விழுப்புரம் அருகே தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி - தமிழ்நாடு காவல்துறையால் தாய் கைது

தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி

பட மூலாதாரம், Screenshot

படக்குறிப்பு, குழந்தை துன்புறுத்தப்படும் காணொளி ஆறு மாதங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

விழுப்புரத்தில் தாயே தனது குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக விழுப்புரம் போலீசார் குழந்தையின் தாய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஞாயிறன்று (ஆகஸ்டு 29) தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை அப்பெண்ணை ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்துக் கைது செய்துள்ளது. கணவரையும் குழந்தைகளையும் சில மாதங்களுக்கு முன்னரே பிரிந்த அவர் தமது தாயின் வீட்டில் இருந்துள்ளார். அப்பெண் இனி தமிழ்நாடு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

யார் இந்தப் பெண்?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் (வயது 26) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த துளசி (வயது 23) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன.

இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும்போது துளசி தனது இரண்டு வயது இளைய மகனை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் குழந்தையை அடிப்பதை அவருடைய அலைபேசியில் வீடியோவாக யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அன்று கணவன் வடிவழகன், மனைவி துளசி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது கணவரை அச்சுறுத்தும் வகையில் துளசி தன் இரண்டு வயது இளைய மகனை வாயில் அடித்து காயம் ஏற்படுத்துவதை தனது அலைபேசியில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

பிறகு குழந்தை கீழே விழுந்து அடிபட்டுவிட்டதாகக் கணவரிடம் கூறி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.

ஆறு மாதங்களுக்கு பிறகு வெளியான காணொளி

இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், நேற்று மாலையிலிருந்து சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் நான்கு வீடியோக்கள் வேகமாகப் பரவின.

குழந்தை துன்புறுத்தப்படும் காணொளி ஆறு மாதங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது

பட மூலாதாரம், Screenshot

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, குழந்தையை சித்திரவதை செய்யும் பெண்ணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் யாரென தெரியவந்தது. தன்னுடைய குழந்தையை அவரே சித்ரவதை செய்துள்ளார் என்பதும் உறுதியானது.

குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோக்களை சில தினங்களுக்கு முன்பு கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்‌ அடிப்படையில் சித்ரவதை செய்த தாயின் மீது நான்கு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தொடர்புகொண்டு இந்த சம்பவம் பற்றி கேட்டது பிபிசி தமிழ். அப்போது காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது, "கணவர் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. அதன் காரணமாக தற்போது அப்பெண் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் அவருடைய தாய் வீட்டில் வசித்து வருகிறார்."

"தாய் அவரது குழந்தையைத் தாக்கும் சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது. ஆனால் இது பற்றிய காணொளி காட்சி தற்போது தான் வெளியாகியுள்ளது. கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் மீது குழந்தையை அடித்து சித்திரவதை செய்த காரணத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."

"தற்போது அப்பெண் ஆந்திராவில் இருப்பதால் தனிப்படையமைத்து இந்த வழக்கில் புலன்விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு குழந்தைகளும் தந்தை வடிவழகனிடம் பாதுகாப்பாக இருக்கின்றனர், " எனக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

உளவியலாளர் சொல்வது என்ன?

இந்த நிகழ்வு பற்றி உளவியலாளர் வி.சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் உரையாடியது. சில கேள்விகளும் அவரது பதில்களும்:

தாயே இப்படி கொடுமை செய்யும் மனநிலை வர என்ன காரணம்?

"பொதுவாக நமது சமூகத்தில் குழந்தை பெற்றெடுப்பது பெண்களுக்கு ஒரு கட்டாயக் கடமையாக இருக்கிறது.

குழந்தை பெற்றெடுப்பதற்கு மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான தயார் நிலையில் இருக்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

குழந்தை பெற்ற பிறகு அதை வளர்ப்பதில் பெரும்பங்கு பெண்கள் மீதே விழுகிறது. இந்தியாவில் பெருமளவு பெண்கள் சிறிய வயதில் திருமணம் செய்து கொள்வதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆகவே அவர்களது படிப்பை பாதியில் விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் சரியான வேலை மற்றும் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் கணவரிடமும், கணவர் குடும்பத்தையும் சார்ந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.‌ இதனால் ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் மனநலப் பிரச்சனைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன," என்றார் அவர்.

"ஆண்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது, பிடித்த விஷயத்தில் நேரம் ஒதுக்குவது போன்றவற்றால் தங்கள் மன உளைச்சலை தணித்துக்கொள்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அதற்கு உண்டான வாய்ப்பு அமைவதில்லை. இதனால் அவர்களது மன உளைச்சல் அதிகமாகிறது.

தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி - தாய் மீது வழக்குப் பதிவு.

பட மூலாதாரம், kieferpix / getty images

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக மட்டும்

இந்த சம்பவத்தை பொறுத்தவரை குழந்தையின் தாய்க்கு மனநல பிரச்சனை இருப்பதாக சந்தேகம் உள்ளது. ஏனென்றால் சராசரியாக இருக்கக்கூடிய தாய்மார்கள் தன் குழந்தையை அடித்து, அதை வீடியோ பதிவு செய்யமாட்டார்கள். குழந்தைக்கு காயம் ஏற்படும் அளவிற்கு நடந்து கொள்ளமாட்டார்கள். மனநல பிரச்சினை இருந்தால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும்.

இவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தாலும், அவர் மனநலத்தை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை கொடுப்பது மிகவும் அவசியமானது," என்றார் மருத்துவர் சுனில் குமார்.

தவிர்க்க என்ன செய்வது?

"மேற்கத்திய நாடுகளில் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஆண்-பெண் இருவருக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

இதன் மூலம் திருமணம் பற்றிய புரிதல் இருவருக்கும் ஏற்படும். உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக திருமணத்திற்கும், குழந்தை பெற்றெடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்களா என்பதையும் கண்டறிய முடியும்.

குழந்தை பெற்றெடுப்பதற்கு முன்பு குழந்தை வளர்ப்பதற்கான தகுதி உள்ளதா? பொருளாதார பின்னணி இருக்கிறதா? அந்த குழந்தையை வளர்ப்பதற்கு செலவிட நேரம் இருக்கிறதா? குழந்தையைப் பாதுகாக்கும் சூழல் உள்ளதா? என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து திருமணம் செய்து கொள்வதே உசிதமானது. இவையெல்லாம் நடைபெறாத காரணத்தினால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறுகின்றன."

குழந்தைக்கு உண்டான மனக் காயத்தைப் போக்க என்ன வழி?

"இந்த சம்பவம் குழந்தைக்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். உடனடியாக நாம் செய்யவேண்டிய ஒரு விஷயம் குழந்தைக்கு பாதுகாப்பான சூழலை அமைத்து கொடுப்பது மட்டுமேயாகும். அதாவது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அந்த குழந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத சூழ்நிலையை அமைத்து கொடுப்பதுதான் சிகிச்சை," என மருத்துவ உளவியலாளர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :