வெளிநாடு செல்லும் இலங்கை ஆசிரியர்கள்: கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்

இலங்கை மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை மாணவர்கள். கோப்புப் படம்.
    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள அரச ஊழியர்களை, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களில் பெருமளவினராக இருக்கிற ஆசிரியர்களும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு இதனை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்நோக்கியுள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு குறைவடைந்தமை, இந்த பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு அதிகளவிலான பணியாளர்களை அனுப்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாகவே அரச ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுக்கு மத்தியில், அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வர உடனடி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரச ஊழியர்களை வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்களுக்காக அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

மனுஷ நாணயக்கார

பட மூலாதாரம், MANUSHA NANAYAKKAARA FACEBOOK

படக்குறிப்பு, மனுஷ நாணயக்கார

அரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் மற்றும் சிரேஷ்டத்துவம் ஆகியவற்றுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலான சுற்று நிரூபத்தை வெளியிடுவதற்கான கலந்துரையாடல்கள் பொது நிர்வாக அமைச்சுடன் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அரச ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது, அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வெளிநாட்டு முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், அமைச்சர் மனுஷ நாணயக்கார பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கையின் அரச ஊழியர்கள் மத்தியில், ஆசிரியர்களே அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

பெரும்பாலான ஆசிரியர்கள் அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறு ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் பட்சத்தில், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறும் என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

2019 முதல் பாதிக்கப்பட்டுள்ள கல்வி

இலங்கையில் 2019ம் ஆண்டு முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து, பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு சட்டம், பாதுகாப்பு காரணங்கள் என கூறி பாடசாலைகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டமையினால், அந்த காலப் பகுதியில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சந்திர குமார்

பட மூலாதாரம், Chandra Kumar

படக்குறிப்பு, சந்திர குமார்

இதையடுத்து, சற்று வழமைக்கு திரும்பிய கல்வி நடவடிக்கையானது, 2020ம் ஆண்டு கோவிட் பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கோவிட் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமலில் இருந்தது.

இடைக்கிடை பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பாடசாலைகளை வழமை போன்று நடத்த முடியவில்லை.

கோவிட் நிலைமைகள் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வி நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்ற காரணிகளினால் மாணவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கையின் எதிர்கால சந்ததியின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால், மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பில் ஆசிரியர் சந்திரகுமார், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''நகர் பகுதிகளை தவிர்ந்த பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றது. குறிப்பாக கணித, விஞ்ஞான, ஆங்கில பாடத்திட்டங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வெளிநாட்டு புலம்பெயர்வு என்பது, அரச ஊழியர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ தனிப்பட்ட விருப்பமாகும். எனினும், ஆசிரியர்கள் பெருமளவில் வெளியேறினால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் என்பது சந்தேகம் இல்லை. மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர் சந்திரகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு ஏற்படும் செலவு

இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

மகிந்த ஜெயசிங்கே

பட மூலாதாரம், MAHINDA JAYASINGHE/FACEBOOK

படக்குறிப்பு, மகிந்த ஜெயசிங்கே

''2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் முதல் இன்று வரை கல்விக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2019 ஈஸ்டர் தாக்குதல், 2020 கோவிட் நிலைமை என ஆரம்பித்து தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை, போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளமை ஆகிய காரணங்களினால் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தருவதும் குறைவடைந்துள்ளது.

பின்தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால், கல்வி பெரிதும் பாதிக்கப்படும். ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியே, அவர்களை வெளிநாடு செல்ல தூண்டுகின்றது. ஆசிரியர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். சில ஆசிரியர்களுக்கு 15,000 ரூபா சம்பளம் கிடைக்கின்றது. எனினும், போக்குவரத்திற்கு மாத்திரம் அவர்கள் 25,000 ரூபாவை செலவிடுகின்றனர். இவ்வாறான காரணங்களினாலேயே அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கின்றார்கள்" என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கான திட்டம் தொடர்பிலான சுற்று நிரூபம் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

காணொளிக் குறிப்பு, குவைத் கடைகளில் இந்தியப் பொருள்கள் அகற்றம் - நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: