இலங்கையில் பெட்ரோல், கோதுமை, உணவுப்பொருள் விலை அசாதாரண உயர்வு - என்ன நடக்கிறது?

இலங்கை பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த தருணத்தில், பொருட்களின் விலைகள் கடந்த இரு தினங்களுக்குள் வரலாற்றில் முதல் தடவையாக கட்டுப்பாட்டை இழந்து அதிகரித்துள்ளன.

நாணய மாற்று வீதத்தை நெகிழ்வு போக்குடன் தீர்மானிக்க இலங்கை மத்திய வங்கி கடந்த 7ம் தேதி அனுமதி வழங்கியதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி வரலாற்றில் முதல் தடவையாக சுமார் 260 ரூபா வரை அதிகரித்தது.

கடந்த ஒரு வருட காலமாக 202 ரூபா என்ற நிலையாக பெறுமதிக்கு டொலரின் பெறுமதி பேணப்பட்ட நிலையில், தற்போது நெகிழ்வு தன்மையுடன் அதனை தீர்மானிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, 202 ரூபாவாக காணப்பட்ட இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி, கடந்த 7ம் தேதி 230 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி 259 ரூபா 99 சதம் வரை அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று தினங்களுக்குள் இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி 58 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், அது 29 சதவீத அதிகரிப்பு என கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ரூபா மதிப்பு

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அதிகரிப்பு காரணமாக இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளில் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமது எரிபொருள் விலையை சடுதியாக அதிகரித்திருந்தது.

இதன்படி, அனைத்து ரக டீசலுக்கான விலையை ஒரு லீட்டருக்கு ஒரே தடவையில் 75 ரூபாவாலும், அனைத்து ரக பெற்றோலுக்கான விலையை ஒரு லீட்டருக்கு 50 ரூபாவாலும் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தீர்மானித்திருந்தது.

இலங்கை பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

எரிபொருள் விலையை ஒரே தடவையில் இந்தளவிற்கு அதிகரித்த முதலாவது தடவை இதுவென கூறப்படுகின்றது.

இந்த நிலையில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் 204 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீட்டர் 92 ஒக்டேன் ரக பெற்றோலின் தற்போதைய விலை 254 ரூபாவாக காணப்படுகின்றது.

233 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீட்டர் 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலை, தற்போது 283 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் இதுவரை 139 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீட்டர் ஒடோ டீசலின் புதிய விலையாக 176 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 174 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 254 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்ஸ்ட்ரா ஒயில் டீசல் ஒரு லீட்டரின் விலை 145 ரூபா முதல் 220 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்க இதுவரை தீர்மானிக்கவில்லை என கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

எனினும், எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

யுக்ரேன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான யுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.

எனினும், இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எட்டவில்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசி விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

எரிசக்தி அமைச்சில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதுடன், அந்த சந்திப்பின் பின்னர் நிதி அமைச்சருடன் இடம்பெறும் சந்திப்பின் பின்னரே, பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானம் எட்டப்படவுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி சடுதியாக 58 ரூபா அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை சடுதியாக இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களான செரண்டிப் மற்றும் பீரிமா ஆகிய நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக செரண்டிப் நிறுவனம் 35 ரூபாவால் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், பீரிமா நிறுவனம் 35 முதல் 40 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் உடன் அதிகரிப்பு

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், KOGUL

எரிபொருள் மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை 10 ரூபா வரை அதிகரிக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், உணவு பொதி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், KOGUL

இதன்படி, உணவு பொதி ஒன்றின் விலையை 20 ரூபா முதல் 30 ரூபா வரையும், கொத்து ஒன்றின் விலையை 10 ரூபா முதல் 15 ரூபா வரையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தேநீரின் விலையை விரைவில் அதிகரிக்க பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கும் பட்சத்தில், பஸ் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என பஸ் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், முச்சக்கரவண்டி கட்டணங்களையும் அதிகரிக்க பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

202 ரூபாவாக காணப்பட்ட டொலரின் பெறுமதி, தற்போது 260 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையில், ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளும் 29 சதவீதத்தால் அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளது.

பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் எதிர்காலத்தில் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஆப்பிள், திராட்சை, தோடம் பழம் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் 367 பொருட்களுக்கு நிதி அமைச்சர் அண்மையில் தடை விதித்திருந்தார்.

இலங்கையில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்ற பின்னணியில், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு நிதி அமைச்சர் இவ்வாறு தடை விதித்துள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், KOGUL

இதேவேளை, எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு காணப்படுகின்றமையினால், கடந்த சில தினங்களாகவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவிவந்தது.

இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்கள் பலவற்றை மூடுவதற்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அத்துடன், சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு மக்கள் இன்றும் நீண்ட வரிசைகளில் நின்றுக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி எதிர்வரும் நாட்களில் மேலும் வீழ்ச்சி அடையும் சாத்தியம் எழுந்துள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: