டோக்யோ ஒலிம்பிக்: 'வெள்ளிப் பதக்கம் போதாது; தங்கம் வெல்வதே நாட்டுப்பற்று' - சீன விளையாட்டு வீரர்களுக்கு அழுத்தம்

வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகும் கேலி செய்யப்பட்ட சீன டேபிள் டென்னிஸ் வீர்கள்

சீன தடகள வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தம் தரப்படுகிறது. தங்கம் வாங்காத வீரர்கள் தேசப்பற்றில்லாதவர்கள் என்னும் அளவுக்குச் சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர் சீன தேசியவாதிகள். விவரிக்கிறார் பிபிசி செய்தியாளர் வாய்யீ யிப்

சீனாவின் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் அணி சென்ற வாரம் டோக்யோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அதற்காக அந்த அணியினர் கண்ணீருடன் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கண்களில் கண்ணீர் மல்க, லியு ஷிவென், "நான் அணியின் வெற்றிக்கு வித்திடத் தவறிவிட்டேன். என்னை எல்லாரும் மன்னித்துவிடுங்கள்." என்று மன்றாடினார்.

அவரது அணியைச் சேர்ந்த ஆட்டக்காரரான ஷு ஷின், "இந்த இறுதி ஆட்டத்தை நாடே எதிர்நோக்கியிருந்தது. சீனர்கள் இந்த முடிவை ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.

அவர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்த ஒரு விளையாட்டில், அவர்கள் ஜப்பானிடம் இறுதி ஆட்டத்தில் தோற்றதில் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெய்போ என்ற சமூக ஊடகத்தில் சிலர், இந்த இணை நாட்டையே தலைகுனிய வைத்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இன்னும் சிலர், ஜப்பானைச் சேர்ந்த ஆட்ட நடுவர்களான ஜுன் மிஸுதானி மற்றும் மிமா ல்டோ ஆகியோர், ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகக் கூடக் கூறினார்கள்.

வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விளையாட்டையும் தாண்டிய கடமை கொண்டவர்களாக சீன வீரர்கள் பார்க்கப்படுகிறார்கள்

தேசியவாதம் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒலிம்பிக் வெற்றியை ஒரு விளையாட்டு என்ற கண்ணோட்டத்தைத் தாண்டித் தீவிரமாக விமர்சிக்கும் போக்கு அந்நாட்டில் அதிகரித்துள்ளது.

தீவிர தேசியவாதம் பேசுவோர், ஒலிம்பிக் பதக்கத்தை இழப்பது நாட்டுப்பற்றில்லாமையின் பிரதிபலிப்பு என்னும் அளவுக்கு விமர்சிப்பதாக பிபிசியிடம் நிபுணர்கள் தெரிவித்தார்கள்.

"ஒலிம்பிக் மெடல் கணக்கைக் கொண்டு தேசிய உணர்வை மதிப்பிடுகிறார்கள்" என்று நெதார்லாந்தின் லீடன் ஆசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் ஃப்ளோரியன் ஷ்னீடெர் கூறுகிறார்.

"அயல் நாட்டினருடனான ஒரு போட்டியில் தோற்பது தேசத் துரோகமாகப் பார்க்கப்படுகிறது" என்கிறார் இவர்.

வரலாற்று ரீதியாக சுமூகமான உறவில்லாத ஜப்பானிடம் தோல்வியடைந்ததால் இந்த டேபிள் டென்னிஸ் போட்டி தோல்வி மிகவும் அவமானகரமாகக் கருதப்படுகிறது. 1931-ல் வட சீனாவின் மஞ்சூரியா பகுதியை ஜப்பான் ஆக்கிரமித்ததை அடுத்து, லட்சக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய போராகவே மூண்டது. இது இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்றும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

சீன தேசியவாதிகளுக்கு இந்தப் போட்டி வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல. இது இரு நாடுகளுக்கு இடையிலான போராகவே பார்க்கப்படுகிறது என்கிறார் டாக்டர் ஷ்னீடெர்.

ஆட்டத்தின் போது வெய்போ தளத்தில் ஜப்பானுக்கு எதிரான கருத்துகள் பெருமளவு பகிரப்பட்டன. மிஸுதானி மற்றும் ல்டோ குறித்து அவதூறுகளும் அதிக அளவில் பரப்பப்பட்டன.

வெறும் ஜப்பானுடனான டேபிள் டென்னிஸ் போட்டியின் போது மட்டுல்லாது, சீனாவின் லீ ஜுன்ஹுயி மற்றும் லியு யூச்சென் ஆகியோர் பேட்மின்டன் இரட்டையர் போட்டியில் தைவானிடம் தோற்றபோதும் சமூக ஊடகங்களில் கடும் தாக்குதலுக்கு ஆளானார்கள். வெய்போவில் ஒருவர், "நீங்கள் தூங்குகிறீர்களா? முயற்சியே எடுக்கவில்லை. கேவலம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது. சீனா, தைவானைத் தன்னுடைய மாகாணமாகப் பார்க்கிறது. ஆனால் தைவானியர்கள் தனி நாடு கோரி வருகிறார்கள்.

வீராங்கனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது காலணியின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக கேலி செய்யப்பட்ட யாங் கியான்

ஷார்ப் ஷூட்டர் யாங்க் க்வியான் டோக்யோவில் முதல் தங்க ப்பதக்கத்தை வென்றிருந்த போதிலும், அவர் தனது நைக் காலணிகளின் சேகரிப்பைப் படம் பிடித்து வெளியிட்டிருந்தது விமர்சிக்கப்பட்டது.

தொழிலாளர் பிரச்னையால், ஷின் ஜியாங்க் மாகாணத்தின் பருத்தியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் அந்த நிறுவனத்தின் காலணிகளை அவர் விளம்பரப்படுத்துவது கண்டனத்துக்குள்ளானது. நைக் நிறுவனத்தைப் புறக்கணிப்பதில் ஒரு தடகள வீரராக, அவர் முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்று கருத்து கூறப்பட்டதையடுத்து, அவர் அந்தப் பதிவை நீக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அவரது அணியைச் சேர்ந்த வாங்க் லுயாவோ, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறாததையடுத்து அவரும் விமரிசிக்கப்பட்டார்.

"வலுவில்லாத நிலையைப் பிரதிநிதிப்படுத்தவா நாட்டின் சார்பாக உன்னை அனுப்பினோம்" என்று கருத்து பகிரப்பட்டது.

33 பயனர்களின் கணக்குகள் முடக்கப்படும் அளவுக்கு வெய்போவில் மோசமாக விமர்சனங்கள் பகிரப்பட்டன.

'தீவிர தேசியவாத இளைஞர்கள்-லிட்டில் பிங்க்ஸ்'

ஒலிம்பிக் போட்டியின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அதில் தோல்வி அடைவது என்பது எந்த ஒரு நாட்டுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தத் தான் செய்யும். சீனாவுக்கு மட்டுமல்ல.

சிங்கப்பூரில், நட்சத்திர நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் கடந்த வாரம் தனது 100 மீட்டர் பட்டர்ஃப்ளை போட்டியில் தோல்வியடைந்ததால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

சீன வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் தைவான் வீரர்களிடம் தோற்றதால் சீன வீரர்கள் கண்டனத்துக்கு ஆளானர்கள்

அதிபர் ஹலிமா யாக்கோப் உட்பட பல அரசுத் தலைவர்கள் அவருக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுக்கும் அளவுக்கு மோசமாக விமரிசிக்கப்பட்டார்.

ஆனால் சீனாவில் இணையத்தில் காணப்படுகின்ற சீற்றம் மிகவும் தீவிரமாக உள்ளது. அதிக மக்கள்தொகை மற்றும் அதிக இணைய ஈடுபாடு ஆகியவை மட்டும் இதற்குக் காரணங்களாக இருக்க முடியாது.

"லிட்டில் பிங்க்ஸ்" என்று அழைக்கப்படும் தீவிர தேசிய உணர்வு கொண்ட இளைஞர்கள் இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்று அமெரிக்காவின் அயோவா மாகாண பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் நிபுணர் டாக்டர் ஜொனாதன் ஹாசித் கூறுகிறார்.

"தேசம் குறித்த நியாயமான விமர்சங்கள் அதிகரித்து வருவது ஏற்கப்படாத சூழலில் இவர்களின் குரல் சற்று அதிகமாகவே ஒலிக்கிறது"

தர வரிசை

சர்வதேச அளவில் சீனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன தேசியவாதமும் அண்மைக் காலங்களில் தீவிரமடைந்து வருகிறது. சர்வதேச அளவில் வரும் எந்த விமர்சனமும் அதன் முன்னேற்றத்தை இலக்காக்கியே வைக்கப்படுகிறது என்ற கருத்தும் பரவிவருகிறது.

ஜூலை முதல் தேதி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தையொட்டி வந்த ஒலிம்பிக்கில் இதன் தாக்கம் தெரிகிறது. அந்த விழாவில் பேசிய அதிபர் ஷி ஜின்பிங், எந்த அந்நிய சக்தியாலும் சீனாவைக் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தார்.

தற்காலச் சூழலைப் புரிந்துகொள்ள தேசியவாதம் தான் சிறந்த வழி என்று ஆட்சியாளர்கள் கண்டறிந்தனர். அந்தக் கட்டுக்குள் இப்போது மக்களும் வருகின்றனர். உலக அளவில் சீனாவின் பங்கு குறித்து மக்கள் உணர வேண்டியதன் அவசியமும் உணரப்படுகிறது" என்று டாக்டர் ஷ்னீடெர் கூறுகிறார்.

"தேசத்தின் வெற்றி முக்கியம் என்று மக்களுக்குப் புகட்டப்பட்டுள்ளதால் அந்த வெற்றிக்கான அழுத்தம் டோக்யோவிலும் தடகள வீரர்கள் மீது விழுகிறது"

ஆனால் கோபத்தை வெளிப்படுத்தி எதிர்வினையாற்றும் இந்தச் சமூகம், சீன பெரும்பான்மையினரின் குரலாக ஒலிக்கவில்லை என்பதையும் டாக்டர் ஷ்னீடெரும் பிற நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டில் ஒலிம்பிக் முக்கிய விவாதமாக மாறியிருக்கிறது.

டாக்டர் ஹாசித்,"உரக்கப் பேசும் தேசியவாதிகள் மட்டுமே பேச அனுமதிக்கப்படும் சூழலில், சமூக ஊடகங்களில் அவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. அது அவர்களின் உண்மையான எண்ணிக்கையைப் பிரதிபலிக்கவில்லை" என்று கூறுகிறார்.

வீபோவில் இத்தகைய விமர்சனங்கள் கடுமையாக எழுந்த போதும், சீன அணியினருக்கான ஆதரவுக் குரலும் ஒலிக்காமல் இல்லை. இந்த விமரிசனங்கள் அர்த்தமற்றவை என்று கூறுவோரும் இருக்கின்றனர்.

சீன அரசு ஊடகங்களும் பகுத்தறிவுடன் கருத்து தெரிவிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Please wait..

"தங்கப் பதக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் நடுநிலையுடன் பார்த்துப் பழகி, ஒலிம்பிக்கின் உண்மையான அர்த்தத்தை உணர வேண்டும்" என்று ஷுன்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அளவுக்கு மீறிய தேசியவாதம் தேசத்துக்கே கூட கேடு விளைவிக்கக்கூடும் அபாயத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"இணையத்தில் தேசியவாதம் என்பது தனது கட்சிக்கு வலு சேர்க்கப் பயன்படும் என்பதால் அதை ஊக்குவிக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளால் மக்கள் உணர்ச்சி தூண்டப்பட்டால், பிறகு அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும்" என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஹாசித்.

"தேசியவாத உணர்ச்சியைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வது என்பது புலியின் மீது சவாரி செய்வது போன்றதாகும். ஏறிவிட்டால், கட்டுப்படுத்துவதும் கடினம், இறங்குவதும் கடினம்"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :