன்களைப் பாதுகாப்பதும் இந்தியா முன் உள்ள நீண்ட கால சவாலாக உள்ளது.
இப்போது, இந்தியாவின் முழு கவனமும் தன் குடிமக்கள் மற்றும் தனது நடவடிக்கைகளுக்கு உதவும் ஆப்கன் மக்கள் ஆகியோரைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதில்தான் உள்ளது.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் முனைவர் ஸ்வஸ்தி ராவ் கூறுகையில், "இதுவரை இந்தியா தனது குடிமக்கள் மற்றும் கூட்டாளிகளை வெளியேற்றுவதில், 'ஆபரேஷன் தேவி சக்தி' என்ற நடவடிக்கையின் மூலம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. இந்தியா தனது சர்வதேச நட்பு நாடுகளின் உதவியையும் பெற்று வருகிறது.
ஸ்வஸ்தி ராவ் கூறுகையில், 'இந்தியாவின் முன் உள்ள பெரிய சவால் மத்திய ஆசியாவில் தன் முதலீடுகளையும் நலன்களையும் பாதுகாப்பதாகும். தாலிபன்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்போ அல்லது 2019 ல் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னரோ காஷ்மீர் குறித்த எந்தக் கருத்தையும் தாலிபன்கள் வெளியிடவில்லை. இது இந்தியாவின் உள் விவகாரம் என்பது தான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. இது இந்தியாவுக்கு ஒரு சாதகமான அம்சமாகும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவால் அனைவரையும் மீட்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் 31 அன்று அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விடும். தற்போது, காபூல் விமான நிலையம் அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பில் உள்ளது. காபூல் விமான நிலையம் வழியாகவே மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தனது நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. பிரான்ஸ் தனது வெளியேற்ற நடவடிக்கையை முடித்துக்கொண்டது.
இத்தகைய சூழ்நிலையில், ஆகஸ்ட் 31 -க்குள் இந்தியா தனது மக்களை காபூலில் இருந்து மீட்கத் தவறினால், அதன் பிறகு மீட்பு சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுகிறது. அது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.
அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர் கபீர் தனேஜா, இது குறித்து, "காபூலில் இருந்து அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பின் கீழ் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அமெரிக்கப் படைகள் திரும்பிச் சென்றுவிட்டால், காபூல் விமான நிலையம் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
ஆகஸ்ட் 31 என்ற காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று ஏற்கெனவே தாலிபன் கூறியுள்ளது. ஆகஸ்ட் 31க்குப் பிறகு, எந்த நாடும் தனது குடிமக்களை காபூலில் இருந்து மீட்பது மிகவும் கடினமாக இருக்கும், மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும்." என்று கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், ஆகஸ்ட் 31க்குப் பிறகும், இந்தியா ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையைத் தொடர வேண்டியிருந்தால், அந்தப் பயணம் எந்தத் தடத்தில் இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்துக் கூறிய தனேஜா, 'இந்தியாவுக்கு மிகவும் குறைவான வாய்ப்புகள் மட்டுமே எஞ்சியிருக்கும். தஜிகிஸ்தானில் உள்ள துஷன்பே அல்லது ஈரான் வழியாக மக்களை வெளியேற்றலாம்." என்று குறிப்பிடுகிறார்.
ஆகஸ்ட் 31க்குப் பிறகும் விசா போன்ற தேவையான ஆவணங்களைக் கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபன் கூறியுள்ளது. ஆகஸ்ட் 31 க்குப் பிறகு காபூல் விமான நிலையம் செயல்படுமா? என்கிற சந்தேகம் உள்ளது. காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பை துருக்கி ஏற்க விரும்பியது, ஆனால் துருக்கி இப்போது காபூலை விட்டு வெளியேறிவிட்டது.

பட மூலாதாரம், @MFA_CHINA
"தாலிபன் அனுமதி பெற்றவர்களை மீட்க இந்தியாவால் முடியும். ஆனால் இந்தியா தனது கூட்டாளிகளை ரகசியமாக அங்கிருந்து மீட்க விரும்பினால், அது தஜிகிஸ்தான் அல்லது ஈரான் வழியாகத்தான் சாத்தியமாக இருக்க முடியும்" என்று கணிக்கிறார் தனேஜா.
இந்தியா தஜிகிஸ்தானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. ரஷ்யாவும் இந்தியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. இந்நிலையில், தாலிபன்களுடன் உறவுகளை உருவாக்க இந்தியாவுக்கு ரஷ்யா உதவும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பேராசிரியர் ஸ்வஸ்தி ராவ், "தற்போது, நான்கு பெரிய நாடுகளின் நலன்கள் ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையவை. அவை, ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா.
பாகிஸ்தான் ஏற்கனவே அங்கு பங்கு வகிக்கும் ஒரு பெரிய நாடாக உள்ளது. அது தாலிபன்கள் மீது செல்வாக்கும் கொண்டுள்ளது. ஈரான் மற்றும் ரஷ்யாவின் உதவியுடன்தான் இந்தியாவுக்கான பாதைகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஈரான் மற்றும் ரஷ்யாவின் தூதரகங்கள் இன்னும் அங்கு இயங்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்த நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் உதவியாக இருக்கும்." என்று விவரிக்கிறார்.
இந்தியா, தாலிபனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா தாலிபன்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து இந்தியா இன்னும் தெளிவுபடுத்தவில்லை. தாலிபன் தலைவர்கள், ஊடகங்களில் பேசும்போது இந்தியாவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறியுள்ளனர்.
இருப்பினும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாகத் திரும்புவது குறித்து, இந்தியா தாலிபன்களுடன் தொடர்பில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
"இந்தியா தாலிபன்களுடன் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம். இந்தியர்களை மீட்கும் நோக்கில் ஏதோ ஒரு மட்டத்தில் நிச்சயம் இந்தியா தாலிபனுடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கும்" என்கிறார் கபீர் தனேஜா.
கொள்கை ரீதியாக இந்தியா, தாலிபன்களை எதிர்க்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தாலிபன்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கும் இந்தியாவில் ஆதரவு உள்ளது. இந்தியப் பொது மக்களுக்கு தாலிபன்கள் மீதான எதிர்மறை எண்ணமே நிலவிவருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்தியா தாலிபன்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா, இதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
வெளியே சொல்லக்கூடாது
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் தனேஜா, "இந்தியா பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், அதை பகிரங்கப்படுத்தக்கூடாது. தாலிபன்கள் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது உண்மை, இந்நிலையில், இன்றோ அல்லது நாளையோ இந்தியா தாலிபன்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியாக வேண்டிய சூழல் உருவாகலாம்.
இந்தியா தாலிபன்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும், அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள இப்போது சரியான நேரம் இல்லை என்று நினைக்கிறேன்." என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
காபூலைக் கைப்பற்றுவதற்கு முன்பே, தாலிபன்கள் சர்வதேச உறவுகளை உருவாக்கத் தொடங்கினர். தாலிபன் தலைவர், ஈரான், சீனா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். கத்தாரிலும் பல நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
ஆப்கானிஸ்தானில் சீனா அதிக ஈடுபாடு காட்டுகிறது. ரஷ்யாவும் தாலிபன்களை ஆதரிப்பதாகவே காட்டிக்கொள்கிறது. ஷியா பெரும்பான்மை நாடான இரான், சன்னி அடிப்படைவாத தாலிபனுக்கு விரோதமாகவே இருப்பது பாரம்பரியமாக இருந்தாலும், இப்போது, தாலிபன்களுடனான உறவை மேம்படுத்தி வருகிறது.
இந்தியாவின் நலன்கள் ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையவை, எனவே இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்க ஏதேனும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கிறதா?
இதற்குப் பதிலளிக்கும் கபீர் தனேஜா, 'இந்தியாவின் முன் உள்ள சவால் என்னவென்றால், அது தாலிபன்களுடன் பேசுவதானால், யாருடன் பேசுவது? தற்போது, காபூல், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான ஹக்கானி நெட்வொர்க்கின் கைகளில் உள்ளது. இந்தியாவின் தூதரகங்கள் அதன் இலக்காக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில், ஹக்கானி நெட்வொர்க்கைப் புறக்கணித்து இந்தியா தாலிபன்களுடன் பேச விரும்பினால், அது அவ்வளவு எளிதாக இருக்காது." என்கிறார்.
இது குறித்து மேலும் பேசிய ஸ்வஸ்தி ராவ், "இந்தியா மட்டுமல்ல, ரஷ்யாவின் நலன்களும் ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையவை. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மத்திய ஆசியா முழுவதையும் பாதிக்கலாம். மேலும், இப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை குலைவதை ரஷ்யா விரும்பவில்லை. அத்தகைய சூழ்நிலையில், ரஷ்யா ஆப்கானிஸ்தானில் இந்தியாவிற்கு சிறப்பான உதவி செய்ய முடியும். இந்தியாவிற்கு உதவுவதால், ரஷ்யாவிற்கும் லாபம் இருக்கும்." என்று கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












