ஐபிஎல்: ரிஷப் பந்த் செய்த 'பெரிய' தவறு - பிளே ஆஃப்க்குள் நுழைந்த ஆர்சிபி

கிரிக்கெட் - ஐ.பி.எல்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்

ரிஷப் பந்த் ஏன் அந்த தவறை செய்தார்? சக வீரர்களுக்கும் இதில் பங்குள்ளதா? ஜெயிக்க வேண்டிய போட்டியை இப்படியா கோட்டை விடுவது? தோல்விக்கு பந்த்தான் முழு பொறுப்பு என சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள், வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

'இந்த நேரத்தில்தான் நாம் காமன் சென்ஸை பயன்படுத்த வேண்டும்' என ரிஷப் பன்டின் தவறை சுட்டிக்காட்டும் விதமாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ரிஷப் பந்த் என்ன செய்தார்?

மும்பை வான்கடே மைதானத்தில் பிளே ஆஃப்க்குள் நுழையப்போகும் 4வது அணியை நிர்ணயிப்பதற்கான லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தினால் டெல்லி பிளே ஆஃப்க்குள் நுழையும். ஒருவேளை வெற்றியை நழுவ விட்டால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள பெங்களுருவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.

இப்படியொரு வாழ்வா சாவா நிலைமையில்தான் மும்பையுடன் விளையாடியது டெல்லி அணி. முதலில் பேட் செய்த டெல்லி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது.

கிரிக்கெட் - ஐ.பி.எல்

பட மூலாதாரம், BCCI/IPL

160 ரன்கள் எடுத்தால் வெற்று எனும் இலக்குடன் களமிறங்கியது மும்பை. இஷான் கிஷன் 48 ரன்களிலும் டெவால்ட் பிரிவிஸ் 37 ரன்களிலும் விடைபெற்றனர். 33 பந்துகளில் மும்பை வெற்றிபெற 65 ரன்கள் தேவைப்பட்டன. இந்த சமயத்தில்தான் டெல்லி அணி அந்த தவறை செய்தது. மும்பை வீரர் டிம் டேவிட் எதிர்கொண்ட முதல் பந்தே பேட்டின் எட்ஜில் பட்டு கீப்பர் ரிஷப் பந்த் வசம் பிடிபட்டது. ஆனால் நடுவர் தபான் ஷர்மா அவுட் கொடுக்கவில்லை.

விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேப்டன் ரிஷப் பந்த்தும் சக வீரர்களும் ரிவியூ எடுக்காமல் இதனை விட்டு விட்டனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், டெல்லி வசம் 2 ரிவியூக்கள் மீதம் இருந்தன. உண்மையில் டிம் டேவிட் முதல் பந்திலேயே டக் அவுட். ரிபிளேயில் பந்து எட்ஜில் பட்டது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் டெல்லி அணி ரிவியூ எடுக்கத் தவறியதால் தற்போது பிளே ஆஃப் வாய்ப்பையே இழந்து நிற்கிறது. காரணம் டெல்லி வசம் இருந்த போட்டியை வெறும் 11 பந்துகளில் பிடுங்கிவிட்டார் டிம் டேவிட். 4 சிக்சர், 2 பவுண்டரிகள் என அவர் விளாசிய 34 ரன்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பெங்களூருவை பிளே ஆஃப் சுற்றுக்குள் அனுப்பி வைத்திருக்கிறது.

கிரிக்கெட் - ஐ.பி.எல்

பட மூலாதாரம், BCCI/IPL

ஆர்.சி.பிக்கு ஆதரவாக முழக்கம்

பெங்களூரு பிளே ஆஃப்க்குள் நுழைவது முற்றிலும் மும்பையின் கையில் இருந்ததால் வான்கடேவில் பெங்களூரு ரசிகர்களும் திரண்டிருந்தனர். மும்பை அணி பேட்டிங்கின்போது ஆர்.சி.பிக்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினர். மும்பை அணியின் வெற்றியை விராட் கோலி உள்பட பெங்களூரு வீரர்களும் தங்கள் முகாம்களில் கொண்டாடியுள்ளனர்.

கிரிக்கெட் - ஐ.பி.எல்

பட மூலாதாரம், BCCI/IPL

கடந்த ஆண்டு குவாலிஃபயர் ஆட்டத்திலும் ரிஷப் பந்த் செய்த ஒரு தவறால் அந்த அணி வெற்றியை கோட்டைவிட்டது. கடைசி ஓவரில் ரபாடாவுக்கு பதில் டாம் கரனுக்கு ரிஷப் பந்த் ஓவர் வழங்கியதை போன்றே, இந்த முறையும் டிம் டேவிட்டிற்கு ரிவியூ எடுக்காமல் பந்த் செயல்பட்டிருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் விமர்சித்துள்ளார்.

'ஏதோ நடந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். ஆனால் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த அனைவருக்கும் பந்து பேட்டில் பட்டதா என உறுதியாக தெரியவில்லை. நாம் ரிவியூ செய்ய வேண்டுமா என்று நான் சக வீரர்களிடம் கேட்டேன். ஆனால் இறுதியில் ரிவியூ செய்ய வேண்டாம் என முடிவு செய்தோம்' என போட்டி முடிந்த பிறகு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் டெல்லி கேப்டன் ரிஷப் பந்த்.

நடப்பு தொடரில் டெல்லி அணி சிறப்பாக செயல்பட்டாலும் சிறிய தவறுகளால் பெரிய வாய்ப்புகளை இழந்திருப்பது ரசிகர்களையும் அதிருப்தி அடையச் செய்திருக்கிறது.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: