இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? - உச்சம் தொட்ட பொருட்களின் விலை

இலங்கை பொருட்கள் விலை

பட மூலாதாரம், PMM

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தெரிவித்த கருத்தானது, நாட்டில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கருத்து இன்று சமூகத்தில் வலுப் பெற்றுள்ளது.

இதனால், மக்கள் இன்று அரிசி வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்து, தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.

அரிசி வகைகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அரிசி வகைகளை களஞ்சியப்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் பொருளாதார சிக்கல் தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில், பொருட்களுக்கான விலைகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

உலக நாடுகளே பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி, ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இலங்கையில் ரசாயன உர பயன்பாட்டிற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் தடை விதித்திருந்தமையினால், உள்நாட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதன்படி, எதிர்வரும் போகத்தில் விவசாயத்தை உரிய முறையில் செய்வதற்கு தேவையான உரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிடமிருந்து விசேட கடன் திட்டம்

இலங்கை பொருட்கள் விலை

பட மூலாதாரம், Getty Images

இதன் ஒரு கட்டமாக இந்தியாவிடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை இன்று (10) கைச்சாத்திட்டது.

65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை அரசாங்கம் கோரியிருந்தது.

சிறுபோக பருவத்தில் யூரியா உர தேவையின் உடனடி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த கடன் வசதி கோரப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர கடனை வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்கும் விசேட திட்டமொன்றை ஆரம்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பொருட்களின் விலைகள் கடந்த ஓரிரு மாதங்களுக்குள் மேலும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள விதத்தை பட்டியலில் காணலாம்.

பொருட்களின் விலை பட்டியல்
படக்குறிப்பு, பொருட்களின் விலை பட்டியல்

இந்த நிலையில், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், பலரும் மூன்று வேளை உணவை உட்கொள்ள முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், சிலர் தாம் கொள்வனவு செய்யும் பொருட்களின் அளவை குறைத்துக்கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

அரிசி உள்ளிட்ட உணவு வகைகளுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறிய போதிலும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவ்வாறான தட்டுப்பாடு வராது என உறுதியளித்துள்ளார்.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென்று எவரும் அச்சம் கொள்ள தேலையில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த மாதத்தில் மேலும் 65,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், மேலும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு அதிகமாக சேமிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: