இலங்கை நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்திடம் முன்பே சென்றிருக்க வேண்டும் - மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பென் சு
    • பதவி, பொருளாதாரப் பிரிவு ஆசிரியர், நியூஸ்நைட்

இலங்கை முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை தடுத்திருக்கலாம் என, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.

வெளியிலிருந்து உதவி கேட்க தாமதம் செய்தது தவறு என, பிபிசி நியூஸ்நைட் நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டாலர்கள் உதவி இந்த ஆண்டு இலங்கைக்குத் தேவை.

"சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால், கடனை திருப்பி செலுத்துவதற்கான நடைமுறைகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கியிருந்தால், நாட்டில் இத்தகைய துன்பங்கள் நேராமல் இந்த சூழ்நிலையை சமாளித்திருக்கலாம்" என நந்தலால் வீரசிங்கே தெரிவித்தார்.

கடும் எரிபொருள் பற்றாக்குறை, உணவுப்பொருட்களின் விலை உயர்வு, மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சந்தித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

ஐநா உலக உணவு திட்டத்தின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, மூன்றில் இரண்டு பங்கு இலங்கை குடும்பங்கள், எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பிரிட்டனிடமிருந்து 1948ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருவதாக வீரசிங்கே தெரிவித்தார்.

நந்தலால் வீரசிங்கே

பட மூலாதாரம், CENTRAL BANK OF SRI LANKA

படக்குறிப்பு, நந்தலால் வீரசிங்கே

வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், இலங்கைக்கு செல்லவுள்ளனர். அவர்களுடன் நடைபெறும் சந்திப்புகளில் முக்கிய பங்கேற்பாளராக வீரசிங்கே இடம்பெற உள்ளார்.

ஆனால், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கேப்ரால் ராஜினாமா செய்த நிலையில், அப்பதவியில் நியமிக்கப்பட்ட வீரசிங்கே, முழு பதவிக்காலமான ஆறு ஆண்டுகளுக்கு இம்மாத இறுதியில் நியமிக்கப்படுவாரா என்பதில் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.

"இப்பதவியில் தொடர்வதற்கான எனது விருப்பத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன்," என்றார் வீரசிங்கே.

"நான் இப்பதவியை ஏற்றுக்கொண்டபோது, இரு மாதங்கள் மட்டுமே பணியாற்றிவிட்டு திரும்பிச் சென்றுவிடுவேன் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அதுதான் நிலைமை எனில், நான் வந்திருக்க மாட்டேன். இந்த சூழல் என்பது இரு மாதங்களில் சரிசெய்யப்படக்கூடிய ஒன்று அல்ல. நிலைமை சரியாவதற்கு முன் முதலில் நிலைமை மோசமாகும்" என அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம்

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளில் சிக்கலாக இருப்பது, சீனாவிடமிருந்து கணிசமான கடனை வாங்கியதாகும், அது இலங்கையின் மொத்தக் கடனில் 15% என்று வீரசிங்கே தெரிவித்தார்.

கடன் வழங்கிய மற்ற அமைப்புகளுக்கு அதனை திருப்பி செலுத்தும் தகுதி குறிப்பிட்ட நாட்டுக்கு உள்ளது என்று உறுதிப்படுத்தினால்தான், அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்யும் என்பது அந்நிதியத்தின் கொள்கையாக உள்ளது.

"இலங்கையின் நல்ல நண்பன் என்ற முறையில் சீனா உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என வீரசிங்கே தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பணியாளர்கள், வீரசிங்கே அதே பொறுப்பில் நீடிக்க வலியுறுத்தி அந்நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

"இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க நினைப்பது, தேசப்பற்று அல்லாத, முற்றிலும் உள்நோக்கம் கொண்டதாக நாங்கள் கருதுகிறோம்," என அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

வரும் ஆண்டில் வளர்ந்துவரும் 12க்கும் மேற்பட்ட நாடுகள் கடனை திருப்பி செலுத்த முடியாத அபாயத்தில் இருப்பதாக, உலக வங்கி எச்சரித்துள்ளது.

மாலத்தீவு, ருவாண்டா, எத்தியோப்பியா, செனெகல் உள்ளிட்ட நாடுகளும் நிதி நெருக்கடி விளிம்பில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எகிப்து, கானா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக கருதப்படுகின்றன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: