இலங்கை: தமிழர் பகுதிகள் ராணுவ மயமாக்கப்படுகிறதா? - செந்தில் தொண்டமான் பதில்

இலங்கையில் தமிழர் பகுதிகள் ராணுவமயமாக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்ஜன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாகத் தமிழகத்தில் வெளியிடப்படும் கருத்தானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.

இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியில் இதனைக் கூறினார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவத்தைப் போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களிலும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு ஆளும் கட்சியுடன் தாம் இணைந்து செயற்படுவது பெரிய ஒத்துழைப்பாக அமைகின்றது எனவும் செந்தில் தொண்டமான் கூறுகின்றார்.

இலங்கையில் தமிழர் பகுதிகள் ராணுவமயமாக்கப்படுகிறதா?
படக்குறிப்பு, செந்தில் தொண்டமான்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக நினைவூட்டிய செந்தில் தொண்டமான், தான் சார்ந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அப்போது ஆதரவு வழங்கிய காரணத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி அந்த மீனவர்களை விடுதலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் கூறினார்.

அதேபோன்று அந்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை எந்தவித வழக்குகளும் இன்றி விடுதலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக அவர் நினைவூட்டினார்.

இலங்கையில் தமிழர் பகுதிகள் ராணுவமயமாக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் காரணம், தாம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் கைகோர்த்து இருந்தமையே என அவர் கூறுகின்றார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அடிக்கடி கைது செய்யப்படுவதனால், தமிழக மீனவர்களும், இலங்கை மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்ச்சியாகத் தொடர்புகள் ஏற்படுவதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

இனிவரும் காலங்களில் கூட தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில், இலங்கையில் ஆட்சியிலுள்ளவர்களை ஆதரித்தால் மாத்திரமே அவர்களை விடுதலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் கூறுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருந்த சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளைக் கூட விடுவிக்க முடியாத நிலைமை காணப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.

எனினும், தாம் ஆட்சியிலுள்ள தரப்பினருடன் கைக்கோர்த்துள்ளமையினால், தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதியின் இந்திய பயணம்

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்தியாவுடன் சிறந்த நட்புறவைப் பேண வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதலாவது பயணமாக இந்தியா சென்றார் எனச் செந்தில் தொண்டமான் கூறுகின்றார்.

கோட்டாபய

பட மூலாதாரம், Getty Images

பல நாடுகளிலிருந்து ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் வந்த போதிலும், இந்தியாவைத் தெரிவு செய்வதற்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பக்கத்து நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு எந்நேரமும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு சிறந்த முறையில் அமையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

உலகிலுள்ள எந்த நாடுகள் உதவிகளை வழங்க முன்வந்தாலும், இந்தியாவின் உதவித் திட்டங்களே இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குப் பெருமை என அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியாவிற்கு முன்னுரிமை அளித்துள்ளமை தமக்கும், தமது சமூகத்திற்கும் பெருமை எனச் செந்தில் தொண்டமான் கூறுகின்றார்.

இந்திய வீடமைப்பு திட்டத்தில் முறைகேடா?

இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் எந்தவித முறைகேடுகளும் இடம்பெறவில்லை எனச் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

வீடமைப்பு திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தினால் கட்டப்பட்ட வீடமைப்பு திட்டத்திலேயே முறைகேடு ஏற்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் கூறுகின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: