விமானத்தில் பிரசவம்: 30 ஆயிரம் அடி உயரத்தில் ஆப்கன் அகதிக்கு குழந்தை பிறந்தது

சொமன் நூரி மற்றும் குடும்பத்தினர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சொமன் நூரி மற்றும் குடும்பத்தினர்
    • எழுதியவர், ஜார்ஜ் போவ்டென்
    • பதவி, பிபிசி செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர், பிரிட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில், சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார்.

சொமன் நூரி என்கிற 26 வயதான பெண், துபாய் நகரத்தில் இருந்து, பிரிட்டனில் இருக்கும் பர்மிங்ஹாம் நகரத்துக்கு மக்களை மீட்டு வரும் விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டது என துருக்கி ஏர்லைன்ஸ் கூறியது. இவர் முன்பே ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி துபாய் சென்றிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அந்த விமானத்தில் பறந்த பயணிகளில் மருத்துவர் யாரும் இல்லை. எனவே விமான பணியாளர்கள் சேர்ந்து, சொமன் நூரிக்கு பிரசவம் பார்த்து இருக்கின்றனர்.

சொமன் நூரி ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு ஹவா அல்லது ஆங்கிலத்து ஈவ் என பெயரிட்டுள்ளனர். தாய் சேய் இருவரும் நலமாக இருப்பதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

சோமன் நூரி, 30 வயதான தன் கணவர் தாஜ் மொஹ் ஹம்மட் (Taj Moh Hammat) உடன் பயணித்தார். அவர்களின் இரு குழந்தைகளும் உடன் பயணித்தனர்.

சொமன் நூரி உடன் ஹவா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சொமன் நூரி உடன் ஹவா

துபாயில் இருந்து புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், முன்னெச்சரிக்கை கருதி குவைத் நாட்டில் தரை இறக்கப்பட்டது, அதன் பின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) பிரிட்டன் நேரப்படி காலை 11.45 மணிக்கு பிரிட்டனின் பர்மிங்ஹம் நகரத்தைச் சென்றடைந்தது எனவும் அவ்விமான நிறுவனம் கூறியது.

பிரிட்டனின் கடைசி விமானம்

ஆப்கானிஸ்தான் மக்களுக்கான பிரிட்டனின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டதாக பிரிட்டனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார். இவ்விமானம் சனிக்கிழமை மதியம் காபூலில் இருந்து புறப்பட்டது.

இதற்குப் பிறகு காபூல் நகரத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ராஜீய அதிகாரிகள் மற்றும் ராணுவ துருப்புகளுக்கானதாக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதே போல பிரிட்டனின் துருப்புகள் மற்றும் அதிகாரிகள் காபூலில் இருந்து புறப்பட்டுவிட்டதாக பிரிட்டன் அரசு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

காபூலில் இருந்து வெளியேறும் துருப்புகள்

பட மூலாதாரம், CROWN COPYRIGHT

படக்குறிப்பு, காபூலில் இருந்து வெளியேறும் துருப்புகள்

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த பிரிட்டன் ராணுவ செயல்பாடுகள், காபூலில் இருந்து படையினர் மற்றும் அதிகாரிகளுடன் புறப்பட்ட கடைசி விமானத்தோடு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

தங்களால் எல்லா மக்களையும் காப்பாற்ற முடியவில்லை என்பது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாக ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் சர் நிக் கார்டர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் பிரிட்டன் 15,000 மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி இருகிறது. இதில் 2,100 குழந்தைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனுக்காக பணியாற்றிய முன்னாள் ஆப்கன் ஊழியர்களுக்காக, தனியே சிறப்பு குடியேற்றத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :