ChatGPT என்பது என்ன? இதைக் கண்டு கூகுள் அஞ்சுகிறதா?

சாட்ஜிபிடி

பட மூலாதாரம், Getty Images

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் அனைவரது கவனமும் குவிந்திருந்த நேரத்தில், கடந்த நவம்பர் 30-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாகக் கருதப்படும் ஒரு புதிய குழந்தை சாட்ஜிபிடி(ChatGPT) பிறந்தது.

இதற்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று பலரும் வியந்து கூறுகிறார்கள். இது சற்று அதிகப்படியானதாக இருந்தாலும், இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது போன்றே, மிகவும் நேர்த்தியாகக் கட்டுரைகளை உருவாக்குகிறது. இதில் சில பிழைகளும் குறைகளும் இருந்தாலும், இதன் நிரூபிக்கப்பட்ட திறனும் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறும் பாராட்டுடன் பயத்தையும் ஏற்படுத்துகிறது.

சாட்ஜிபிடி குறித்த விமர்சனங்களில் உள்ள ‘அச்சுறுத்தல்’ என்ற வார்த்தையைக் கூர்ந்து நோக்கினால் இது தெரியும். மனிதனின் உரை போலவே ஒரு போலியை உருவாக்கக்கூடிய இதன் திறன் பிரச்னையை உருவாக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

படைப்பாற்றல், கற்றல் மற்றும் கல்வி, வேலை, டிஜிட்டல் பாதுகாப்பு, ஏன் ஜனநாயகத்திலும் கூட இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது அண்மையில் வெளியான தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை.

ஒரு மனிதனால் இதுவரை கூறப்பட்டு வந்த கருத்துகள், இனி ஒரு ரோபோட்டால் உருவாக்கப்பட்ட ஒரு வாதமாக இருக்கலாம்.

ChatGPT என்பது என்ன?

ChatGPT என்பது அடிப்படையில் ஒரு மெய்நிகர் ரோபோ (சாட்போட்) ஆகும். இது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது, எழுதிக் கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்கிறது, சரளமாக உரையாடுகிறது, மேலும் தனிப்பட்ட பிரச்னைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறது

விஷயங்களை உருவாக்குவதற்கான உங்கள் சாத்தியக்கூறுகள் மகத்தானவையாகின்றன.

எடுத்துக்காட்டாக, சிக்கன் கறி தயாரிப்பது எப்படி என்று உங்களுக்குக் கற்பிக்க முடியும். உங்களுக்கு வேலை பெறுவது, கவிதை எழுதுவது, கல்விக்கான கட்டுரைகள் மற்றும் நீண்ட நாட்களாக நீங்கள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பருக்குச் சமரசக் கடிதம் எழுதுவது போன்றவற்றைப் பற்றிய ஆலோசனைகளையும் இது வழங்க முடியும்.

வாலி போலக் கவிதை எழுதச் சொன்னால் எழுதித் தரும். காய்ச்சலடிக்கிறது விடுப்புக் கடிதம் வேண்டும் செய்து தரும். இதெல்லாம் ஒரு நொடியில் நடந்துவிடும். சில குறைகள் இருக்கலாம். ஆனால் இது நிச்சயமாக உங்களுக்கு வியப்பைத் தரும்.

சாட்ஜிபிடி

பட மூலாதாரம், Getty Images

சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் எனப்படும் SEO.ai வழங்கும் தகவல்கள்படி, சுமார் 100 மொழிகளில் சாட்ஜிபிடி கிடைக்கிறது. ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் இதன் திறன் மற்ற மொழிகளைப் பொருத்து மாறுபடலாம்.

அமெரிக்காவில் 2015-ல் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மஸ்க் (முரண் காரணமாக 2018-ல் இதிலிருந்து வெளியேறினார்) ஆகியோரால் தொடங்கப்பட்ட ஓபன் ஏஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இது உருவான ஐந்த நாட்களிலேயே 10 லட்சம் பயனாளர்களைத் சென்றடைந்தது. இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் இந்த மாதிரியின் பயிற்சிக்கும் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்போதைக்கு ‘சோதனை மற்றும் ஆய்வு’ காலத்தில் இது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, எதிர்காலத்தில் இதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிகளை ஆய்வு செய்ய நிபுணர்களுக்கு உதவும். இந்தக் கால கட்டத்தில் இது தவறான தகவலைத் தர வாய்ப்புள்ளது என்றும் இதன் டேட்டா ஹிஸ்டரி 2021 வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

தகவலைத் தருவதில் கூகுளுக்கு இருக்கும் ஆதிக்கத்திற்கு இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும், இது தரும் தகவல்கள் தற்சமயம் மிகவும் தவறாக இருக்கின்றன. உதாரணமாக, பிரேசில் குறைந்த பட்சம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளதாக இது கூறுகிறது. ஆனால், பிரேசில் ஒரு சிறிய விருதைக்கூட வாங்காத நாடு.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாட்ஜிபிடி ஒரு மைல்கல்-ஏன்?

ஆற்றல் மிக்க டெக்ஸ்ட் (உரை) அடிப்படையிலான ஏஐ செயலிகள், மிகப் பெருமளவிலான தரவுகளைச் சேமித்து வைத்தும், வாக்கியத்தின் சிறப்பான அமைப்பைக் கண்டறிய அல்காரிதம்களைப் பயன்படுத்தியும் செயலாற்றுகின்றன.

இவை லார்ஜ் லேங்க்வேஜ் மாடல்ஸ் (LLMs) என்றழைக்கப்படுகின்றன.

"மென்பொருள் பயிற்சியின் போது, இந்த சாட் பாட்டிடம், “ஒரு சிலிண்டர் என்பது என்ன?” போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களின் பதில்களை விவரிக்கிறார்கள். சாட்பாட்டின் பதில் தவறாக இருந்தால், சரியானவை உட்புகுத்தப்பட்டுக் கற்பிக்கப்படுகின்றன. இது மற்ற சூழ்நிலைகளுக்குத் தாமாகவே அனுப்பப்படுகின்றன.” என்கிறார் பேராசிரியர் ஆல்வரோ மச்சாடோ டயஸ்.

வார்த்தைகளின் பயன்பாட்டின் சூழலைப் புரிந்துகொள்வதற்கும், உரைகளின் சிறந்த ஒருங்கிணைப்பை அனுமதிப்பதற்கும் ஏற்கனவே ஒரு முறையைப் பயன்படுத்தினாலும், முந்தைய நிரல்கள் பயனருக்குச் சரியான பதிலளிக்கவில்லை அல்லது செயற்கையாக இருந்தது.

ChatGPT மனிதனுடன் நெருக்கமாகப் பேசக் கற்றுக்கொண்டது.

மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் மனிதக் கருத்து மூலம் கற்றலை வலுப்படுத்தும் (Reinforcement of Learning through Human Feedback-RLHF) நுட்பத்தைப் பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தைத் தனித்துக் காட்டுகிறது என்று மச்சாடோ டயஸ் கூறுகிறார்.

பொறியாளர்கள் "வெகுமதி" மற்றும் "தண்டனை" முறைகளைப் பயன்படுத்தி கணினிக்கு மிகவும் விரும்பத்தக்க தொடர்பு வடிவங்களைக் கற்பிக்கின்றனர். இது ஒரு ஃபைன் ட்யூனிங் செயல்முறை.

"நடைமுறையில், பொறியாளர்கள் அல்காரிதம் வழங்கிய பதில்களை அவற்றின் பொருத்தத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்துகிறார்கள். இந்தத் தர வரிசையின் அடிப்படையில் கற்றுக்கொள்வதற்கான திட்டத்தை ஊக்குவிக்கிறார்கள். இதன் விளைவாக, மாற்று வழிகளைக் காட்டிலும் மிகவும் பொருத்தமாகவும் ஆழமாகவும் தோன்றும் உரை வெளியிடப்படுகிறது." என்று மச்சாடோ டயஸ் கூறுகிறார்.

தவறுகளை ஒப்புக்கொள்ளவும், தவறான அனுமானங்கள் குறித்துக் கேள்வி எழுப்பவும் பொருத்தமற்ற கோரிக்கைகளை நிராகரிக்கவும் ChatGPTக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வெள்ளையின அல்லது ஆசிய ஆண்கள் மட்டுமே நல்ல விஞ்ஞானிகளாகின்றனர் என்று கூறும் ஒரு புரோகிராமை எழுத வைக்க முடிந்தது.

இது சம்பந்தமாக மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், நிரல் "சில சமயங்களில் சிக்கலான வழிமுறைகளுக்கு பதிலளிக்க அல்லது ஒருபக்கச் சார்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது" என்று OpenAI கூறுகிறது.

இந்தச் சோதனைக்கட்டத்தில் சேகரிக்கப்பட்ட தரவு இதை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

இது கற்றலுக்கும் படைப்பாற்றலுக்கும் அச்சுறுத்தலா?

சாட்ஜிபிடி

பட மூலாதாரம், Getty Images

மாற்றங்கள் அல்லது மாற்றங்களின் அச்சுறுத்தல் ஏற்கனவே வேலைவாய்ப்பில் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. பத்திரிகை போன்ற உரையை நம்பியிருக்கும் துறைகளில் மிக அதிக மாற்றங்கள் வந்து வேலை வாய்ப்பே இல்லாமல் போகலாம்.

ChatGPTஇன் கோட் ஜெனரேஷன் திறன், ப்ரொகிராமிங் துறையிலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

புதிய தொழில்நுட்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் கல்வித்துறை தான் ChatGPTஇன் சிக்கல்களுக்கான சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து வருகிறது.

மாணவர்கள் தங்கள் பணிகளுக்கு ஆயத்த பதில்களைக் கண்டறிய இதைப் பயன்படுத்தத் தொடங்கியதையடுத்து, இது வெளியான ஒரு மாதத்திற்குள் நியூயார்க்கில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுக் கருவிகளில் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது.

மாணவர்கள் தங்களுடைய அசைன்மென்டுகளை தயாரிப்பதால், இந்தியாவிலும் சில பல்கலைக்கழகங்கள் இதைத் தடை செய்திருக்கின்றன.

ChatGPT இலிருந்து உருவான உள்ளடக்கத்தைக் கண்டறிய OpenAI ஒரு குறியீட்டையும் உருவாக்கி வருகிறது. சாட்பாட் ஒரு உரையை உருவாக்கியதற்கான சாத்தியக்கூறைத் துல்லியமாகக் கணக்கிடும் அல்காரிதம்கள் ஏற்கனவே உள்ளன.

அப்படியே நகலெடுப்பது தவிர, மனிதக் கற்றலின் கட்டமைப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவுகிறது. உதாரணமாக, முன்னுரை, பொருளுரை, முடிவுரை என்று ஒழுங்கு படுத்தி நேர்த்தியாக ஒரு கட்டுரை எழுதும் ஆற்றல் பாதிக்கப்படுமா?

"AI உடனான தொடர்பு காரணமாக, உலகத்துடனான நமது புரிதல் மற்றும் உறவை மாற்றியமைக்கும் சிந்தனையின் அல்காரிதமைசேஷன் குறித்து நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன்," என்கிறார் மச்சாடோ டயஸ்.

"நவீன வரலாற்றில் இது மிகப்பெரிய மனநிலை மாற்றமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மனிதனின் தொழில்நுட்ப, கலாச்சாரக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், நரம்பியல் ரீதியாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, மனித மூளை அளவு மெதுவாக சுருங்கி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. " என்று கூறும் ‘செயற்கை நுண்ணறிவு: பூஜ்ஜியத்திலிருந்து மெட்டாவெர்ஸ் வரை’ என்ற புத்தகத்தின் ஆசிரியரும், ரியோ கிராண்டே டோ சுல்-ன் போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழக பேராசிரியருமான மார்த்தா கேப்ரியல், நவீன காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.

"இந்த சூழலில் பதில்களைவிடக் கேள்விகள் தான் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. எப்படிக் கேட்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதை அறிய, என்ன வித்தியாசம் என்பது இனி பதில்கள் அல்ல, ஆனால் கேள்விகள். நீங்கள் எப்படி கேட்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி கேட்பது என்று தெரிந்து கொள்ள, பகுத்தறிவுச் சிந்தனை வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

மனிதப் படைப்பாற்றலின் எதிர்காலம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இல்லாத உள்ளடக்கத்தை உருவாக்குவது குறித்த ஒரு கவலையும் நிலவுகிறது.

OpenAI அமைப்பின் வருகைக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு, சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பாளர் ஒரு வார இறுதிக்குள் உரை மற்றும் விளக்கங்கள், படங்கள் ஆகியவற்றுடன் கூடிய குழந்தைகள் இதழ் ஒன்றை சாட்ஜிபிடி மற்றும் மிட் ஜர்னி(படங்கள் மற்றும் விளக்கங்களை உருவாக்கும் ஒரு ப்ரொகிராம்) என்ற தளங்களின் உதவியுடன் வெளியிட்டுள்ளார்.

"இன்னும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் கருத்துத் திருட்டுப் பிரச்சினை. ChatGPT போன்ற மாடல்களின் பயிற்சியானது இணையத்தில் கிடைக்கும் செய்திகள், புத்தகங்கள் மற்றும் வலைப்பதிவுகள் போன்றவற்றின் அடிப்படையிலானது என்பதால், அது தரும் தீர்வுகள் அதற்கான கிரெடிட் வழங்கப்படாமலேயே சில நபர்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம்.” என்று லிமா கூறுகிறார்.

"ஆக்கப்பூர்வமான பகுதிகளில், ஆசிரியர்களுக்கான இந்த அங்கீகாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கூடுதலாக, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற ஆதாரங்களை அறியாததால், போலிச் செய்திகளைப் போல, சார்பு அல்லது பொய்களை அடையாளம் காண்பதும் இதில் கடினமாகிறது."

"படைப்பாற்றல் என்பது அசாதாரணமான மற்றும் பொருத்தமான இரண்டு சேர்க்கைகளிலிருந்து எழுகிறது. அல்காரிதம்கள் சேர்க்கைகளை உருவாக்குவதற்கான சாதனங்களாக இருப்பதால், படைப்பாற்றல் தூண்டுதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்கிறார் மச்சாடோ டயஸ்.

"மறுபுறம், அல்காரிதம்கள் செயல்படும்போது, அவை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத பேட்டர்ன்களை உருவாக்க முனைகின்றன, நமது ஒருங்கிணைந்த புரிதல், அதாவது நமது படைப்பாற்றல் விரிவுபடுத்தப்படுகிறது" என்றும் அவர் கூறுகிறார்.

"நமது சிந்தனையை விரிவுபடுத்துவதற்குத் தொழில்நுட்பம் ஒரு நம்பமுடியாத கருவியாக இருக்கும், ஏனெனில் எண்ணற்ற கருதுகோள்கள், வடிவங்கள், தீர்வுகள் ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் சோதித்து நமது கருதுகோள்களைச் செம்மைப்படுத்தவும், நமது கேள்விகளை மேம்படுத்தவும் முடியும்" என்பது மார்த்தா கேப்ரியல் நம்பிக்கை.

"இருப்பினும், தார்மீகமின்றியும் நெறிமுறைகளைக் கருத்தில் கொள்ளாமலும் இந்த அமைப்புகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். இது ஒரு தனிநபருக்கு மட்டுமல்லாமல் மனித குலத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” என்கிறார் மார்த்தா கேப்ரியல்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: