இலங்கை பிரதமர் ரணில் தன்னை 'க்ருஷா' கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது என்ன? சுவாரசிய கதை

பட மூலாதாரம், Ranil Wickremesinghe/FB
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.
அப்போது 'ஹுணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருஷா' (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதைக் குறிப்பிட்டுக் கூறிய பிரதமர், "அதை விடவும் இது ஆபத்தான சவாலாகும்" என்று, தான் பொறுப்பேற்றுள்ள கடமையின் தன்மையினை உவமைகளுடன் விவரித்தார்.
இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரின் உரையில் சுட்டிக்காட்டிய 'ஹுணு வ(ட்)டயே' நாடகம் குறித்தும், அதில் வரும் 'க்ருஷா' எனும் பாத்திரம் தொடர்பிலும் அறிந்து கொள்ளும் ஆவல் பலரிடமும் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
இந்த சூழ்நிலையில் கல்வித் திணைக்கள அதிகாரியும், சமூக ஆர்வலரும் சிங்கள மொழிபெயர்ப்பாளருமான ஏ.எம். றிம்சான், தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்ட நாடகம் தொடர்பில் சில குறிப்புகளைப் பகிர்ந்திருந்தார். எனவே, அவை குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளும் அவரைத் தொடர்புகொண்டு பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.
"ஹுணு வ(ட்)டயே கதாவ' (Hunuwataye Kathawa) என்பது ஒரு சிங்கள நாடகம்" என்கிறார் றிம்சான். 'சுண்ணாம்பு வட்டத்தின் கதை' என இதனை மொழிபெயர்க்க முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

"ஜெர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட மார்க்சிய கவிஞரும் நாடக ஆசிரியருமான பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) எழுதிய 'The Caucasian Chalk Circle' எனும் நாடகத்தை புகழ்பெற்ற சிங்களக் கலைஞர் ஹென்றி ஜயசேன என்பவர் இலங்கை சூழலுக்கு ஏற்ற விதத்தில் மீளுருவாக்கம் செய்து 'ஹுணு வ(ட்)டயே கதாவ' என்ற பெயரில் வெளியிட்டார். இந்த சிங்கள நாடகம் 1967ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது" என அவர் தெரிவிக்கின்றார்.
கதை என்ன?
இதன்போது குறித்த நாடகத்தின் கதை குறித்தும் றிம்சான் விவரித்தார்.
"குருசீனிய சிற்றரசரின் மனைவி நடல்லா ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவனுக்கு மைக்கேல் என்று பெயரிடப்படுகிறது. நாட்டில் நடக்கும் பலவீனமான ஆட்சி காரணமாக கிளர்ச்சிகள் தலைதூக்குகின்றன. ஒரு சதிப்புரட்சியின் விளைவாக சிற்றரசர் கொல்லப்படுகிறார்".
"செல்வச்செருக்கும் பேராசையும் கொண்ட சிற்றரசரின் மனைவி, அந்த இக்கட்டான வேளையிலும் ஆடை, ஆபரணங்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாள். இதற்கிடையில் எதிரிகளால் அரண்மனை முற்றுகையிடப்படவே, குழந்தை மைக்கேலை கைவிட்டு அவள் தப்பியோடி விடுகிறாள்.
அவளது பணிப்பெண்ணான க்ருஷா, கைவிடப்பட்ட குழந்தையைக் காப்பாற்றி பல இன்னல்களுக்கு மத்தியில் மலைப் பிரதேசத்திலுள்ள தன் சகோதரனின் வீடு நோக்கிச் செல்கிறாள். குழந்தையைக் கையேற்றதன் பின்னரான காலப்பகுதியில், எதிர்பாராத சூழ்நிலைகள் பலவற்றுக்கு க்ருஷா முகங்கொடுக்க நேர்கிறது.

பட மூலாதாரம், Henry
சில ஆண்டுகள் மறைந்து வாழ்ந்து வெளியே வந்த சிற்றரசரின் மனைவி நடல்லா, இழந்த சொத்துகளை மீளப்பெறும் நோக்கில் குழந்தை மைக்கேலுக்கு உரிமை கோரி வழக்குத்தாக்கல் செய்கிறாள். அவளது நோக்கத்தை அறிந்துகொள்ளும் க்ருஷா குழந்தையைத் தர மறுக்கிறாள்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி அஸடாக், சுண்ணாம்புக்கல் கொண்டு கீறப்பட்ட ஒரு வட்டத்தினுள் குழந்தையை கிடத்தி, இரு புறங்களிலும் நின்று குழந்தையை இழுக்குமாறு இரண்டு பெண்களுக்கும் கட்டளையிடுகிறார்.
அப்போது குழந்தைக்கு நோவினை செய்யப்படுவதை காணச் சகியாத க்ருஷா, தனது போராட்டத்தைக் கைவிடுகிறாள். இதனையடுத்து, குழந்தை மீது உண்மையான அன்பு கொண்ட க்ருஷாவே குழந்தைக்கு உரிமையானவள் என நீதிபதி அஸடாக் முடிவு செய்கிறார்" எனக் கூறிய றிம்சான், "இதுதான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய "நாடகத்தின் கதைச் சுருக்க"ம் என்றார்.
குறிப்பால் பிரதமர் ஏதாவது சொல்கிறாரா?
நாட்டு மக்களுக்கு செவ்வாய்கிழமை பிரதமர் ஆற்றிய உரையின் இறுதியில் இப்படிக் கூறுகின்றார்.
"ஹுணு வ(ட்)டயே 'க்ருஷா' - வேறொருவரின் பிள்ளையை சுமந்து கொண்டு, தொங்கு பாலத்தைக் கடந்தார். எனது பொறுப்பு அதனை விடவும் அபாயகரமான சவாலானதாகும். கத்தியின் மேல் நடப்பதை விடவும் இது பயங்கரமான சவால்களைக் கொண்டது.
பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. அடி தெரியவில்லை. பாலம் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியும் இல்லை. என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன்.
எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் தனி நபரையோ, ஒரு குடும்பத்தையோ, அல்லது ஒரு கூட்டத்தையோ பாதுகாப்பதல்ல. முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுவதேயாகும். இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே ஆகும்.
உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.
நான் எனது கடமையை நாட்டுக்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்".
தனது நிலையினையும் தான் ஏற்றுள்ள பொறுப்பையும் ஒப்பிடுவதற்காக 'ஹுணு வ(ட்)டயே' நாடகத்தில் வரும் 'க்ருஷா' எனும் கதாபாத்திரத்தை தனது உரையில் பிரதமர் ரணில் குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் என்ன? 'க்ருஷா' எனும் கதாபாத்திரத்தை ஒரு குறியீடாக அவர் சொல்கிறாரா? நடல்லாவின் குழந்தை இறுதியில் க்ருஷாவுக்கு சொந்தமாவது போல், பிரதமர் ரணில் இறுதியில் தனக்கு ஒரு வெற்றி காத்திருக்கிறது என்பதை குறிப்பால் சொல்ல முயற்சிக்கிறாரா?
'ஹுணு வ(ட்)டயே' அல்லது பிரெக்டின் 'தி ககாசியன் சாக் சர்க்கிள்' நாடகத்தின் கதை தெரிந்தவர்களிடம் இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












