இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் - சமூகப் பரவலாக மாறிவிட்டதா?

sri lanka

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இலங்கையில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதன்படி, நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளதென ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதான மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இறுதியாக 41 கோவிட் ஒமிக்ரான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைத் தந்தவர்களாக இருக்கலாம் என அவர் தெரிவிக்கின்றார்.

சந்திம ஜீவந்தர

பட மூலாதாரம், CHANDIMA JEEWANDARA, Twitter

படக்குறிப்பு, சந்திம ஜீவந்தர

இலங்கையின் கோவிட் நிலைமை

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக, நேற்றைய தேதி வரையான காலம் வரை 15,019 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.

இந்த காலப் பகுதி வரையான தரவுகளுக்கு அமைய, 5 லட்சத்து 87 ஆயிரத்து 596 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 752 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

இலங்கைக்குள் முதலாவதாக கோவிட் தொற்றாளர் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவினர் அறிவித்திருந்தனர். சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட 52 வயதான ஒருவருக்கே இந்த தொற்று முதல் தடவையாக இலங்கையில் தொற்றியிருந்தது.

அன்று முதல் இலங்கையில் கொரோனா, டெல்டா உள்ளிட்ட பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். கடந்த காலங்களில் இலங்கையில் பரவிய கோவிட் தொற்றில் 100 வீதம், டெல்டா பிறழ்வே பரவியதாக சுகாதார அமைச்சு, பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தியது.

இலங்கையில் சமூகத்திற்குள் பரவியதா ஒமிக்ரோன்

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்த போதிலும், நாட்டிற்குள் இந்த தொற்று பரவியிருக்கக்கூடும் என பிபிசி தமிழிடம் பேசிய சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் மருத்துவர் ஹேமந்த தெரிவித்தார்.

நாட்டில் ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரோன் தொற்றாளர்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இருக்கலாம் என்பதை உறுதியாக கூற முடியும் என அவர் கூறுகின்றார்.

ஒமிக்ரோன் தொற்றை வேறுப்படுத்தி, இல்லாது செய்வதை விட, கொரோனா வைரஸை முழுமையாகவே இல்லாதொழிப்பதே நோக்கம் என அவர் குறிப்பிடுகின்றார்.

கோவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமையினால், நாட்டை முடக்காது, சுகாதார வழிகாட்டியை முழுமையாக பின்பற்றி, தொற்றை குறைப்பதற்கான தேவையே தற்போது காணப்படுகின்றது என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த தெரிவித்தார்.

பாடசாலைகள், அரச அலுவலகங்கள் நாளை முதல் வழமைக்கு

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

இலங்கையில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்திருந்த பின்னணியில், அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நாளை (03) முதல் வழமை போன்று கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் பரவல் காரணமாக, அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்திருந்ததுடன், ஏனையோரை தமது வீடுகளிலிருந்தவாறே கடமையாற்ற அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த உத்தரவு நாளை முதல் தளர்த்தப்பட்டு, அரச ஊழியர்களை வழமை போன்று கடமைகளுக்கு திரும்புமாறு அமைச்சின் செயலாளர், அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கோவிட் பரவல் காரணமாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாத நிலையில், நாளைய தினம் முதல் கல்வி நடவடிக்கைகளும் வழமைக்கு கொண்டு வரப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: