தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல் ராஜபக்‌ஷ அறிக்கை

நமால் ராஜபக்‌ஷ

பட மூலாதாரம், NAMAL RAJAPAKSHA/FACEBOOK

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமால் ர

பட மூலாதாரம், NAMAL RAJAPAKSHA/FACEBOOK

தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்களை பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை தான் அவதானித்ததாகவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

குறித்த தமிழக அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, அவற்றில் வேறேதும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர, தமிழக அரசியல் தலைவர்கள் வேறென்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்துள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ததையும் அவர் தனது அறிக்கையில் நினைவூட்டினார்.

இந்த விஜயத்தின் போது குறித்த குழுவினர் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சிநேகப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

நமால்

பட மூலாதாரம், NAMAL RAJAPAKSHA/FACEBOOK

இந்த விஜயத்தில் தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டிருந்த அதேவேளை, தமது நிலைப்பாட்டையும் அவர் தெளிவுற அறிந்துக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு தமது நிலைப்பாட்டை அறிந்து தொல்.திருமாவளவன் இன்று இவ்வாறு சந்தர்ப்பாத அறிக்கையை விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ கூறுகின்றார்.

தமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து, நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது என நாமல் ராஜபக்ஷ அனைத்து தமிழக அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தான் தமிழக அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :