கோட்டாபய நெருக்கடிக்கு உள்ளானால் ஹிட்லர் போல செயல்படுவார்: இலங்கை அமைச்சர் பேச்சு

பட மூலாதாரம், Dilum Amunugama/fb
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அவர் ஹிட்லராகச் செயல்படுவார் என அந்த நாட்டின் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்த நிலையில்; "எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரி அல்ல" எனக்கூறி, இலங்கைக்கான ஜெர்மன் நாட்டுத் தூதர் எதிர்வினையாற்றியுள்ளார்.
'ஹிட்லரைப் போன்ற ஒருவரால் இலங்கை நன்மையடைய முடியும் என்கிற கூற்றை இன்று நான் செவிமடுக்கிறேன். அவ்வாறான குரல்களுக்கு நான் நினைவுபடுத்துவது என்னவென்றால்; மனித துன்பம், கற்பனைக்கு அப்பாற்பட்ட விரக்தியுடன் கூடிய மில்லியன் கணக்கான மரணங்களுக்கு காரணமாக அடோல்ஃப் ஹிட்லர் இருந்தார். நிச்சயமான அவர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியில்லை' என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கைக்கான ஜெர்மன் தூதர் ஹோல்கர் சீபர்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் கூறியது என்ன?
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய இலங்கையின் போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம; "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அவர் ஹிட்லராகச் செயற்படுவார்" எனக் கூறியிருந்தார்.
"கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் ஏதோவொரு அளவில் சர்வதிகார ஆட்சியொன்றை முன்னெடுப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஹிட்லர் போன்று கோட்டாபய ராஜபக்ஷ இருந்தாலும் பரவாயில்லை, அவ்வாறு நடந்தால் நல்லதுதான் என்று பௌத்த மகா சங்கத்தினர் கூறியதையும் நாம் கண்டோம்.
ஆனால், தற்போது அவர் ஹிட்லரைப் போன்று செயற்படாமையே குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏதோவொரு வகையில் அவர் ஹிட்லரைப் போன்று செயற்பட வேண்டும் என, அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு நடக்காததால் அவரைக் குறை கூறுகின்றனர்.
கோட்டாபயவுக்கு ஹிட்லராகும் விருப்பம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் சில பிரிவுகள் செயற்படும் விதத்தைப் பொறுத்து, அவர் ஹிட்லரைப் போன்று செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அவர் ஹிட்லராகச் செயற்படுவார். அப்போது எவரும் குறை சொல்ல மாட்டார்கள்" என திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லராக மாறுவார் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தமைக்கு பௌத்த விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லராக மாறுவார் என - தான் நினைக்கவில்லை என்று கூறியுள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அமைச்சர்கள் பிரபல்யமடைவதற்காகவா இவ்வாறு கூறுகின்றனர் எனவும் கேள்வியெழுப்பினார்.
"ஹிட்லரைப் போன்ற ஒருவராக மாறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர் என யாராவது கூறுவார்களாயின் அவர்களுக்கு விரைவில் மக்கள் பதிலளிப்பார்கள்" என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- பரமபதம் விளையாட்டு: சினிமா விமர்சனம்
- கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?
- இரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில் 'தாக்குதல்' - இஸ்ரேலுக்கு தொடர்பா?
- கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- இந்திய - மியான்மர் எல்லையில் 57 ஆண்டுகள்: பண்பாட்டை மறவாத மணிப்பூர் தமிழர்கள்
- “அனுமன் எங்கள் ஊரில்தான் பிறந்தார்” - கர்நாடகம், ஆந்திர பிரதேசம் இடையே சர்ச்சை
- பிரேசிலில் உருவாகும் பிரும்மாண்ட இயேசு சிலை - என்ன சிறப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












