இலங்கை இன பிரச்னைக்கு முட்டுக்கட்டை போடுகிறதா பௌத்த தேசியவாதம்?

பட மூலாதாரம், PMD - SRI LANKA
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வாக இந்தியாவின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்த ரணில் விக்ரமசிங்க திட்டமிட்ட நிலையில், பெரும்பான்மை சிங்களவர்கள் அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
75வது சுதந்திர தினத்திற்குள் இன பிரச்னைக்கு தீர்வு வழங்கப்படும் என கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கியிருந்தார்.
இதன் அடுத்த கட்ட நகர்வாக, இன பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விதம் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது.

பட மூலாதாரம், PMD Sri Lanka
இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில், பெரும்பாலான சிங்கள மக்கள் பிரதிநிதிகள், 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த தமது எதிர்ப்புக்களை முன்வைத்திருந்தனர்.

பட மூலாதாரம், PMD Sri Lanka
13வது திருத்தம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், அது நாட்டை பிரிக்கும் எனவும், இதனால் இனவாத பிரச்னைகள் வலுப் பெறும் எனவும் பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் அவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி இனப் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான சர்கட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இறுதியாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 13வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட தனக்கு உள்ளதாக ஜனாதிபதி இதன்போது கடுமையாக கூறியிருந்தார்.
அதனால், தான் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதாகவும் அவர் அன்றைய தினம் உறுதி வழங்கியிருந்தார்.

''நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.
இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது.
விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் தேதி சுதந்திரமடைந்த இலங்கை, தனது 75வது சுதந்திர தினத்தை கடந்த 04ம் தேதி கொழும்பில் மிக பிரமாண்டமாக கொண்டாடியது.

பட மூலாதாரம், PMD Sri Lanka
75வது சுதந்திர தினத்தில் இனப் பிரச்னைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதி வழங்கிய போதிலும், அன்றைய தினத்தில் ஜனாதிபதினால் இந்த உறுதிமொழியை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நடைமுறை ரீதியில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கான விடயம் என்பதனால், பௌத்த பீடங்களில் மகாநாயக்க தேரர்களின் தீர்மானங்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களாக பெரும்பாலும் அமைவது யதார்த்தமாக காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தனர்.
13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் ஊடாக, நாட்டில் பிளவு ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துரைத்த போதிலும், அதற்கு எதிராகவே இந்த நிமிடம் வரை பௌத்த பிக்குகள் இருந்து வருகின்றனர்.
மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை எந்த வகையிலும் அமல்படுத்தக்கூடாது என மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், PMD Sri Lanka
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மகாநாயக்க தேரர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் சுயாதீனம், ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்து, நாட்டில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் கூறுகின்றனர்
போலீஸ் அதிகாரங்கள், காணி, புராதன வரலாற்று சின்னங்கள், மத அமைப்புக்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் ஆகியவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாக, நாட்டில் பிரிவினைவாதம் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாடு எதிர்நோக்கும் பாதகமான நிலைமைகளை கருத்திற் கொண்டு, இதுவரை காலம் ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த தவிர்த்துக்கொண்டதாகவும் மகாநாயக்க தேரர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசாங்கத்தின் இறையான்மையை சீர்குலைக்கும் இத்தகைய அரசியலமைப்பு திருத்தத்தை நடைடுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றமையானது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமையும் எனவும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார நெருக்கடியினால் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளுக்கு இணங்குமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனத்தன்மையை இல்லாது செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு கூறியுள்ளனர்.
பௌத்த பிக்குகள் போராட்டம்
9வது நாடாளுமன்றத்தின் 4வது அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடன உரை நேற்றைய தினம் இடம்பெற்றது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தும் கொள்கை பிரகடன உரையில், 13வது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எண்ணிய பௌத்த பிக்குகள், நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டட வளாகத்திற்குள் செல்லும் பிரதான வீதியை இடைமறித்து, போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
மாகாண சபைகளுக்கு போலீஸ், காணி அதிகாரங்களை கொண்ட 13 வழங்கப்படக்கூடாது என தொனிப்பொருளை மையப்படுத்தி, பௌத்த பிக்குகள் இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள், நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முயற்சித்தமையினால், அங்கு போலீஸாருக்கும், பௌத்த பிக்குகளுக்கும் இடையில் அமைதியின்மை நிலவியது.
''அமைதியாக இருந்த நாட்டில், இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக" போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் நேற்றைய உரையில் 13வது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எனினும், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வொன்றை இம்முறை தான் நிச்சயம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கொள்கை பிரகடன உரையில் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
1977ம் ஆண்டு தான் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான சந்தர்ப்பத்திலிருந்து இனப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது இன்று வரை வெற்றியளிக்கவில்லை என அவர் கூறுகின்றார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராக ஆர்.சம்பந்தனும், தானும் 1977ம் ஆண்டு ஒரே சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாக கூறிய அவர், தம் இருவருக்கும் அன்று முதல் இன்று வரை கனவொன்று இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இனப் பிரச்னைக்கு நிலைபேறான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே தமது கனவு என அவர் கூறுகின்றார்.
இதுவரை நடத்தப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்காத போதிலும், இம்முறை எவ்வாறாயினும், அதனை வெற்றியடையச் செய்வதே தமது எதிர்பார்ப்பு எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

பட மூலாதாரம், PMD Sri Lanka
''திரு ஆர்.சம்பந்தன் அவர்களும், நானும் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவருக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. நாம் இருவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்னைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குதல் ஆகும். அக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
நாட்டில் காணப்படுகின்ற அனைத்து பிரச்னைகளுக்கும் ஒற்றையாட்சி அரசின் உயர்ந்த பட்ச அதிகாரங்களை பகிர்வதற்கு தான் எதிர்பார்;த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை பிரிப்பதற்கு தான் துணை நிற்க போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முட்டுக்கட்டை போடும் பௌத்த தேசியவாதம்
இனப் பிரச்னை தீர்வு விவகாரத்தை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் பௌத்த பிக்குகளின் தலையீடுகள் தொடர்ச்சியாக இருந்துள்ளமை யாவரும் அறிந்ததே.
சிங்கள மொழி, இலங்கையில் ஒரே ஆட்சி மொழியாக 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட குழப்பகர நிலைமை காரணமாக 1958ம் ஆண்டு இந்த சட்டம் பகுதியளவில் திருத்தப்பட்டாலும், இந்த சட்டமானது தமிழர்கள் மற்றும் தமிழ் சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்தும் சட்டமான அவதானிக்கப்பட்டது.
தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சட்டமாக இந்த சட்டம் கருதப்பட்டது.
இந்த சட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இலங்கை தமிழரசு கட்சி அறவழிப் போராட்டத்தை நடத்தியது.
இதையடுத்து, அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
பண்டா - செல்வா ஒப்பந்தம் என அடையாளப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள், எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமையினால், குறித்த ஒப்பந்தம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 1959ம் ஆண்டு முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
தனிச் சிங்கள சட்டத்தினால் ஏற்பட்ட குழப்பகர நிலைமையை இல்லாது செய்யும் வகையில், தந்தை செல்வாவிற்கும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமே, பண்டாரநாயக்க பௌத்த பிக்கு ஒருவரினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
தனிச் சிங்கள சட்டமானது, தமிழ் - சிங்கள மக்களிடையே இனப் பிரச்சினை ஏற்படுத்துவதற்கான முதலாவது காரணியாக அமைந்தது என சொல்லப்படுகின்றது.
அரசியல் ஆய்வாளர் அ.நிக்சனின் பார்வை

ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் பௌத்த தேசியவாதம், பௌத்த தேசியவாதத்திற்குள் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்ற கட்டமைப்பு காணப்படும் வரை, தமிழர் பிரச்னைக்கான தீர்வு ஒருபோதும் கிடைக்காது என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.
இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வை வழங்கும் திட்டத்திற்;கு பௌத்த பிக்குகள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
சிங்கள அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தாலும், பௌத்த தேசியவாதம் மற்றும் அரசியலமைப்பு இணைந்ததான கட்டமைப்பை என்றுமே உடைக்க முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.
1994ம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன பிரச்னைக்கு தீர்வு வழங்குவதாக நேர்மையாக கூறியிருந்தார். எனினும், ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் பௌத்த தேசியவாதம், பௌத்த தேசியவாதத்திற்குள் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்ற கட்டமைப்பை யாராலும் மீறிச் செல்ல முடியாது என அவர் கூறுகின்றார்.
''ஜனாதிபதி தற்போது சர்வதேசத்தை சமாளிக்கின்றார். 13வது திருத்தத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேட்டால், எதிர்காலத்தில் ரணில் மீது எவருக்கும் கோபம் வராது. இந்தியாவும், அமெரிக்காவும் ரணிலை கோவிக்காது. ஏன் கோவிக்காது என்றால், பௌத்த பிக்குகள் எதிர்ப்பு காரணமாக இதனை செய்ய முடியாது.
ரணில் தமிழ் மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் நல்ல பிள்ளையாக இருக்கின்றார். அவருக்கு சர்வதேசத்திடமிருந்து பணத்தையும் வாங்கலாம். இதுதான் தந்திர உபாயம். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்து மனநிலையில் ரணில் விக்ரமசிங்க இல்லை. 13ஐ நடைமுறைப்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கின்றது. தமிழர்களுக்கான பிரச்னைக்கு அரசியல் தீர்வை வழங்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றது. அதற்காகவே ரணில் அதனை சொல்கின்றார்.
இந்த பக்கம் பௌத்த பிக்குகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழர்களுக்கான தீர்வு என வருகின்ற போது, இந்த பௌத்த பிக்குகளை வைத்துக்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை செய்வார்கள். நோர்வேயின் சமாதான பேச்சுவார்த்தை கூட, பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தினாலேயே குழம்பியது. சிங்கள தலைவர்கள் எவருக்குமே, இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லை. அதற்காக பௌத்த பிக்குகளை பயன்படுத்துகின்றார்கள்" என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான அழுத்தங்கள் காணப்படுகின்றமையினால், இன பிரச்னைக்கு என்றுமே தீர்வு கிடைப்பது சாத்தியமற்றது என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி தரப்பின் பதில்
75வது சுதந்திர தினத்திற்குள் இனப் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என எண்ணத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்த போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு தமிழர்கள் தரப்பினர் உரிய வகையில் வருகைத் தராமையே, திட்டமிட்ட வகையில் தீர்வை வழங்க முடியாது போனதாக ஜனாதிபதி தரப்பின் அதிகாரி ஒருவர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உரிய வகையில் பேச்சுவார்த்தைக்கு வருகைத் தரவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், இன பிரச்னைக்கு தீர்வு வழங்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி தற்போது வரை உள்ளதாகவும் ஜனாதிபதி தரப்பிலுள்ள அதிகாரி கூறுகின்றார்.
இலங்கையில் காலம் காலமாக தொடர்ந்துவரும் இனப் பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்திற்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கிய போதிலும், தீர்வை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்கு தொடர் எதிர்ப்புக்கள் வெளியாகி வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













