பரமபதம் விளையாட்டு: த்ரிஷாவின் 60வது படத்தின் சினிமா விமர்சனம்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: த்ரிஷா, நந்தா, ரிச்சர்ட், வேல. ராமமூர்த்தி, ஏ.எல். அழகப்பன், சோனா; ஒளிப்பதிவு: ஜெ. தினேஷ்; இயக்கம்: கே. திருஞானம்; வெளியீடு: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.
கடந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய "பரமபதம் விளையாட்டு" என்ற இந்தத் திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய், தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.
படத்தின் கதை இதுதான்: முக்கியமான அரசியல் கட்சித் தலைவரான செழியன் (வேல ராமமூர்த்தி)உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். உடல்நலம் தேறிவந்த செழியன் திடீரென இறந்துவிடுகிறார். அவரைக் கவனித்துவந்த டாக்டர் காயத்ரிக்கு (த்ரிஷா) இந்த மரணம் தொடர்பாக ஓர் ஆதாரம் கிடைக்கிறது.
அதைக் கொடுக்கும்படி கூறி சிலர், காயத்ரியின் குழந்தையைக் கடத்திவிடுகிறார்கள். யார் செழியனைக் கொலை செய்தது? எதற்காக செய்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.
ஓர் அரசியல் த்ரில்லரை எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், படத்தில் அரசியலும் இல்லை. த்ரில்லும் இல்லை.
தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில் துவக்கக் காட்சிகள் இருப்பதால் சற்று சுவாரஸ்யமாக இருக்குமென நினைத்தால், போகப்போக மோசமான திரைக்கதை, படமாக்கம் ஆகியவற்றால் ரொம்பவுமே சோதிக்கிறார் இயக்குநர்.
கட்சித் தலைவரை யார் கொன்றது என்பது குறித்த ஆதாரம் கதாநாயகிக்குக் கிடைக்கிறது. அதில் என்ன இருக்கிறது, யார் அந்தக் கட்சித் தலைவரைக் கொன்றது என்பதைப் பார்க்காமலேவா நாயகி சுற்றித்திரிவார்?

கதாநாயகியைப் பிடித்துவந்து ஓர் இருட்டு அறையில் அடைத்துவைப்பதும் அதிலிருந்து அவர் தப்பும் காட்சிகளும் ரொம்பவுமே சுமாராக, எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகின்றன. படம் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது டாக்ஸி ட்ரைவராக அறிமுகமாகும் ஒருவர் நகைச்சுவை என்ற பெயரில் பேசும் வசனங்கள், அதற்கு எதிரான உணர்வையே ஏற்படுத்துகின்றன.
பொதுவாக காட்சிகள் நீளமாக இருக்கும். இந்தப் படத்தில் 'ஷாட்'களே நீளமாக இருக்கின்றன.
த்ரிஷாவுக்கு இது 60வது படம். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என்றவுடன் கதையைக் கேட்காமல் ஒப்புக்கொண்டதைப் போலத் தெரிகிறது. சில இடங்களில் அவரது நடிப்பு சற்றுப் பரவாயில்லை. நந்தா, வேல ராமமூர்த்தி, சாம் போன்ற சில நடிகர்களைத் தவிர படத்தில் வரும் எல்லோருமே சோதிக்கிறார்கள். அதிலும் ரிச்சர்டின் பாத்திரம் இருக்கிறதே.. கேட்கவே வேண்டாம்.
சமகால அரசியலின் ஒரு முக்கியமான சம்பவத்தை எடுத்துக்கொண்டு படத்தை உருவாக்க நினைத்த இயக்குநர், மற்ற விஷயங்களில் கோட்டைவிட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
- கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?
- இரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில் 'தாக்குதல்' - இஸ்ரேலுக்கு தொடர்பா?
- கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- இந்திய - மியான்மர் எல்லையில் 57 ஆண்டுகள்: பண்பாட்டை மறவாத மணிப்பூர் தமிழர்கள்
- “அனுமன் எங்கள் ஊரில்தான் பிறந்தார்” - கர்நாடகம், ஆந்திர பிரதேசம் இடையே சர்ச்சை
- பிரேசிலில் உருவாகும் பிரும்மாண்ட இயேசு சிலை - என்ன சிறப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












