விலைவாசி உயர்வு: இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி உலக நாடுகளுக்கும் பரவுமா?

sri lanka recent news

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

விலைவாசி உயர்வால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

நீங்கள் மட்டும் அல்ல. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணங்களின் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு உலக நாடுகளில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்ற நாடுகளுக்கும் பரவுமா?

சராசரி மனிதர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு:

விலைவாசி உயர்வால் ஒரு சராசரி மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

பொட்ரோல், டீசல் விலை உயர்வு.

சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் விலை உயர்வு.

விவசாயத்திற்கு தேவைப்படும் உரங்களின் விலை உயர்வு.

அதிகரித்துக் கொண்டே வரும் வீட்டு வாடகை.

விமானம், பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களின் விலை உயர்வு.

விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்?

ஒவ்வொரு காலகட்டத்திலும் விலைவாசி உயர்வு என்பது இயல்பான ஒன்று. ஆனால், இந்த முறை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

பருவநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் உரத்தட்டுப்பாடு.

கோவிட் பெருந்தொற்றால் உலகளவில் தடைபட்ட வர்த்தகம் மற்றும் விநியோக சங்கியில் ஏற்பட்ட நெருக்கடி.

இலங்கை பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா-யுக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடி.

நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகள்:

இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விளைவுகள் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால், சமீப நாட்களாக பிரேசில், நியூசிலாந்து, இத்தாலி, தாய்லாந்து, பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் விலைவாசி உயர்வு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில்

பிரேசில் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அடிப்படை சேவைகள் மீதான பணவீக்கம் கடந்த ஓராண்டாக 12.13 சதவீதமாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, நான்கில் ஒருவருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. விவசாய உற்பத்தியில் பிரேசில் ஒரு முக்கியமான நாடாக இருந்தாலும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மக்களின் ஊதிய விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் வீட்டு வாடகை கடந்த ஓராண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பலரும் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர்.

மானியங்கள் மூலம் எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால், இது போன்ற நடவடிக்கைகள் பெரும்பான மக்களுக்கு போதுமானதாக இல்லை.

இத்தாலி

கோவிட் பெருந்தொற்று மற்றும் யுக்ரேன் போரால் இத்தாலியின் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக இத்தாலியில் செயல்படும் இரும்பாலைகளுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் யுக்ரேனில் உள்ள மேரியபோல் நகரத்தில் இருந்துதான் வர வேண்டும். ஆனால், ரஷ்ய படையெடுப்பிற்கு பின்னர் இது முற்றிலும் தடைபட்டுள்ளது.

இலங்கை ரூபா மதிப்பு

தாய்லாந்து

தாய்லாந்தின் முக்கிய உணவுப்பொருள் அரிசி. தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசி மத்திய கிழக்கு நாடுகள் முதல் ஆப்பிரிக்கா வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், விவசாயத்திற்கு தேவைப்படும் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அரிசி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. தாய்லாந்தில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டால், அதை சார்ந்துள்ள நாடுகளும் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும்.

பிரிட்டன்

வளமிக்க நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் கூட விலைவாசி உயர்வு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு, மின் கட்டணம், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் உணவு வங்கிகளை (food bank) நோக்கி மக்கள் படையெடுத்துள்ளார்கள். உணவு வங்கிகள் என்பது கோவிட் காலத்தில் மக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டவை. பிரிட்டனின் பணவீக்கம் கடந்த ஒராண்டில் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. விரைவில் இது 10 சதவீதத்தை எட்டும் என்று இங்கிலாந்து வங்கி (Bank of England) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத உயர்வை எட்டியுள்ளது. இந்தியாவின் தற்போதைய பணவீக்கம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை 6.95 சதவீதமாக குறைத்தால்தான் நாட்டின் பொருளாதார நிலை அபாய கட்டத்திற்குச் செல்வதை தடுக்க முடியும். ஆனால், சமீபத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, விலைவாசி உயர்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இலங்கை அரசி விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

ஏற்றுமதியை தடை செய்யும் நாடுகள்

ஜூன் மாதத்தில் இருந்து கோழிக்கறி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்போவதாக மலேசியா அறிவித்துள்ளது. இது உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருள் நெருக்கடியின் சமீபத்திய விளைவு. இதனால், மலேசியாவில் இருந்து கோழிக்கறியை அதிகளவில் இறக்குமதி செய்யும் சிங்கப்பூர் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும்.

முன்னதாக, கோதுமை ஏற்றுமதியை தடை செய்வதாக இந்தியாவும், பாம் ஆயில் ஏற்றுமதியை தடை செய்வதாக இந்தோனேசியாவும் அறிவித்திருந்தன.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பும், பருவநிலை மாற்றமும் தான் இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. மேலும், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பதிக்கப்படுவார்கள் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: