மகராஷ்டிர அரசியல்: முதல்வரான உத்தவ் தாக்கரே – பாஜவுடன் இணைவாரா ராஜ் தாக்கரே?

பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜனதா கட்சி உடனான தனது கூட்டணியை உடைத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவின் முதலமைச்சராகியுள்ளார் சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே.
இதன்மூலம் ஒரு வழியாக மகாராஷ்டிராவின் முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. ஆனால் நவநிர்மான் சேனை மற்றும் ராஜ் தாக்கரேயின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜ் தாக்கரே தற்போது பாஜகவுடன் செல்ல வாய்ப்புள்ளது என்கிறார் பிபிசி இந்திய மொழிகளின் டிஜிட்டல் ஆசிரியர் மிலிந்த் கண்டேகர்.
"ராஜ் தாக்கரேவின் நவநிர்மான் சேனை தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவர்களுக்கு இதுவரை மாநில அரசில் பங்கு கிடைக்கவில்லை. நவநிர்மான் சேனை தொடங்கப்பட்டபோது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது சிவசேனை ஆட்சி செய்யப்போகிறது. எனவே நவநிர்மான் சேனை பாஜகவுடன் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர்களை ஏற்றுக் கொள்ள பாஜக தயாராக உள்ளதா என்பதே கேள்வி," என்கிறார் மிலிந்த்.
"மும்பைக்கு வெளியேவும் ராஜ் தாக்கரேயின் செல்வாக்கு பரவியுள்ளது. மும்பை மற்றும் நாசிக்கில் அவருக்கு செல்வாக்கு அதிகம். ஆனால் அவரின் கட்சிக்கு மாநில அளவில் எந்த தாக்கமும் இல்லை. எனவே ராஜ் தாக்கரேவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்று தற்போது சொல்ல முடியாது. தேர்தலின்போது வேண்டுமானால் இந்த கேள்வி மீண்டும் எழுப்பப்படலாம். தற்போது ராஜ் தாக்கரேவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியில்லை," என்று மேலும் தெரிவிக்கிறார் மிலிந்த்.
’சவாலாகவும் இருப்பார்’
தங்களுக்கான வாய்ப்பு வரும்போது ராஜ் தாக்கரே சிவசேனைக்கு சவாலாக இருப்பார் என்கிறார் பத்திரிகையாளர் தவல் குல்கர்னி.
"சிவசேனைக்கு தடைகளை உருவாக்கினால் அப்போது ராஜ் தாக்கரேவுக்கு பாஜகவின் ஆதரவு கிடைக்கலாம். கொள்கை ரீதியாக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்றும் வேறுபட்டவை. எனவே சிவசேனை தனது மராட்டிய அடையாளத்தையும், இந்துத்துவ கொள்கையையும் தனது ஆட்சியில் முன்வைக்க முடியாது. எனவே சிவசேனை தனது மராட்டிய அடையாளத்தை தளர்த்தால், நவநிர்மான் சேனை அதனை கையில் எடுத்து சிவசேனைக்கு சவாலாக இருக்கும்," என்கிறார் தவல் குல்கர்னி

பட மூலாதாரம், Getty Images
"சட்டமன்ற தேர்தலில் ராஜ் தாக்கரே பெரிதும் சோபிக்கவில்லை என்றாலும், 2009ஆம் அண்டில் அவரது கட்சியில் 13 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால் 2014ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டில் அவரின் கட்சியில் ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளார். இருப்பினும் ராஜ் தாக்கரே மாதிரியான வசீகரமான தலைவர் எந்த ஒரு வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்வார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் அதேயேதான் வட இந்தியர்களா அல்லது மராட்டிய அடையாளமா என்ற கேள்வி வரும்போது பயன்படுத்திக் கொண்டார். அந்த வரலாறு திரும்புமா என நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்கிறார் குல்கர்னி.
`ராஜ் தாக்கரே மேலும் உழைக்க வேண்டும்`
ராஜ் தாக்கரே மாநில அரசியலில் சோபிக்க வேண்டும் என்றால் அவர் மேலும் உழைக்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் விஜய் சோர்மாரே.
"ராஜ் தாக்கரே கட்சியில் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே இருப்பதால் மக்களவைத் தேர்தலில் அவரால் எந்த ஒரு பங்களிப்பையும் அளிக்க முடியவில்லை. தற்போதைய சூழலில் அவர் யாருக்கு ஆதரவளிக்கிறார் என்பது முக்கியம். எனவே மாநில அரசியலில் சோபிக்க வேண்டும் என்றாலோ அல்லது அவரின் கட்சி நிலைக்க வேண்டும் என்றாலோ, அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை."
"ராஜ் தாக்கரே தனது கட்சியை வலுப்படுத்த ஏதும் உழைக்கவில்லை. தேர்தல் சமயங்களில் மட்டும் அவர் பேரணியை ஒருங்கிணைப்பார் அரசாங்கத்தை விமர்சிப்பார். ஆனால் ஓர் அரசியல் கட்சி வளர வேண்டும் என்றால் ஒருங்கிணைப்பு அவசியம் அதை அவர் செய்ய தவறிவிட்டார்."

பட மூலாதாரம், Getty Images
"கடந்த ஐந்து வருடங்களில் அவருக்கு பல பெரிய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதை அவர் பெரிதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அரசியலை பொறுத்தவரை குறிப்பிட்ட சில நேரத்தில் அவருக்கு தேவையான விஷயம் குறித்து பேசுவார் அல்லது அவரின் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவர்," என்கிறார் சோர்மாரே.
ராஜ் மற்றும் உத்தவ் தாக்கரே சேருவதற்கு வாய்ப்புள்ளதா?
உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார் ராஜ் தாக்கரே. சரத் பவார், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இரண்டு பேருக்கும் நெருக்கமானவர். எனவே இரண்டு சகோதரர்களும் ஒன்றாக சேருவர் என்ற பேச்சுக்களும் வலம் வருகின்றன. ஆனால் முத்த பத்திரிகையாளரான அபிஜித் ப்ரமானாத்கர் இந்த ஊகங்களை மறுக்கிறார்.
"அரசியல் நிலை என்பதும் குடும்ப சந்தோஷம் என்பதும் இருவேறு விஷயம். சில தினங்களுக்கு முன்பு வோர்லி தொகுதியிலிருந்து உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார் என்று அறிவித்தபிறகு ராக் தாக்கரே தனது கட்சியில் இருந்து வேட்பாளரை நிறுத்தவில்லை. ராஜ் தாக்கரே வேண்டுமென்றே தாக்கரே குடும்பத்திற்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்திவிட்டார் என்ற பேச்சுக்கு அவர் ஆளாக விரும்பவில்லை."

பட மூலாதாரம், Getty Images
"மேலும் ராஜ் தாக்கரே, குடும்பம் மற்றும் அரசியல் ஆகிய இரண்டையும் வெவ்வேறாகதான் வைத்திருந்தார். அவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து தனது மகன் அமித்தின் திருமண பத்திரிகையை வழங்கினார். உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே மற்றும் ராஷ்மி தாக்கரே அந்த திருமண விழாவிற்கு சென்றனர். தற்போது ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். ஆனால் அவர்கள் அரசியல் ரீதியாக இணைவார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை," என்கிறார் அபிஜித் ப்ரமானாத்கர்
நவநிர்மான் சேனை,வின் நிலை என்ன?
நவநிர்மான் சேனை, ’மராட்டி மனூஸ்’ (மராட்டிய மனிதன்) நலனுக்காக மகராஷ்டிர தர்மம் என்ற தனது பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே தெரிவித்தார்.
"மேலும் நவநிர்மான் சேனை பாஜகவுடன் சென்றுவிடும் என இப்போதே ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம். தேசியவாத காங்கிரஸ், சிவசேனை மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்தால் நவநிர்மான் சேனை பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என பொருள் இல்லை. தற்போதைய அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்துவிட்டு நாங்கள் எதிர்கால முடிவுகளை எடுப்போம்."
"மராட்டிய மக்களுக்கு ஆதரவான போக்கை இந்த அரசு எடுக்கிறதா என்பதை பொருத்தே எங்களது எதிர்கால முடிவுகள் இருக்கும்."
"உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் இணைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நவநிர்மான் சேனை மற்றும் சிவசேனை ஆகிய இரண்டு கட்சிகளின் கொள்கையும் வெவ்வேறானது. மராட்டி மக்களின் நலன் குறித்து சிவசேனை பேசமட்டும்தான் செய்யும். ஆனால் நவநிர்மான் சேனை கட்சியினர் மராட்டி மக்களின் நலனுக்காக போராடி சிறைக்கு சென்றுள்ளனர். மராட்டி மக்களின் நலன்கள் குறித்த தனது மகாராஷ்டிர தர்ம பாதையில் நவநிர்மான் சேனை தொடர்ந்து பயணிக்கும்," என்றார் சந்தீப் தேஷ்பாண்டே
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












